மாசில்லா சுவாசம் எப்போது?

ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசு உலகளவில் 70 லட்சம் முன்கூட்டிய இறப்புகளை ஏற்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மாசில்லா சுவாசம் எப்போது?


ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசு உலகளவில் 70 லட்சம் முன்கூட்டிய இறப்புகளை ஏற்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசால் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சியும் இயக்கமும் குறைகிறது; சுவாச நோய்த்தொற்றும் ஆஸ்துமாவும் ஏற்படுகிறது.


உலக சுகாதார அமைப்பானது காற்று மாசு தொடர்பான மாற்றப்பட்ட தர விதிகளை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, காற்றில் காணப்படும் பிஎம்2.5 எனப்படும் நுண் துகள்களின் அதிகபட்ச சுவாசிக்கத்தக்க அளவு ஒரு கனமீட்டருக்கு 15 மைக்ரான்களாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு இந்த அளவு 25 மைக்ரான்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

10 மைக்ரான் விட்டம் அல்லது அதற்கு குறைவான நுண் துகள்கள் பிஎம்10 எனவும், 2.5 மைக்ரான் விட்டம் அல்லது அதற்கு குறைவான நுண் துகள்கள் பிஎம்2.5 எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த இரு அளவிலான நுண் துகள்களும் மனிதர்களின் நுரையீரலுக்குள் ஊடுருவும் திறன் கொண்டவை. அதிலும் பிஎம்2.5 நுண் துகளானது ரத்த ஓட்டத்தில் கலந்து இதய மற்றும் சுவாச உறுப்புகளைப் பாதித்து, பிற உறுப்புகளையும் பாதிக்கிறது.

போக்குவரத்து, எரிசக்தி, வீடுகள், தொழிற்சாலைகள், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் எரிபொருள் எரிக்கப்படும்போது இந்த நுண்துகள்கள் வெளியாகின்றன.

இந்தியாவில் தேசிய சுற்றுப்புற காற்று தரநிலைகளின்படி (சஅஅணந), பிஎம்2.5 அளவானது அதிகபட்சம் 60 மைக்ரான்களாக இருக்க வேண்டுமென 2009-இல் நிர்ணயிக்கப்பட்டது.

2021-இல் இந்தியாவின் பெரிய நகரங்கள் பல, உலக சுகாதார நிறுவனத்தின் 2005-ஆம் ஆண்டு தர நிர்ணய அளவைத் தாண்டியுள்ளன.

புதிய விதிகளின்படி பார்த்தால் இந்த நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காற்று மாசு காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்பும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.


காற்று மாசானது அனைத்து நாடுகளிலும் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம்கொண்ட நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புதிய காற்றுத் தர வழிகாட்டுதல்கள் ஆதாரத்தின் அடிப்படையிலானது. அனைத்து உயிர்கள் தொடர்புடைய காற்றின் தரத்தை உயர்த்த இது வழிகாட்டும்.

அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போராட வேண்டும் - டெட்ரோஸ் அதானோம், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்.


புதிய தரவிதிகள்

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காற்று மாசு தரவிதியானது 24 மணி நேரத்தில் பிஎம்2.5 நுண் துகள்களின் சுவாசிக்கத்தக்க அளவு 15 மைக்ரான்களாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவானது 60 மைக்ரான்களாக உள்ளது.

நகரங்களில் காற்றின் தரம்

2021 ஜன. 1-ஆம் தேதி முதல் செப். 27-ஆம் தேதி வரை, உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறிவிப்பின்படி நகரங்களில் காணப்பட்ட நுண்துகள்களின் விவரம், காற்றில் பிஎம்2.5 நுண் துகள்களின் அனுமதிக்கப்பட்ட அளவான 15 மைக்ரான்கள், 25-மைக்ரான்களுக்கு மேல் 60 மைக்ரான்கள் வரை, இந்தியாவின் தரநிலையான 60 மைக்ரான்களுக்கு மேல் வரை காணப்பட்ட சராசரி நாள்கள் குறித்த அட்டவணை:

நகரங்கள் >15 25-60 >60
1 தில்லி 0 32 68
2 பாட்னா 1 37 44
3 லக்னௌ 4 47 31
4 கொல்கத்தா 11 39 29
5 ஜெய்ப்பூர் 4 62 23
6 ஆமதாபாத் 0 70 23
7 ஹைதராபாத் 43 38 8
8 மும்பை 16 47 7
9 கோவை 0 86 6
10 சென்னை வேளச்சேரி 53 29 2
11 பெங்களூரு 34 40 1
12 திருவனந்தபுரம் 11 39 0.4.

15 மைக்ரான்கள் வரை காணப்பட்ட சராசரி நாள்கள்
25 மைக்ரான்களுக்கு மேல் 60-க்குள் காணப்பட்ட சராசரி நாள்கள்
60 மைக்ரான்களுக்கு மேல் காணப்பட்ட சராசரி நாள்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com