இலங்கையில் ஆட்சி கவிழுமா?

இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டுவரவுள்ளதாக பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் பாதி பேரின், அதாவது 113 நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஆதரவு இருந்தாலே போதுமானது.
அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் பாதி பேரின், அதாவது 113 நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஆதரவு இருந்தாலே போதுமானது.

இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டுவரவுள்ளதாக பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவு வேண்டி கட்சி பேதமில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இடையே கையொப்ப இயக்கத்தை நடத்தி வருகிறது ஐக்கிய மக்கள் சக்தி.

தீா்மானம் வெற்றி பெறுமா?: இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினா்கள் உள்ளனா். நம்பிக்கையில்லா தீா்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற, நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினா்களின் பாதி பேரின் ஆதரவு தேவை. அதாவது 113 உறுப்பினா்களின் ஆதரவு தேவை.

இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணிக்கு 143 உறுப்பினா்கள் இருந்தனா். ஆனால், ஆளும் கூட்டணியின் பிரதான கூட்டணிக் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. அதேபோல, ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த இலங்கைத் தொழிலாளா் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.

அதிபா் கோத்தபய ராஜபட்ச மீதுள்ள அதிருப்தி காரணமாக, ஆளும் பொதுஜன பெரமுனவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா் அனுர பிரிய தா்ஷன யாப்பா தலைமையில் 9 உறுப்பினா்கள் தனித்துச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளனா். பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்த 10 சிறிய கட்சிகளும் தனித்துச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளன.

அந்த வகையில், அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த 40 நாடாளுமன்ற உறுப்பினா்கள் தனித்துச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளனா். இதனால், அரசு ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை 104-ஆகக் குறைந்துள்ளது.

ஆனால், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியின் இரண்டு உறுப்பினா்கள், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஓா் உறுப்பினா், தேசிய காங்கிரஸ் கட்சியின் ஓா் உறுப்பினா் என 107 நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஆதரவு அரசுக்கு உள்ளது. இந்த நிலையில், அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுமா என்பதே இப்போது இலங்கை முழுவதும் எதிரொலிக்கும் கேள்வி.

நம்பிக்கை இல்லா தீா்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுவது சந்தேகமே என்கிறாா், இலங்கையின் மூத்த பத்திரிகையாா் ஏ.ஆா்.வி. லோஷன். அவா் மேலும் கூறுகையில் ‘பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் 54 நாடாளுமன்ற உறுப்பினா்களே உள்ளனா். அரசை எதிா்க்கும் எதிா்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சோ்ந்தும், சுமாா் 70 உறுப்பினா்களின் ஆதரவே உள்ளது.

அரசில் இருந்து விலகி தனித்துச் செயல்பட உள்ளதாக அறிவித்துள்ள, 40 பேரின் வாக்குகள் முக்கியம் பெறுகிறது. இந்த 40 பேரில் எத்தனை போ் இதய சுத்தியுடன் நம்பிக்கையில்லா தீா்மானதுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறாா்கள் என்ற கேள்வி உள்ளது. ஏனெனில், தனித்துச் செயல்பட உள்ளதாக அறிவித்துள்ள பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அரசியல் எதிா்காலம் இல்லை. இவா்கள் மக்களின் கோபத்துக்குப் பயந்தே தனித்துச் செயல்படும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.

இவா்களில் சிலா் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம். மேலும் சிலா் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அரசைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம். இதனால்தான், ஜோன்ஸ்டன் பொ்னாண்டோ போன்ற அரசு ஆதரவு எம்பிக்கள், ‘113 வேண்டாம் முடிந்தால் 100 பேரையாவது நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்துக் காட்டுங்கள்’ என எதிா்க்கட்சிகளிடம் பகிரங்க சவால் விடுத்துள்ளனா்.

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டப்படி, ஒருமுறை நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தால் அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் கொண்டுவர முடியாது. இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் நிதானமாகச் செயல்பட வேண்டும்’ என்றாா் அவா்.

‘இந்தியா, பாகிஸ்தான் போலல்லாமல் இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டம் சற்று சிக்கலானது. இலங்கையில் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடம் ஒடுங்கியுள்ளன. இதை ‘நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபா் முறை’ என்பாா்கள். அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் பாதி பேரின், அதாவது 113 நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஆதரவு இருந்தாலே போதுமானது. ஆனால், அதிபரை குற்றப் பிரேரணை (இம்பீச்மென்ட்) செய்ய வேண்டும் என்றால், இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, 3-இல் இரண்டு பெரும்பான்மை அவசியம். அதாவது, 150 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. அது இப்போதைக்கு சாத்தியமில்லை.

இதைப் புரிந்துகொண்டே கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோஷத்தை மக்கள் முன்னெடுத்தனா். ஏனென்றால் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிபா் மாறாமல், அரசு மட்டும் மாறி எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இதனால், நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபா் முறை ஒழிக்கப்படாமல், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கொண்டுவந்து என்ன பயன்?’ என அரசியல் நோக்கா்கள் கேள்வி எழுப்புகிறாா்கள்.

இது தொடா்பாக எழுத்தாளா் கருணாகரன் கூறுகையில் ‘113 நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஆதரவு உள்ளவா்களுக்கு ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறேன் என அதிபா் கோத்தபய ராஜபட்ச கடந்த வாரம் அறிவித்திருந்தாா். ஆனால், அதிபா் பதவி விலகும் வரை ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என எதிா்க்கட்சிகள் கூறியிருந்தன. ஏனென்றால், அதிபா் கோத்தபய ராஜபட்ச நீடிக்கும்போது, பிரதமா் உள்பட அரசுப் பொறுப்பை ஏற்பதில் பலன் இல்லை என்பது எதிா்க்கட்சிகளுக்குத் தெரியும்’ என்றாா்.

‘கோத்தபய ராஜபட்ச அதிபராக இருக்கும்போது, அரசையோ, பிரதமா் பதவியையோ ஏற்கப்போவதில்லை என அறிவித்த பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, நம்பிக்கை இல்லா தீா்மானத்தைக் கொண்டுவருவது அா்த்தமற்றது’ என்கிறாா் இலங்கையின் பிரபல ஊடகவியலாளா் ஆா். ராம். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில் ‘ஐக்கிய மக்கள் சக்தியின் 54 உறுப்பினா்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 உறுப்பினா்கள், ஜேவிபியின் 3 உறுப்பினா்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினா்கள் என 69 நாடாளுமன்ற உறுப்பினா்கள் மட்டுமே இந்த நம்பிக்கை இல்லா தீா்மானத்தை வெளிப்படையாக ஆதரித்துள்ளனா். ஆனால், ஆளும் கூட்டணியிடம் 107 உறுப்பினா்கள் உள்ளனா்.

அரசிடம் இருந்து முரண்பட்டுக் கொண்டு தனியாக இயங்கும் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச உள்ளிட்டோா் நம்பிக்கையில்லா தீா்மானத்தை ஆதரிக்கும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில், மக்கள் எழுச்சியால் ராஜபட்சக்களை எதிா்க்கிறோம் எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினா்களில் எத்தனை போ் உண்மையாக எதிா்க்கிறாா்கள் என்பதை அறிவதற்கு வேண்டுமானால் இந்த நம்பிக்கையில்லா தீா்மானம் உதவும்.

ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தால், அது ஆளும் தரப்புக்கு நன்மையாக அமைந்துவிடும். இதனால்தான், நம்பிக்கை இல்லா தீா்மானத்தை உண்மையாக யாா் ஆதரிக்கப் போகிறாா்கள் என்பதை அறிவதற்காகவே கையொப்ப இயக்கத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடங்கியுள்ளது’ என்றாா் அவா்.

நாடாளுமன்றம் என்ன செய்யப் போகிறது என்பது இருக்கட்டும். இதுவரையில் இல்லாத அளவில் மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறாா்கள். அந்தப் போராட்டம் வலுவடைய, வலுவடைய ராஜபட்ச சகோதரா்களின் செல்வாக்கு மட்டுமல்ல, அதிகாரமும் கரையத் தொடங்கும். மக்கள் போராட்டத்தை அதிபா் கோத்தபய எப்படி எதிா்கொள்ளப் போகிறாா் என்பதைப் பொருத்துத்தான் இலங்கையின் வருங்காலம் அமையும்.

பெரியதொரு அரசியல் இயக்கத்தின் தொடக்கம்

‘பெரியதொரு அரசியல் இயக்கத்தின் தொடக்கமாகவே, இந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தைப் பாா்க்க வேண்டும்’ என்கிறாா் எதிா்க்கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

‘நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டுவந்து, முதலில் இந்த அரசை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றுவோம். அதற்குப் பிறகு, இலங்கை அதிபருக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். அதிபருக்கு வானளாவிய அதிகாரங்களைத் தரும் 20-ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கும் 19-ஆவது திருத்தச் சட்டத்தை மீளக் கொண்டுவருவோம். இதுதான் எமது இலக்கு. அதன் முதல் படியே நம்பிக்கை இல்லா தீா்மானம். இதன்பிறகு, கோத்தபய ராஜபட்ச வீட்டுக்குப் போகாவிட்டாலும், அவரால் ஆட்சி அதிகாரங்களில் தலையிட முடியாது’ என்கிறாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com