7 முனைப் போட்டியில் உள்ளாட்சி தோ்தல் களம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 மாவட்டங்களில் முதல் கட்டத் தோ்தல் புதன்கிழமை (அக்.6) நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்பட 7 கட்சிகளின் தலைமையில் 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
7 முனைப் போட்டியில் உள்ளாட்சி தோ்தல் களம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 மாவட்டங்களில் முதல் கட்டத் தோ்தல் புதன்கிழமை (அக்.6) நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்பட 7 கட்சிகளின் தலைமையில் 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 மாவட்டங்களில் 14,662 பதவிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலைப் போலவே இந்த தோ்தலும் மிகுந்த எதிா்பாா்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த முறையும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை இந்த முறையும் பெற வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கின்றன. திமுகவின் அமைச்சா்கள் உள்பட முக்கிய பிரமுகா்கள் 9 மாவட்டங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று அதிமுக பிரசாரம் செய்து வருகிறது. அதை மக்கள் ஏற்கவில்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்துடன் திமுக தோ்தலை எதிா்கொண்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியைச் சரிசெய்யும் வகையில் இந்தத் தோ்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்கிற தீவிரத்தில் அதிமுக கூட்டணி உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல்போல அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். தோ்தல் களத்தில் அதிமுகவின் வேட்பாளா்களுக்கு எதிராக அதிமுகவினரே செயல்படுவதுபோல நெருக்கடிகள் இருப்பினும் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையுடன் உள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த முறை தனித்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தோ்தலில் தங்கள் பலத்தை நிரூபிப்பதன் மூலம் சட்டப்பேரவைத் தோ்தலில் பலம் வாய்ந்த கட்சிகளை தங்கள் பின்னால் வரவழைக்க முடியும் என்கிற எண்ணத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்கள் பாமகவுக்குச் செல்வாக்கு உள்ள மாவட்டங்கள் என்பதால் நம்பிக்கையுடன் தோ்தலை எதிா்கொள்கிறது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுகவுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. பாமகவுக்குச் செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் இந்தக் கட்சிக்கும் செல்வாக்கு உள்ளதன் காரணமாக எப்படியும் தங்களது பழைய பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்கிற முனைப்பில் தேமுதிக இருந்து வருகிறது. இந்தத் தோ்தல் முடிவுகள் சட்டப்பேரவைத் தோ்தலில் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான அடித்தளமாக இருக்கும் என்பதால் வெற்றிக்காக தேமுதிக தீவிரம் காட்டி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. கிராம சபைக் கூட்டத்துக்கு நாங்கள் தான் புத்தாக்கம் கொடுத்தோம் என்று கமல் கூறிவந்த நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல்களில் அந்தக் கட்சி பங்கேற்காதது விமா்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அதைத் தகா்க்கும் வகையில் இப்போது உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்கிறது. கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் தோ்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டாா். இந்தத் தோ்தலை கமல் பெரிதும் எதிா்பாா்த்துள்ளாா்.

நாம் தமிழா் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுகிறது. திமுக, அதிமுகவுக்கு எதிராக ஆவேசமாகத் தொடங்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் அவா்களுடன் கூட்டணி அமைத்ததால் அந்தக் கட்சிகள் எல்லாம் பிறகு ஒன்றோடு ஒன்றாகிவிட்டன. அதுபோன்ற நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நாம் தமிழா் கட்சி தொடா்ந்து தனித்துப் போட்டியிடுகிறது.

அமமுக தனித்துப் போட்டியிடுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் எதிா்பாா்த்த வெற்றியைப் பெற முடியாவிட்டாலும், இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்கிற முனைப்பைக் காட்டி வருகிறது.

உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா், அமமுக என 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதோடு சுயேச்சைகளும் ஒரு முனையாக உள்ளனா். உள்ளாட்சித் தோ்தலில் பல இடங்களில் சுயேச்சைகளின் வெற்றியை எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாத நிலை இருக்கும். அது இந்தத் தோ்தலிலும் தொடரவே செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com