அதிகரிக்கும் அரசு ஊழியர் சங்கங்களின் எண்ணிக்கை!

அதிகரிக்கும் அரசு ஊழியர் சங்கங்களின் எண்ணிக்கை!

சலுகை மற்றும் அந்தஸ்து காரணமாக அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சலுகை மற்றும் அந்தஸ்து காரணமாக அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், தொழிற்சங்கத் தேர்தலை நடத்தி நெறிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று அரசியல்  பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 1.87 லட்சம் பேர், தொடக்கக் கல்வித் துறையில் 1.88 லட்சம் பேர் , மற்ற துறைகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு ஊழியர்களில், காவல்துறையிலுள்ள 1.35 லட்சம் பேர் நீங்கலாக பிற துறைகளில் பணிபுரிவோருக்கு வட்டார, மாவட்ட, மாநிலம் என்ற நிலைகளில் ஊழியர்கள் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 

ஒவ்வொரு துறையிலும் அரசியல் கட்சிகள் சார்புடைய சங்கங்கள் மட்டுமின்றி, அரசு அங்கீகாரம் பெற்ற சங்கங்கள், அரசு பதிவு பெற்ற சங்கங்கள், அரசு சார்புடைய சங்கங்கள், ஜாதி சார்ந்த சங்கங்கள் எனப் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கல்வித்துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தஸ்துக்காக அதிகரித்த சங்கங்கள்: 7 அல்லது 7-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து கூட்டுறவு பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு சங்கத்தை உருவாக்க முடியும். அந்தச் சங்கத்திற்கான துணை விதிகளை வகுத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, பொறுப்பாளர்களை நியமித்துக் கொள்கின்றனர். ஊழியர்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தச் சங்கங்கள், ஆண்டுதோறும் வரவு- செலவு குறித்து தணிக்கையாளர்களிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

உறுப்பினர் எண்ணிக்கை, திட்டப் பொருள், வங்கிக் கணக்கு விவரம், தணிக்கை அறிக்கை விவரம் உள்ளிட்டவற்றை பதிவுத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கத்தின் பதிவை புதுப்பிக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

தமிழக முதல்வர், அரசுத் துறை செயலர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரை சங்க நிர்வாகிகள் எளிதாக அணுகக் கூடிய சூழல் உள்ளது. அதேபோல் உயர் அதிகாரிகளுடனான தொடர்பு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிடைக்கும் முக்கியத்துவம், பணியிட மாறுதலுக்கான பரிந்துரை, சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் புதிய புதிய சங்கங்கள் உருவாகத் தொடங்கின. 

நிர்வாகிகளின் சலுகையும், ஊழியர்களின் நெருக்கடியும்...: சங்க நிர்வாகிகள் மட்டுமின்றி, தங்களுக்கு மேல் உயர் பதவியில் இருப்பவர்களின் வலியுறுத்தல் காரணமாக, ஒரு நபரே ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களில் உறுப்பினராக இணைந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்ததந்தச் சங்கங்களுக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.200 முதல் ரூ.1000 வரையிலும் வசூலிக்கப்படுகிறது. 

அதேபோல், சங்க வளர்ச்சி நிதி, ஓய்வு பெறுவோருக்கு பாராட்டு விழா, நாள் குறிப்பு, காலண்டர், சங்க பத்திரிகைக்கான ஆண்டு மற்றும் ஆயுள் சந்தா, போராட்ட நிதி, கட்டட நிதி எனப் பல்வேறு பெயர்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று வசூலிக்கப்படும் தொகையை பெரும்பாலான சங்கங்கள் தணிக்கைக்கு உட்படுத்துவதில்லை. 

அதேபோல் அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் மாநில நிர்வாகிகளுக்கு ஆண்டுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், இந்தச் சலுகையை மாவட்டம் மட்டுமின்றி வட்டார நிர்வாகிகளும் பயன்படுத்தி வருகின்றனர். சங்க நிர்வாகம் சார்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறையாகப் பணிக்குச் செல்வதில்லை என்பதோடு, பணியிடங்களிலும் சங்க வளர்ச்சி சார்ந்த பணிகளில் மட்டுமே ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுகிறது. 

தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த சங்கங்களின் உறுப்பினர்களைப் பட்டியலிடும் நிலையில், மொத்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைவிட 2 மடங்கு கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தி அங்கீகரிக்க வேண்டும்: இதுதொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் கூறியதாவது:

போக்குவரத்துக் கழகம், ரயில்வே உள்ளிட்ட நிர்வாகங்களில் ஊழியர்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில், தேர்தல் மூலம் பெருவாரியான ஊழியர்களின் ஆதரவைப் பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அரசுத் தரப்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது. 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கும் அதேபோல தொழிற் சங்க தேர்தல் நடத்தி அங்கீகாரம் வழங்க அரசு முன் வர வேண்டும். அந்தச் சங்கங்களின் நிர்வாகிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதன் மூலம் சங்கங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். 

மேலும் நிர்வாகம் செம்மையாக நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு, குளறுபடிகள் தவிர்க்கப்படும். குறிப்பாக, வேலை நேரத்தில் சங்கப் பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com