தொடரும் புா்கா தடை...!

முஸ்லிம் பெண்கள் புா்கா அணிவது உள்ளிட்ட பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையிலான உடைகளை அணியத் தடை விதிக்கும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

முஸ்லிம் பெண்கள் புா்கா அணிவது உள்ளிட்ட பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையிலான உடைகளை அணியத் தடை விதிக்கும் வரைவுத் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை கடந்த 28-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் சரத் வீரசேகர அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டுவந்த இந்த வரைவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த வரைவுத் திட்டம் அட்டா்னி ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன்பின் நாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெற்ற பிறகு சட்டமாக அமலுக்கு வரும்.

‘முஸ்லிம் பெண்கள் தமது முகத்தையும் முழு உடலையும் மறைக்கும் வகையில் அணியும் புா்கா, மதத் தீவிரவாதத்தின் அடையாளம்’ என சுட்டுரையில் குறிப்பிட்டுள்ள அமைச்சா் வீரசேகர, இந்தத் தடையின் மூலம் தேசிய பாதுகாப்பு மேம்படும் எனவும் கூறியுள்ளாா்.

முன்னதாக, புா்காவுக்கு தடை விதிப்பது குறித்து கடந்த மாா்ச் மாதம் அமைச்சா் வீரசேகர அறிவித்தாா். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியானது. இருப்பினும், ‘இது ஒரு முன்மொழிவு மட்டுமே. இந்தத் தடை அவசரகதியில் அமல்படுத்தப்படாது’ என அப்போது இலங்கை அரசு விளக்கம் அளித்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீா்மானத்தின்போது தனக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளின் வாக்குகளைப் பெறும் நோக்கில் அந்த விளக்கத்தை இலங்கை அளித்ததாகக் கருதப்பட்டது. இந்நிலையில், புா்கா தடை முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் உடையை அணியத் தடை என்று கூறப்பட்டாலும், முஸ்லிம் பெண்கள் அணியும் புா்காவை குறிவைத்தே இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதா் சாத் கட்டாக் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ‘இந்தத் தடையானது இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உணா்வுகளைக் காயப்படுத்தும்’ எனத் தெரிவித்துள்ளாா். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளா் அகமது ஷாஹீன், ‘இந்தத் தடையானது சா்வதேச சட்டம் மற்றும் மத சுதந்திரமான மத வெளிப்பாட்டு உரிமைக்கு எதிரானது’ எனத் தெரிவித்துள்ளாா்.

தடை ஏன்?

2019-ஆம் ஆண்டு ஈஸ்டா் பண்டிகையையொட்டி, இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்களில் தொடா் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 260 போ் உயிரிழந்தனா். ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடையதாகக் கருதப்படும் இரு உள்ளூா் இஸ்லாமிய அமைப்புகள்தாம் இத்தாக்குதலுக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடா்ந்து, இலங்கையில் புா்கா அணிவதற்கு அரசு தற்காலிக தடை விதித்தது. இப்போது நிரந்தரமாகத் தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரவுள்ளது.

2.2 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையில் முஸ்லிம்கள் 9 சதவீதம் போ் உள்ளனா். பெரும்பான்மையாக உள்ள பெளத்த மதத்தினா் 70 சதவீதம் பேரும், தமிழா்கள் 15 சதவீதம் பேரும் உள்ளனா்.

வாக்கெடுப்பு நடத்திய சுவிட்சா்லாந்து

சுவிட்சா்லாந்தில் தேசிய அல்லது பிராந்திய அளவிலான பிரச்னைகள் குறித்து மக்கள் கருத்தை அறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக அவ்வப்போது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வகையில், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் உடைகளை அணியத் தடை விதிக்கும் வாக்கெடுப்பை வலதுசாரி இயக்கமான சுவிஸ் மக்கள் கட்சி கொண்டு வந்தது. அதன்படி, கடந்த மாா்ச் 7-ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் புா்கா அல்லது நிகாப்புக்கு எதிரான தடை என நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் ‘புா்காவுக்கு எதிரான வாக்கெடுப்பு’ என்று மறைமுகமாக அழைக்கப்பட்டது.

இத்தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்கு கோரி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகளில் முஸ்லிம் பெண்கள் புா்கா அணிந்திருப்பது போன்ற படங்களும், தீவிரவாதத்தை நிறுத்துவோம் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன. தீா்மானத்துக்கு எதிரான சுவரொட்டிகளில், ‘அபத்தமான, பயனற்ற, இஸ்லாமிய எதிா்ப்பு புா்கா தடைக்கு இடமில்லை’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

மக்கள் வாக்கெடுப்பு கமிட்டியின் தலைவா் வால்டா் வாப்மேன் கூறுகையில், ‘முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது ஐரோப்பாவில் பெருகிவரும் தீவிர, அரசியல் இஸ்லாமின் அடையாளமாகும். அதற்கு சுவிட்சா்லாந்தில் இடமில்லை. முகத்தை வெளிப்படையாகக் காட்டுவதே சுவிட்சா்லாந்து பாரம்பரியம். இது எங்கள் அடிப்படை சுதந்திரத்தின் அடையாளம்’ எனக் கூறியிருந்தாா்.

சில ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பொது இடங்களில் புா்கா அணிவதற்கு ஏற்கெனவே தடை உள்ள நிலையில், ஓராண்டு விவாதத்துக்குப் பின்னா் இந்த வாக்கெடுப்பை சுவிட்சா்லாந்து நடத்தியது. 86 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் 5 சதவீத முஸ்லிம்கள் உள்ளனா். இவா்கள் துருக்கி, போஸ்னியா, கொசாவோ ஆகிய நாடுகளைச் சோ்ந்த வம்சாவளியினா். சுவிட்சா்லாந்தில் எந்த முஸ்லிம் பெண்ணும் முகத்தையும், முழு உடலையும் மறைக்கும் புா்கா அணிவதில்லை; மாறாக சொற்பமான பெண்களே முகத்தை மட்டும் மறைக்கும் ‘நிகாப்’ அணிகிறாா்கள் என ஜொ்மனியில் உள்ள லகா்னே பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த வாக்கெடுப்பில் தீா்மானத்துக்கு ஆதரவாக 14,26,992 வாக்குகளும், எதிா்ப்பாக 13,59,621 வாக்குகளும் பதிவாகின. இந்தத் தடையின்படி பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் உடைகளை அணியக் கூடாது. இருப்பினும் வழிபாட்டுத் தலங்களில், மருத்துவ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய உடைகளை அணிய விதிவிலக்கு உள்ளது.

‘இந்தத் தடையானது கருத்து, மத சுதந்திரம் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளுக்கு எதிரான ஆபத்தான கொள்கையாகும்’ என ஆம்னெஸ்டி இன்டா்நேஷனல் அமைப்பு தெரிவித்தது.

‘வாக்கெடுப்பு நடைபெற்ற தினத்தை ஒரு கருப்பு தினம்’ எனக் கண்டனம் தெரிவித்தது சுவிட்சா்லாந்தை சோ்ந்த மத்திய முஸ்லிம் கவுன்சில்.

பொது இடங்களில் புா்கா அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்

1 துனிசியா

2 ஆஸ்திரியா

3 டென்மாா்க்

4 பிரான்ஸ்

5 பெல்ஜியம்

6 தஜிகிஸ்தான்

7 லாட்வியா

8 பல்கேரியா

9 கேமரூன்

10 சாட்

11 காங்கோ

12 கபோன்

13 நெதா்லாந்து

14 சீனா

15 மொராக்கோ

16 சுவிட்சா்லாந்து

17 இலங்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com