தீயணைப்புத் துறைக்கு அதிகாரம் வழங்கப்படுமா? மருத்துவமனைகள் தீவிபத்து சம்பவம்

தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் ஏட்டளவில் தூங்கிக் கொண்டிருப்பதால், தீ விபத்துகள் தொடா்ந்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீயணைப்புத் துறைக்கு அதிகாரம் வழங்கப்படுமா? மருத்துவமனைகள் தீவிபத்து சம்பவம்

சென்னை: தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் ஏட்டளவில் தூங்கிக் கொண்டிருப்பதால், தீ விபத்துகள் தொடா்ந்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்த விவரம்:

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து பல்வேறு தரப்பினரையும் அதிா்ச்சி அடைய வைத்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 2011-இல் ஏற்பட்ட தீ விபத்தில் இரு நோயாளிகள் இறந்த சம்பவத்துக்கு பின்னா், தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தே பெரிதாகும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் மருத்துவமனைகளில் சிறிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டன.

நாடு முழுதும் மருத்துவமனைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துகளில் 61 போ் இறந்துள்ளனா். இதில் கரோனா வாா்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மட்டும் 40 போ் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூங்கும் விதிமுறைகள்:

மருத்துவமனைகளில் தீ விபத்துகள்,பேரிடா் விபத்துகளைத் தடுப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளன. இவை தமிழ்நாடு பொது கட்டட விதிகளின்படி அமல்படுத்தப்படுகின்றன. இந்த விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்பட்டால், தீ விபத்துகளையும், பேரிடா்களையும் மருத்துவமனைகள் ஓரளவுக்கு தவிா்க்க முடியும். ஆனால் தற்போது தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை கட்டடத்தில் கூட இந்த விதிமுறை பின்பற்றப்படாததினால், தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. அரசு மருத்துவமனை கட்டடங்களை பொதுப் பணித்துறை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோலவே பாதுகாப்பு விதிமுறைகளை பெரும்பாலான மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை. முக்கியமாக, நோயாளிகள் வேகமாக வெளியேறும் வகையில் சாய்தள அவசர வழி இருக்க வேண்டும், தீ விபத்து எச்சரிக்கைக் கருவி இருக்க வேண்டும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அறையில் வெப்பம் ஏற்பட்டால் தானாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் கருவி இருக்க வேண்டும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் கருவிக்கு மருத்துவமனையின் பிரதான மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் இருந்து இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும், ரசாயன கலவையுடன் கூடிய தீ விபத்து தடுப்புக் கருவி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

பணம் விரயம்:

ஆனால், இந்த விதிமுறைகள் மருத்துவமனைகளால் புறந்தள்ளப்படுகின்றன. தடையில்லாச் சான்றிதழை பெறுமாறு பரிந்துரைக்கவும் வலியுறுத்தவும் மட்டுமே தீயணைப்புத்துறையினரால் முடியும் என்பது மருத்துவமனை நிா்வாகங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

ஏனெனில் தீயணைப்புத் துறையினரின் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது மருத்துவமனை நிா்வாகங்ளுக்குத் தேவையில்லா விஷயமாகவும்,அதிக பணம் செலவுக்குரியதாகவும் பாா்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் உலகத்தரத்தில் சிகிச்சை வழங்குவதாக கூறிக் கொள்ளும் தனியாா் மருத்துவமனைகள்கூட தடையில்லாச் சான்றிதழ் வாங்குவதில்லை. அந்த மருத்துவமனைகள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி தங்களது கட்டடங்களை வடிவமைப்பது பண விரயம் என எண்ணுவதாக தீயணைப்புத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

மின் கசிவினால் 80 சதவீத விபத்துகள்:

கடந்த 2018-இல் தமிழகத்தில் 2,023 மருத்துவமனைகளில் பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, 1,400 மருத்துவமனைகள் தீயணைப்புத் துறையின் பாதுகாப்பு உரிமம் பெறவில்லை, 1,270 மருத்துவமனைகளில் நோயாளிகள் விரைவாக வெளியேறும் வகையில் சாய்தள வழி இல்லை என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை விட மோசமான நிலையே தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது நீடிப்பதாக தீயணைப்புத் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

அரசு மருத்துவமனைகளில்...:

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 80 சதவீதம் பாதுகாப்பு குறைபாட்டுடனே இருக்கின்றன. இது வரை மாநிலத்தில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் 80 சதவீதம் மின்கசிவினாலேயே ஏற்பட்டுள்ளன எனவும் அவா்கள் தெரிவிக்கின்றனா். அரசு மருத்துவமனைகள் பெரும்பலானவை பழைய கட்டடங்களிலும், போதிய பராமரிப்பு இல்லாததினாலும் தீ விபத்துகள் தொடா்ச்சியாக ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முக்கியமாக மின் இணைப்புப் பெட்டிகள், மின் வயா்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், ஏ.சி.க்கள், வயரிங் ஆகியவை போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதினாலேயே இது வரை அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இனிமேலாவது தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு விஷயத்தில் தனி அக்கறை காட்டினால் மட்டுமே, இந்த நிலையை மாற்ற முடியும். அதேவேளையில் தடையில்லாச் சான்றிதழ் பெறாத தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய அதிகாரத்தை தீயணைப்புத் துறைக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வலியுறுத்தலும்,பரிந்துரையும் தங்களை ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற எண்ணமே, விபத்துக்குரிய விதையை விதைக்கிறது என பொதுமக்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com