மூடப்பட்ட சிறு மருத்துவமனைகள்: தொடங்கிய வேகத்தில் முடிவுபெற்ற திட்டம்
By ம.முனுசாமி | Published On : 16th September 2021 03:52 AM | Last Updated : 16th September 2021 03:52 AM | அ+அ அ- |

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) திட்டம் தொடங்கிய வேகத்திலேயே முடிவுக்கும் வந்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த ஆண்டு சிறு மருத்துவமனைகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறு மருத்துவமனை திட்டத்தை சென்னையில் தொடக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று அறிவித்து அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது.
7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மக்கள் தொகையுள்ள பகுதிகள், 3 கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகள், குடிசைகள் அதிக அளவுள்ள பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக, பழங்குடியின மக்கள், பேருந்து வசதி இல்லாத கிராமங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சிறு உடல்நலப் பிரச்னைகளுக்காக அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதைத் தவிர்க்கும் விதமாக இப்பகுதிகளில் சிறு மருத்துவமனைகள் தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு பல்நோக்கு மருத்துவப் பணியாளர் இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக மாநிலம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். திடீரென ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதால் சொந்தக் கட்டடம் அமைக்கப்படாமல் அரசு அலுவலகங்கள், ஊராட்சி கட்டடங்கள், சமுதாய நலக் கூடங்கள், சுகாதாரத் துறை கட்டடங்களில் தற்காலிகமாக சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.
புற நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை, மகப்பேறு பரிசோதனை உள்பட சிகிச்சைகளும், முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. காய்ச்சல், சளி போன்ற சிறு பாதிப்புகளுக்குத் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கும் சென்று வந்த பொது மக்களுக்கு சிறு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் இலவச சிகிச்சை உபயோகமாக இருந்து வந்தது.
பல்வேறு தரப்பினரிடையெ பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த சிறு மருத்துவமனைகள் திட்டம் தொடங்கப்பட்ட வேகத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் பரபரப்பு, ஆட்சி மாற்றம், கரோனா 2ஆவது அலை போன்ற பல்வேறு காரணங்களால் சிறு மருத்துவமனைகள் திறக்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறு மருத்துவமனைகளுக்குப் பதிலாக மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் சிறு மருத்துவமனைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம்தான் என்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் 1,900க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. ஒரு சில இடங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கரோனா தடுப்புப் பணிகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளுக்கிடையே ஒரு சில மையங்களைத் தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறு மருத்துவமனைகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் கரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.
தொடர்ந்து சிறு மருத்துவமனைகளை செயல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்கும். அதன் பிறகே முழுமையான விவரங்களைத் தெரிவிக்க இயலும் என்றார்.