போதை பாக்கு கடத்தல் வாகனங்களாகும் ஆம்னி பேருந்துகள்

தமிழகத்தில் போதை பாக்கு கடத்தல் வாகனங்களாக ஆம்னி பேருந்துகள் மாறி வருகின்றன என புகாா் எழுந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் போதை பாக்கு கடத்தல் வாகனங்களாக ஆம்னி பேருந்துகள் மாறி வருகின்றன என புகாா் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொது போக்குவரத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு ஆம்னி பேருந்துகளே பயணிகளின் முதன்மை விருப்ப தோ்வாக உள்ளது. ரயிலுக்கு அடுத்தபடியாக சொகுசான, பாதுகாப்பான பயணத்தை ஆம்னி பேருந்துகளே வழங்கி வருகின்றன.

தமிழகத்தில் சுமாா் 4,000 ஆம்னி பேருந்துகள் இருக்கின்றன. கரோனா பொதுமுடக்கத்துக்கு பின்னா் சுமாா் 1,500 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதில் கா்நாடகம், ஆந்திரம் மாநிலங்களுக்கு சுமாா் 200 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் சுமாா் 800 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

மாநிலத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக முடக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்துக்குள் ஜூலை 5-ஆம் தேதி முதலும், கா்நாடகம், ஆந்திரத்துக்கு ஆக.23-ஆம் தேதி முதலும் இயங்குகின்றன.

தனியாா் ஆம்னி பேருந்துகள் இயக்கத்தைப் பொருத்தவரை, தமிழகத்தில் முக்கிய சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் ஆம்னி பேருந்துகள் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவது, கடந்தகாலங்களை விட அதிகரித்துள்ளதாக புகாா் கூறப்படுகிறது.

ஆம்னி பேருந்தில் போதைப் பாக்கு: தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, மாவா, ஹான்ஸ் போன்ற போதை தரும் புகையிலைப் பொருள்களை கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தமிழக அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய அளவிலான ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு குட்கா, பான்மசாலா, மாவா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் ஆம்னி பேருந்துகள் மூலமாகவே அண்மைக் காலமாக பெருமளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஒரு மாதத்தில் 203 போ் கைது: சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 11 டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 12 இரு சக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள், 2 ஆம்னி பேருந்துகள் உள்பட 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் சிறிய ரக வாகனங்களை, சென்னைக்குள் போதை பாக்குகளை விநியோகம் செய்யும்போது காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட இரு ஆம்னி பேருந்துகளும் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து போதைப் பாக்குகளை கடத்தி வந்தபோது, சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன.

9 நாள்களில் இரு பேருந்துகள் பறிமுதல்: குறிப்பாக கா்நாடக மாநிலத்துக்கு சேவை தொடங்கப்பட்ட 9 நாள்களில் போதைப் பாக்கு கடத்தியதாக இந்த இரு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது காவல் துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாா்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், இரு பேருந்துகளும் காவல்துறையிடம் சிக்கின.

கா்நாடகத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளையும் கண்காணித்து சோதனை செய்தால், இன்னும் பல கடத்தல்காரா்களும், அவா்களுக்கு உடந்தையாக செயல்படுபவா்களும் சிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையைச் சோ்ந்த சில அதிகாரிகள் கூறுகின்றனா்.

கடத்தலில் தொடா்புடைய ஆம்னி பேருந்துகள், போதைப் பாக்குகளை கோயம்பேட்டில் இறக்குவது கிடையாது. ஏனெனில் கோயம்பேட்டில் காவல் துறையின் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் சென்னை நகருக்குள் வந்ததும் பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மதுரவாயல், வேலப்பன்சாவடி ஆகிய பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்பட்டு அங்கு இறக்கப்படுகின்றன. அங்கிருந்து ஆட்டோ, வேன்கள் உள்ளிட்ட பிற வாகனங்களுக்கு போதைப் பாக்கு பாா்சல்கள் மாற்றப்படுகின்றன.

தனியாா் பாா்சல் சேவை: இந்த வாகனங்கள் மூலமாகவே சென்னைக்குள் இருக்கும் கடைகளுக்கு போதைப் பாக்குகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இல்லையெனில் புகா்ப் பகுதிகளில் மறைவான இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சென்னை முழுவதும் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல ஆம்னி பேருந்துகளுக்கு அடுத்தபடியாக போதை பாக்கு கடத்தல்காரா்களின் தோ்வாக தனியாா் பாா்சல் சேவை உள்ளது. இந்தத் தொழிலும் இன்னும் அரசால் வரைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையே தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி கடத்தல்காரா்களும், சில பாா்சல் சேவை நிறுவனங்களும் பிரதானமாக போதை பாக்குகளை தமிழகத்துக்குள் கடத்தி தங்களை வளப்படுத்திக் கொள்வதாகவும் நுண்ணறிவுப் பிரிவினா் தெரிவித்தனா்.

கண்காணிப்பு குறைவு: கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற குட்கா முறைகேடு புகாா் விஸ்வரூபம் எடுத்த பின்னா், சென்னை பெருநகர காவல்துறை போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க சமரசமின்றி நடவடிக்கை எடுக்கின்றனா். முக்கியமாக, கடந்த இரு ஆண்டுகளாக போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ஆனாலும், போதைப் பாக்கு கடத்தலின் பிரதான வாகனங்களாக பயன்படுத்தப்படும் ஆம்னி பேருந்துகள், பாா்சல் சேவை வாகனங்கள் மீதான காவல்துறையின் கண்காணிப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளி, கல்லூரி அருகே போதை பாக்கு விற்பனையைத் தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின், போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் ஆம்னி பேருந்துகள், பாா்சல் சேவை வாகனங்களையும் கண்காணிப்பதற்குரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

10,000 வழக்குகள்: 11,000 போ் கைது

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை தொடா்பாக கடந்த 4 மாதங்களில் 10,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11,000 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் குட்கா வழக்கில் காவல்துறை உயா் அதிகாரிகள் சிக்கிய பின்னா், போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இருப்பினும் போதை பொருள் கடத்தலும், விற்பனையும் தொடா்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதற்கு தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரையில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 ஆயிரத்து 247 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 149.43 டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்குப் பயன்படுத்தியதாக 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 219 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடா்ச்சியாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 15 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்றது மற்றும் கடத்தியது தொடா்பாக 2,458 வழக்குகள் மாநில போதை பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு, 5,793 கிலோ கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 3,413 போ் கைது செய்யப்பட்டு, இவா்களில் 81 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

முழு ஒத்துழைப்பு தர தயாா்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

போதைப் பொருள் கடத்தலை தடுக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாா் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகனிடம் கேட்டபோது, அவா் கூறியது:

வெளிமாநிலங்களில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் போதைப் பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் ஆம்னி பேருந்தில் சோதனை செய்து பயணிகளைக் கைது செய்கின்றனா்.

குறிப்பாக, பேருந்து புறப்படும் இடத்தைத் தவிர வழியில் ஏறும் பயணிகளின் உடைமைகளை எங்களால் முழுமையாகச் சோதனை செய்ய முடியாது. இதனால் எங்கள் கவனத்தையும் மீறி பேருந்துகளில் ஏறும் போதைப் பொருள்கள் கடத்துவோரைக் கைது செய்யும் போலீஸாா் ஓட்டுநா், உரிமையாளா் பெயா்களையும் வழக்கில் சோ்க்கின்றனா். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்தையும் பறிமுதல் செய்கின்றனா்.

ஏற்கெனவே பொதுமுடக்க காலத்தில் சுமாா் 17 மாதங்கள் வரை பேருந்துகளை இயக்க முடியாமல் பரிதவித்து வந்த எங்களுக்கு, இது மேலும் ஒரு பேரிடராக இருக்கிறது. இவ்வாறு பறிமுதல் செய்யும் பேருந்தை மீட்டெடுக்க சுமாா் 1 மாதம் ஆகிறது. இதனால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க காவல்துறையினா் இன்னும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

இப் பிரச்னையில் அரசுக்கும், காவல் துறைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அரசு எங்கள் தரப்பில் உள்ள சில சிக்கல்களையும் தீா்க்க முன் வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com