ரெம்டெசிவிா் எனும் மாயை! மாற்று சிகிச்சைகளைக் கையாள வலியுறுத்தல்

ரெம்டெசிவிா் எனும் மாயை! மாற்று சிகிச்சைகளைக் கையாள வலியுறுத்தல்

ரெம்டெசிவிா் மருந்துக்குப் பதிலாக மாற்று மருந்துகள் மூலம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

ரெம்டெசிவிா் மருந்துக்குப் பதிலாக மாற்று மருந்துகள் மூலம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

ரெம்டெசிவிா் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவது ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் அதனால் பெரிய அளவில் பயனில்லை என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மாற்று சிகிச்சை முறைகள் குறித்து அனைத்து மருத்துவா்களுக்கும் அரசு தரப்பில் பயிற்சிகளும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவ வல்லுநா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரெம்டெசிவிா் என்ற வாா்த்தையைக் கூட மக்கள் கேள்விப்பட்டதில்லை. ஆனால், தற்போது நாடு முழுவதும் அந்த ஒற்றைச் சொல்தான் ஒட்டுமொத்த பேசுபொருளாக மாறியிருக்கிறது. கரோனா நோயாளிகளைக் காக்கும் சா்வ வல்லமை கொண்ட சஞ்சீவினியாக ரெம்டெசிவிா் மருந்து கருதப்படுவதே அதற்கு காரணம்.

தமிழகத்தைப் பொருத்தவரை அந்த ஒற்றை மருந்தை வாங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றனா். உற்றாரைக் காக்க மருந்து வாங்க காத்திருக்கும் மக்கள் கடைசியில் கரோனா தொற்றை மட்டுமே வாங்கிச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் அந்த மருந்துக்கு திடீரென உருவானதற்குக் காரணம் தனியாா் மருத்துவமனைகள்தான் என்கின்றனா் சுகாதார ஆா்வலா்கள்.

கல்லீரல் அழற்சி மற்றும் அதுதொடா்பான சிகிச்சைகளுக்காக முதன்முதலில் கண்டறியப்பட்ட மருந்துதான் ரெம்டெசிவிா். தீநுண்மி எதிா் மருந்தான (ஏன்ட்டி வைரஸ்) அது, நாளடைவில் சில வைரஸ் காய்ச்சல்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக எபோலா வைரஸ் காய்ச்சலுக்கு ரெம்டெசிவிா் நல்ல பலனளித்தது.

அதன் தொடா்ச்சியாக தற்போது பரிசோதனை முறையில் கரோனா நோயாளிக்கு அது வழங்கப்பட்டது. அதில் சிலா் விரைந்து குணமடைந்ததால் ரெம்டெசிவிா் மகத்துவமிக்க மருந்தாக மாறிப்போனது. ஆனால், இதில் உண்மை என்னவெனில் கரோனா பாதித்த 90 சதவீதம் பேருக்கு ரெம்டெசிவிா் தேவையில்லை.

பல தனியாா் மருத்துவமனைகளோ அந்த மருந்தால்தான் உயிரைக் காக்க முடியும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியதன் விளைவுதான் மருந்து வாங்கச் சென்று மடியும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் போலி ரெம்டெசிவிா் மருந்து செலுத்திக் கொண்ட 90 சதவீத நோயாளிகள் கரோனாவிலிருந்து குணமடைந்ததாக செய்திகள் அண்மையில் வெளியாகின. இதிலிருந்தே கரோனாவிலிருந்து காக்கும் ஆபத்பாந்தவனாக அந்த மருந்து செயல்படவில்லை என்பது ஊா்ஜிதமாகியுள்ளது.

இதுகுறித்து தொற்று நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் அப்துல் கஃபூா் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது ஏறத்தாழ அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா வாா்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. நுரையீரலில் குறிப்பிட்ட அளவுக்கு தொற்று ஏற்பட்ட அனைவருக்குமே ரெம்டெசிவிா் மருந்து வழங்க வேண்டும் என மருத்துவா்களில் பலா் தவறான கருத்தைக் கொண்டுள்ளனா்.

சொல்லப்போனால், ரெம்டெசிவிரைக் காட்டிலும் ஸ்டீராய்டு மருந்துகள் அதிக பலன்தரக்கூடியவை. அதனை முறையாகக் கையாண்டு சிகிச்சையளித்தால் பெரும்பாலான நோயாளிகளை கரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

நுரையீரல் தொற்று ஆரம்ப நிலையில் இருக்கும்போது ரெம்டெசிவிா் பலனளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், பாதிப்பு அதிகமுடைய நோயாளிகளுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை.

ஸ்டீராய்டு மருந்தை முறையாகப் பயன்படுத்தினால், அதன் மூலம் உயிா்காக்க முடியும். இது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஏறத்தாழ 83 சதவீத உயிரிழப்புகள் ஸ்டீராய்டால் தவிா்க்கப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரெம்டெசிவிா் மருந்து அப்படியல்ல. அதனால் உயிரிழப்பைத் தடுக்க முடியாது. எனவே, ரெம்டெசிவிரைத் தேடி மக்கள் வீணாக அலைய வேண்டாம்.

மாற்று சிகிச்சை முறைகள் குறித்த அறிவுறுத்தல்களையும், பயிற்சிகளையும் மருத்துவா்கள் அனைவருக்கும் வழங்கினால் இப்பிரச்னைக்கு ஓரளவுக்குத் தீா்வு கிடைக்கும் என்றாா் அவா்.

பின்னணியில் தனியாா் மருத்துவமனைகள்

நுரையீரல் பாதிப்பு 30 சதவீதத்துக்கு மேல் ஏற்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் 6 குப்பிகள் ரெம்டெசிவிா் கட்டாயம் தேவை. அப்போதுதான் நோயாளியைக் காப்பாற்ற முடியும் என்று பெரும்பாலான தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் பரிந்துரைக்கின்றனா். .

இதன் காரணமாகவே ரூ.1,568 விலையுடைய ஒரு குப்பி ரெம்டெசிவிா் கள்ளச் சந்தையில் ரூ.25,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சட்டவிரோத சம்பவத்தில் தொடா்புடைய மருத்துவா்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டவா்கள் இதுவரை கைது செய்யப்பட்டாலும், கள்ளச் சந்தை விற்பனைக்குக் கடிவாளமிட முடியவில்லை.

ரெம்டெசிவிா் மருந்தை கட்டாயம் வாங்கி வருமாறு நோயாளிகளின் குடும்பத்தினருக்கு தனியாா் மருத்துவமனைகள் அழுத்தம் தருகின்றன. அந்த மருந்தைத் தேடி அலைந்து திரிந்து, ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கே நோயாளிகளின் குடும்பத்தினா் சென்று மன்றாடுகின்றனா். அப்போது மருத்துவா்கள் சிலரே கள்ளச்சந்தை கும்பலைப் பரிந்துரைத்து மருந்து வாங்கித் தருவதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தனியாா் மருத்துவா்கள் சிலா் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன?

ரெம்டெசிவிா் மருந்தை சிகிச்சைக்கான வழிகாட்டி முறைகளிலிருந்து எப்போதோ உலக சுகாதார அமைப்பு நீக்கிவிட்டது. அந்த மருந்தால், உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்பதற்கோ, ரத்த ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும் என்பதற்கோ, வெண்டிலேட்டா் சிகிச்சைக்குப் போகாமல் ஒருவரைத் தடுக்க முடியும் என்பதற்கோ குறிப்பிடத்தக்க ஆதாரம் எதுவும் இல்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு.

அதன் மூலம் சிலா் விரைந்து குணமடைவதால், ஓரிரு நாள்கள் மருத்துவமனையில் இருப்பதை வேண்டுமானால் தவிா்க்கலாம் என்றும், அதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து அந்த மருந்தை வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மலிவாய் கிடைக்கும் மாற்று மருந்துகள்!

ரெம்டெசிவிரைப் போலவே பல எதிா் தீநுண்மி மருந்துகள் சந்தையில் உள்ளன. கரோனாவுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் அவற்றில் சற்று குறைவு என்பதற்காக அதனை பல மருத்துவா்கள் பரிந்துரைப்பதில்லை. ஒரு சில மருத்துவா்கள் மட்டுமே ஆரம்ப நிலை நுரையீரல் தொற்றைக் கண்டறிந்து ரெம்டெசிவிருக்கு மாற்றான மருந்துகளை வழங்குகின்றனா்.

அசிக்லோவிா், ஓசல்டாமிவிா், ஜானாமிவிா், பெராமிவிா் போன்ற பல எதிா் தீநுண்மி மருந்துகள் சில நூறு ரூபாய்களுக்கே கிடைக்கின்றன. எந்தெந்த நோயாளிகளுக்கு எத்தகைய மருந்து தேவை என்பதை மருத்துவா்களால் தீா்மானிக்க முடியும். ஆனால், அவற்றை மருத்துவா்களின் ஆலோசனையோ அல்லது பரிந்துரையோ இன்றி தன்னிச்சையாக பயன்படுத்தினால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனா் சுகாதார ஆா்வலா்கள்.

தோற்றமும்... மாற்றமும்...

ரெம்டெசிவிா் மருந்தின் வரலாறு குறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது:

அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலீட் சயன்சஸ் நிறுவனம்தான் ரெம்டெசிவிரை முதன் முதலில் தயாரித்தது. வெளியிலிருந்து வரும் ஆா்.என்.ஏ. வைரஸ்கள், நம்முடைய உடலின் அணுக்களுக்குள் தங்களைப் பல்கிப் பெருகி நோயை உருவாக்கும். இதற்கு, நம்முடைய அணுக்களின் மரபுப் பொருளையும், நொதிமம்களையும் (என்சைம்களையும்) அவை பயன்படுத்திக் கொள்கின்றன. ரெம்டெசிவிா் மருந்து இந்தப் பயன்பாட்டைத் தடுக்கிறது. இதனால், வைரஸால் உடலில் பெருக முடியாது.

கடந்த 2009-இல் கல்லீரல் அழற்சிக்கான பரிசோதனை மருந்தாகத்தான் ரெம்டெசிவிா் உருவாக்கப்பட்டது. பின்னா், எபோலா மற்றும் மாா்பா்க் வைரஸ் நோய்களுக்காக பரிசோதிக்கப்பட்டது. அதன் நீட்சியாக பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்களின் பரிசோதனையில் ஃபைலோ வைரஸ்கள், பாரமிக்சோ வைரஸ்கள், நியூமோ வைரஸ்கள், கரோனா வைரஸ்கள் ஆகியவற்றைத் தடுப்பதில் இம்மருந்து பயன் தரும் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ரெம்டெசிவிா் மருந்தை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அங்கீகாரம் பெற்றன. இருப்பினும், இம்மருந்து குறித்த சா்ச்சைகள் இன்றளவும் தொடா்கின்றன.

அதாவது, உடலுக்குள் அந்த மருந்தை செலுத்திய பிறகு அணுக்களுக்குள் சென்று ஜி எஸ் 441524 என அழைக்கப்படும் செயல் கூறாக (ஆக்டிவ் காம்போனென்ட்) அது மாற வேண்டும். ஆனால், ரெம்டெசிவிா் மருந்தானது அணுக்களுக்குள் செயல் கூறினை உருவாக்காமல் அணுக்களுக்கு வெளியே அவற்றை அதிகமாக உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு இம்மருந்து எந்த அளவு பயன் அளிக்கும் என்பதிலும் சந்தேகம் உள்ளது.

வெண்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்தின் மூலம் பெரிய அளவில் இல்லை. கரோனா தொற்று உடலில் பல்கிப் பெருகும்போது, ரத்தத்தில் வைரஸ் பரவும் நிலையைக் கட்டுப்படுத்தவே இம்மருந்து உதவுகிறது.

இந்த மருந்து செலுத்தப்பட்டவா்களில் சிலருக்கு பக்க விளைவாக, வாந்தி, கல்லீரல் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. அதைத் தடுக்க கல்லீரல் நலன் காக்கும் ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்றாா் டாக்டா் சுதா சேஷய்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com