மனிதர்களின் அச்சுறுத்தலால் கேள்விக்குறியாகும்  யானைகளின் உயிர்

வேட்டை, வன ஆக்கிரமிப்பு, வழித்தட ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் மற்றும் மனிதர்களின் அச்சுறுத்தலால் யானைகளின் உயிருக்கு கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
மனிதர்களின் அச்சுறுத்தலால் கேள்விக்குறியாகும்  யானைகளின் உயிர்

வேட்டை, வன ஆக்கிரமிப்பு, வழித்தட ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் மற்றும் மனிதர்களின் அச்சுறுத்தலால் யானைகளின் உயிருக்கு கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டில் இமயமலையின் பனி படர்ந்த பகுதியைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் யானைகள் வாழ்ந்துள்ளன. மனிதர்களின் அதிவேக வளர்ச்சியால் யானைகளின் வாழ்விடம் சுருங்கி இமயமலையின் அடிவாரப் பகுதியான வடகிழக்கு இந்தியா, ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள கிழக்கு மத்திய பகுதி, தென்னிந்தியாவில் உள்ள கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள் வாழ்ந்து வருகின்றன. 

யானைகள் பாதுகாப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன என்பதை உணர்ந்த மத்திய அரசு யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை 1992ஆம் ஆண்டு துவக்கியதுடன், இதுவரை 32க்கும் அதிகமான யானைகள் காப்பகங்களை அறிவித்துள்ளது. இருந்தபோதும், புலிகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு யானைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு கிடைக்கவில்லை.

யானைகள் பாதுகாப்புத் திட்டம் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இந்தத் திட்டம் மந்த கதியில் செயல்படுவதை உணர்ந்து, திட்டம் முழுத் திறனுடன் செயல்படவும், யானைகளுக்கு உள்ள அச்சுறுத்தலைக் குறைக்கவும் அரசால் மகேஷ் ரங்கராஜன் தலைமையிலான வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு எலிபெண்ட் டாஸ்க் போர்ஸ் என்று அழைக்கப்பட்டது. இக்குழு கஜா என்ற 187 பக்க அறிக்கையை 2010ஆம் ஆண்டு அரசுக்கு சமர்ப்பித்தது. அதில் யானைகள் வாழ என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

இதில், முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் என். டி. சி. ஏ. (நேஷனல் டைகர் கன்சர்வேசன் அத்தாரிட்டி) போல தேசிய யானைகள் பாதுகாப்பு ஆணையம் என். இ. சி. ஏ. (நேஷனல் எலிபென்ட் கன்சர்வேசன் அத்தாரிட்டி) உருவாக்கப்படவேண்டும். அந்த ஆணையத்தில் ஆளுமைக் குழு உருவாக்கப்பட்டு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. 

இது தவிர அக்குழுவில் யானை விஞ்ஞானிகள், அரசுசாரா தொண்டு அமைப்புகள், காட்டுயிர் ஆர்வலர்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட நபர்கள் தேசிய வன அமைச்சர் தலைமையில் இருத்தல் வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் காப்பகங்களை ஆணையம் தணிக்கை செய்தல், காப்பகங்களில் ஆராய்ச்சிக் கூடம் அமைத்தல்,  மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் என தேசிய யானைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கான பணிகளையும் பட்டியலிட்டுள்ளது.

யானைகள் பாதுகாப்பில் தற்போது உள்ள மிகக் கடுமையான சிக்கல் யானை- மனித மோதல். இந்த மோதலால் ஆண்டுதோறும் சராசரியாக 200 யானைகள், 400 மனிதர்கள் உயிரிழக்கின்றனர். 1987 முதல் 2007ஆம் ஆண்டு வரை ரயில் மோதி 150 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் 36 சதவீத விபத்துகள் அஸ்ஸாமிலும், 26 சதவீத விபத்துகள் மேற்கு வங்கத்திலும், 6 சதவீத விபத்துகள் தமிழகத்திலும் நடைபெற்றுள்ளன.

1996 முதல் 1998ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் 253 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 2008 முதல் 2013ஆம் ஆண்டுக்கு வரை 121 யானைகள் வேட்டையாடப்பட்டன.  50 யானைகள் சாலை, ரயில் விபத்துகளால் 50 யானைகளும், மின்சாரம் பாய்ந்து 111 யானைகளும் உயரிழந்துள்ளன. 

தற்போது, 12 மாநிலங்களில் சுமார் 30 ஆயிரம் யானைகளே உள்ளதாக கூறப்படுகிறது. யானைகள் அழிவுக்கு முக்கிய காரணம் வாழ்விடம் சுருங்குதல், விவசாயத்துக்காக காடு திருத்துதல், வேட்டை, மோதல் தொடர்பான இழப்புகள் அதிகம்.

யானைகள் தங்களது தோற்றத்துக்கு ஏற்றார்போல தினசரி 150 கிலோ பசுந் தீவணகளையும், 100 லிட்டர் தண்ணீரையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் 300 முதல் 400 சதுர கி.மீ. தூரம் யானை பயணிக்கிறது. 

பருவ நிலைக்கு ஏற்ப தங்களது வாழ்விடங்களை அவ்வப்போது தேர்வு செய்கிறது. மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக யானை வழித்தடங்களை இழந்து காலநிலைக்கு தகுந்தாற்போல இடம்பெற முடியாமல் யானைகள் பாதிக்கப்படுகின்றன. 

யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதில் 25 சதவீத வழித்தடம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. மீதமுள்ள 75 சதவீதம் பாதுகாப்பற்ற வனப் பகுதிகளுக்கு வெளியே உள்ளன.

இதனால் யானைகளை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு வெளியே உள்ள காப்புக் காடுகளும், இதர வனப் பகுதிகளும் வேகமாக அழிந்து வருவதால் யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

யானைகள் நீண்ட காலம் வாழ குறைந்தது 5 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு கொண்ட காடுகள் அவசியம். இதில்தான் குட்டி இடக்கூடிய 500க்கும் மேற்பட்ட யானைகள் வாழ முடியும். இந்தியாவில் இந்த அளவு கொண்ட காடுகள் அரிதாகி வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உள்ள மெத்தனம், வனப் பகுதிக்கு நடுவே அமைக்கப்படும் ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் யானை -மனித மோதல் அதிகரிக்கிறது. 

தென்னிந்தியாவில் வனப் பகுதியை அடுத்துள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் சராசரியாக 15 சதவீத பயிர் சேதம் ஏற்படுகிறது. யானைகளுக்கு மனிதர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக யானைகள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் என்பது தொடர்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளத்தில் யானை ஒன்று வெடிவைத்து தாக்கப்பட்டதில் அதன் வாயில் காயம் ஏற்பட்டு அது வலி தாங்க முடியாமல் தண்ணீரில் நின்று உயிரிழந்த சம்பவம் உலகத்தையே கண்ணீர் விட வைத்தது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் ரிசார்ட் உரிமையாளர்கள் தீப் பற்றவைத்த டயரை வீசி யானையை கொன்ற சம்பவம் இயற்கை ஆர்வலர்களை வேதனை அடையச் செய்தது. அதேபோல ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே பிடிக்கப்பட்ட அரிசி ராஜா யானை மூன்று பேரைத் தாக்கி கொண்றதாக அனைவரும் கூச்சலிட்டு யானையை பிடிக்குமாறு தெரிவித்தனர். 

இதேபோல, உடுமலை வனப் பகுதியில் யானைகள் மீது தாக்குதல் நடத்திய விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவிர வனப் பகுதிகளில் யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கோவை கோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான எண்ணிக்கையில் யானைகள் உயிரிழந்துள்ளன. 

இதேபோல ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அதிகமான எண்ணிக்கையில் யானைகள் உயிரிழந்துள்ளன. இப்படி யானைகள் உயிரிழப்பு அதிகரித்து யானைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. 

இதைத் தடுக்க யானைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கி அந்த ஆணையத்துக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கி யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் யானைகள் அழிவதைத் தடுக்க முடியாது. 

யானைகள் அழிந்தால் காடுகள் அழியும், காடுகள் அழிந்தால் மனித இனம் தண்ணீர் இன்றி அழிந்துவிடும். ஆகவே யானைகள் பாதுகாப்பை உறுதி செய்ய யானைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும். 

இது குறித்து வன  உயிரின ஆர்வலர் சுரேஷ்குமார் கூறுகையில், யானைகளின் வாழ்விடம், வழித்தடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவருவதுடன், வேட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக யானைகள் கொலை செய்யப்படுவதும், தாக்குதல் நடத்தப்படுவதும் யானைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய யானைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குவது, யானைகளின் மீது அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது போன்றவை இன்றியமையாதது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com