கொலை வழக்கு முதல் லக்கிம்பூர் வரை: யார் இந்த அஜய் மிஸ்ரா?

லக்கிம்பூர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத் தக்கது.
அஜய் மிஸ்ரா
அஜய் மிஸ்ரா

லக்கிம்பூர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையிலிருக்கிறது.

லக்கிம்பூர் கேரி தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை  உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியின்  அமைச்சரவையில் மத்திய உள்துறை இணையமைச்சராக பதவி வகிக்கிறார் அஜய் மிஸ்ரா. போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் இவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நிலையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்  இவர்கள்  இருவரும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர்.

யார் இந்த அஜய் மிஸ்ரா?

உத்தரப் பிரதேசத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒரே முகமான அஜய் மிஸ்ரா கடந்த ஜூலை மாதம் மாற்றி அமைக்கப்பட்டபோதுதான் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசியல் நோக்கத்துடன் 10 முதல் 15 பேர்தான் போராடி வருவதாகவும், தான் நினைத்தால் போராட்டத்தை உடனடியாக நிறுத்திவிட முடியும் என்றும் தெரிவித்துவந்தவர் இவர்.

மேலும், அஜய் மிஸ்ரா தனது அரசியல் வாழ்க்கையை கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கியபோது சுயேச்சையாக மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்த இவர், 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் நிகாஷன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் கடந்த 2014, 2019 ஆண்டுகளில் போட்டியிட்டுத் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

இவரது தொடர்ச்சியான வெற்றிக்கு அந்த மாவட்டத்தில் அதிகளவிலுள்ள  பிராமணர்கள் மற்றும் குர்மிஸ் சமூகத்தினரின் ஆதரவே காரணமாக கருதப்படுகிறது.

மேலும், மிஸ்ரா மிகவும் பிரபலமான தலைவர்தான், ஆனால் அவரது வளர்ச்சிக்கு அவரின் சமூகத்தினர்தான் முக்கிய காரணமாக இருப்பதாக லக்கிம்பூர் தரப்பிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அவரின் மீது 1990 இல் அமைதியை சீர்குலைக்க முயற்சித்ததற்காகவும், 2000 இல் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2004 ஆம் ஆண்டு கொலை வழக்கிலிருந்து மிஸ்ராவை அமர்வு நீதிமன்றம் விடுவித்தாலும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மிஸ்ராவின் இளைய மகன் ஆஷிஷ் மிஸ்ரா தனது குடும்ப சொத்துகளான அரிசி தொழிற்சாலை மற்றும் பெட்ரோல் நிலையத்தைக் கவனித்து வருகிறார். இந்நிலையில், மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார் அஜய் மிஸ்ரா. ஆனால், பாஜக இவரை வேட்பாளராக நிறுத்தவில்லை.

எனினும், பாஜக சார்பில் போட்டியிடச் செய்யும் நோக்கில், தாம் பங்கேற்கும் கூட்டங்களில் தனது மகனையும் பேச வைத்து தீவிர அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார் அஜய் மிஸ்ரா.

இந்த சூழ்நிலையில் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்த விவசாயிகளின் மீது ஆஷிஷ் மிஸ்ராவின் கார் அணியில் முன்னால் சென்றவர்கள் காரை ஏற்றிச் சிலர் உயிரிழக்கக் காரணமாகிவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com