கூலி உயர்வு வழங்காததால் பாதிப்புக்குள்ளாகும் விசைத்தறித் தொழில்

கூலி உயர்வு வழங்காததால் பாதிப்புக்கு உள்ளாகி வரும் விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. 
கூலி உயர்வு வழங்காததால் பாதிப்புக்குள்ளாகும் விசைத்தறித் தொழில்


பல்லடம்: கூலி உயர்வு வழங்காததால் பாதிப்புக்கு உள்ளாகி வரும் விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் 
வலியுறுத்தியுள்ளது. 

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழகத்தில்  6 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று 
வருகின்றனர். 

அமலுக்கு வராத ஒப்பந்தம்: விசைத்தறியாளர்கள் - ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே 2014ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் தொடர்ந்து தொழில் நடத்த முடியாத நிலைக்கு திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் அப்புக்குட்டி என்கிற பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது: 

ரூ.600 கோடி ஜி.எஸ்.டி. வரி:

தமிழகத்தில் உள்ள விசைத்தறிகளில் மூன்றில் ஒரு பங்கு திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி அடிப்படையில் துணி நெசவு செய்து வழங்கப்படுகிறது. தினசரி ரூ. 35 கோடி மதிப்பிலான ஒரு கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஜி.எஸ்.டி. வரியாக ரூ.600 கோடி வருமானம் கிடைக்கிறது. 

விலைவாசி உயர்வு: 2014ஆம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக அந்த கூலி உயர்வு வழங்கப்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வழங்க வேண்டும். அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

அதே நேரத்தில் விசைத்தறி கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்கள் விலைவாசி உயர்வுக்கேற்ப கூலியை உயர்த்தி வழங்கி வருகின்றனர். விசைத்தறி உதிரி பாகங்கள் விலை உயர்வு,  மின் கட்டண உயர்வு, ஆள்கள் கூலி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என அனைத்து விலைவாசியும் உயர்ந்து வருகிறது. ஆனால் விசைத்தறி துணி நெசவு கூலி மட்டும் உயரவில்லை. 

வேலை இழப்பு: தொடர் நஷ்டத்தால்  தற்போது பலரும் விசைத்தறித் தொழிலை கைவிட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் உரிமையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து விசைத்தறிகளை இயக்கி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் உற்பத்தியை குறைக்க விசைத்தறிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நசிவால் விசைத்தறியாளர்கள் தொழிலைப் பாதுகாக்க வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கி சமாளித்தனர். அதனால் விசைத்தறியாளர்கள் கடனில் மூழ்கியுள்ளனர். 

பழைய இரும்பு விலை: ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு விசைத்தறியை ரூ.30 ஆயிரத்துக்கு பழைய இரும்பு விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க விலைவாசிக்கு ஏற்ப 100 சதவீத கூலி உயர்வை அளித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தம் போடுவதோடு அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் கிராமங்களில் விசைத்தறித் தொழில் இருக்கும். எனவே, விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நீண்ட நாள் கிடப்பில் உள்ள கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கண்டு விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com