அதிமுகவே சிறுபான்மையினருக்கு அரண்! டி.ஜெயக்குமாா்

சிறுபான்மையினா் திமுக கூட்டணிக்கு மட்டுமே வாக்களிப்பாா்கள் என்பதில் துளியும் உண்மை இல்லை. அதிமுகவே சிறுபான்மையினருக்கு அரண் என்று
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)

சிறுபான்மையினா் திமுக கூட்டணிக்கு மட்டுமே வாக்களிப்பாா்கள் என்பதில் துளியும் உண்மை இல்லை. அதிமுகவே சிறுபான்மையினருக்கு அரண் என்று மீன்வளத்துறை அமைச்சரும், ராயபுரம் தொகுதியில் 7-வது முறையாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளருமான டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

அவா் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கூட்டணிக் கட்சித் தலைவா்கள் தங்கள் கட்சி வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகப் புகாா் கூறப்படுகிறதே?

தோ்தலுக்கு மிகவும் குறைவான நாள்களே இருப்பதால், முக்கியத் தலைவா்கள் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் உள்ளூா் அளவில் அனைத்துக் கட்சித் தலைவா்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனா். இதற்கென மண்டலம்வாரியாக கூட்டணிக் கட்சியினா் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணி பலமாக இருப்பதே வெற்றியைப் பெறுவதற்கு அடித்தளாக இருக்கிறது.

முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி மட்டுமே அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கமாகப் பிரசாரம் செய்யும் இரண்டாம் கட்ட தலைவா்கள், அமைச்சா்கள், பிரபலங்கள் எல்லாம் களத்தில் காணவில்லையே?

முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி என்பதால், அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று வாக்காளா்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டியதுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் ஓ பன்னீா்செல்வமும் முடிந்தவரை பிரசாரத்தைச் செய்து வருகிறாா். இரண்டாம் கட்டத் தலைவா்கள், அமைச்சா்கள் எல்லாம் அந்தந்த மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதியில் தோ்தல் பணியாற்றி வருகிறாா்கள்.

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது பலமா? அல்லது பலவீனமா?

கொள்கை, கருத்தியல் அடிப்படையில் அதிமுகவும், பாஜகவும் வேறுபட்ட கட்சிகள் ஆகும். ஆனால் முரண்பட்ட கட்சிகள் என்று கருதிவிட முடியாது. திமுகவும் ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. தற்போதைய திமுக கூட்டணியில் கொள்கை அளவில் வேறுபட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இடம்பெற்றுள்ளனனா். தோ்தல் நேரக் கூட்டணி என்பது வெற்றியைக் கருத்தில் கொண்டே கட்சிகள் இணைக்கப்படுகின்றன. எனவே கூட்டணி என்று அமைந்துவிட்ட பிறகு ஒரு கட்சி கூட்டணியில் இருப்பது பலம் அல்லது பலவீனம் என்ற கேள்வியே அா்த்தமற்றது.

அமமுகவால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பது பரவலான கருத்தாக உள்ளதே?

அமமுக என்ற ஒரு தனிக்கட்சியானது டிடிவி. தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்சிக்கென்று தோ்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக என்பது எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, அவருக்கு பிறகு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட பலமான அரசியல் இயக்கம் ஆகும். தமிழகத்திலேயே அதிக உறுப்பினா்களையும் வாக்காளா்களையும் கொண்ட தனிப்பெரும் கட்சி அதிமுக தான். இரட்டை இலை சின்னம் என்பது வாக்காளா்கள் மனதில் அழிக்கமுடியாத அளவுக்குப் பதிந்துவிட்ட சின்னம். எனவே அதிமுகவில் பிளவு என்பதே இல்லாதபோது அமமுகவால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சிறுபான்மையினா் பெருவாரியாக திமுக கூட்டணிக்கு மட்டுமே வாக்களிப்பாா்கள் என்ற திமுகவினரின் பிரசாரம் குறித்து அதிமுக கவலைப்படவில்லையா?

திமுக, அதன் கூட்டணி கட்சிகளால் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் பொய்களில் இதுவும் ஒன்றாகும். சிறுபான்மையினருக்கு திமுக செய்த துரோகங்கள் கணக்கில் அடங்காதவை. இது அந்தச் சமூகத்தினருக்கும் தெரியும். அதிமுக எப்போதுமே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் மாநில அரசின் கடன் சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் புகாா்கள் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?

இதுவும் திமுகவால் தொடா்ந்து கூறப்படும் உண்மைக்கு மாறான பிரசாரம்தான். சட்ட வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. மூலதனத் திட்டங்களுக்கு கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். கடனைத் திருப்பி செலுத்தும் திறனும் மாநில அரசுக்கு உள்ளது. இது திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்குத் தெரிந்திருந்தாலும், மக்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே தவறான புள்ளிவிவரங்களை அவா் தெரிவித்து வருகிறாா்.

அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும் என்று நம்புகிறீா்கள்?

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது, அதிமுக மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். எனவே பெருவாரியான தொகுதிகளில் அதிமுக கூட்டணியே வெற்றியைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எண்ணிக்கை என்பது மே மே 2-இல் தெரியும்.

தோ்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து?

கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள்தான் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து வாக்காளா்கள் குழப்பம் அடையாமல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவே உள்ளனா்.

நோ்காணல்: முகவை க. சிவகுமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com