புதிய மின் கட்டண முன்மொழிவு: மறுபரிசீலனை செய்யப்படுமா?

மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்துக் கேட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கும், தொழில் புரிவோருக்கும் புதிய மின் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மறுபரிசீலனை செய்ய வே
புதிய மின் கட்டண முன்மொழிவு: மறுபரிசீலனை செய்யப்படுமா?

மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்துக் கேட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கும், தொழில் புரிவோருக்கும் புதிய மின் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக மின்வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கட்டண விவரங்கள் குறித்த தங்களது கருத்துகளை பொதுமக்கள், தொழில் துறையினர் தெரிவிக்க கருத்துக் கேட்பு கூட்டம் கோவை, மதுரையில் நிறைவடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் திங்கள்கிழமை (ஆக. 22) கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மின் கட்டணம் ஓர் அலகுக்கு (யூனிட்) 27.50 காசு முதல் ரூ. 1.25 வரை உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மின் கட்டணமும் உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் அதைத் தாங்கிக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, புதிய மின் கட்டண உயர்வு முன்மொழிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழில் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் வலியுறுத்தியுள்ளனர்.

எழும் கேள்விகள்: புதிய மின் கட்டண முன்மொழிவு குறித்து எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவ கெளரவ செயலர் ஆ.சங்கர் கூறியது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய முன்மொழிவின்படி வீடுகள், குடியிருப்புகளுக்கு கூடுதல் மின் இணைப்பு பெற வேண்டும் என்றால் அந்த வீட்டை வேறொரு குடும்பத்துக்கு வாடகைக்கோ, குத்தகைக்கோ விட்டிருந்தால் மட்டுமே இணைப்பு பெற முடியும். அவ்வாறு இணைப்பு பெற, வாடகைதாரர் ஒப்பந்தம், குத்தகை பத்திரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பல குடும்பங்களில் சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர்கள் ஒரே குடியிருப்பின் வெவ்வேறு பாகங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு வசிப்பவர்கள் தனித்தனியே குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். அவர்களை இருவேறு குடும்பங்களாகத்தான் கருத வேண்டும். அப்படி இருக்கும்போது, அவர்கள் அனைவரையும் எப்படி ஒரே குடும்பமாக மின் வாரியம் கருத முடியும்?

மேலும், புதிய விதிமுறைகளின்படி பெறப்படும் கூடுதல் மின் இணைப்புக்கு நிலைக் கட்டணமாக ரூ. 450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடகைதாரர் இரு மாதங்களுக்கு ஒருமுறை தான் பயன்படுத்தும் மின்சார யூனிட்டுகளுக்கான கட்டணத்தோடு சேர்த்து, இந்த நிலைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டி வரும். ஆனால், தனி வீட்டில் வசிக்கும் வாடகைதாரர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அவ்வாறு இருப்பின், வாடகை வீட்டுக்குச் செல்வோர் அனைவரும் தனி வீடு பார்த்துச் செல்ல வேண்டுமென மின் வாரியம் கருதுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, கூடுதல் மின் இணைப்பு பெற்றால், முதல் 100 யூனிட்டுக்கும் கட்டணம் வசூலிக்கும் நோக்கத்துக்காகவே இந்த நிலைக் கட்டண முன்மொழிவு உள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. எனவே, இந்த முன்மொழிவை ரத்து செய்ய வேண்டும்.

தனது குடியிருப்புக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்பதை நுகர்வோர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், குடியிருப்பின் பரப்பளவை வைத்து மின்சாரத் தேவை வகையை மின்வாரியமே நிர்ணயம் செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது. 

இதை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், நகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புக்குத் தேவையான மின்சாரத் தேவையும், ஊரகப் பகுதியில் உள்ள குடியிருப்புக்குத் தேவையான மின்சார அளவும் வேறுபடும்.

சேவைக் கட்டணம், மீட்டர் காப்புத் தொகை, பதிவுக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம் என புதிதாக மும்முனை மின் இணைப்பு (புதைவட இணைப்பு) பெறுவதற்கான கட்டணம் கடந்த 2018-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ. 7,450-ஆக (4 கிலோவாட்) இருந்தது. அந்தக் கட்டணம் 2019 அக்டோபரில் ரூ. 15,950-ஆக (4 கிலோவாட்) அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் புதிய முன்மொழிவில் அந்தக் கட்டணம்  ரூ. 54 ஆயிரமாக (8 கிலோவாட்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இது 625 சதவீதம் அதிகம் ஆகும். இதே, புதிய ஒருமுனை மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் 2018-இல் ரூ.1,600-ஆக இருந்தது, 2019, அக்டோபரில் ரூ. 6,400- ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய முன்மொழிவில் ரூ. 9,620-ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2018-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 501 சதவீதம் அதிகம் ஆகும்.

புதிய முன்மொழிவின்படி, இரு மாதங்களுக்குச் சேர்த்து வீடுகளில் 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர்தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் ஒருவர் ரூ. 1,130 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டண உயர்வுக்குப் பின்னர் அவர் ரூ. 1,725 செலுத்த வேண்டும். இது, 52.65 சதவீதம் அதிகம் ஆகும். எனவே, புதிய மின் கட்டண முன்மொழிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

தொழில் துறையினருக்கு பாதிப்பு: தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் டி.ஆர். தமிழரசு கூறியது: புதிய மின் கட்டண முன்மொழிவுப்படி பார்த்தால் தமிழக வரலாற்றில் இந்த அளவுக்கு இதுவரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது இல்லை என்பதை அறிய முடிகிறது. அனைத்துப் பிரிவினருக்கும் 20 சதவீதம், அதிகபட்சமாக 52 சதவீதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது.

தற்போதைய மின் கட்டண உயர்வு சிறு, குறு தொழில் செய்வோர், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்துத் துறையினரையும் பாதிக்கக் கூடிய சூழல் உருவாவதால், அரசு உத்தேசித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

தமிழகத்தில் மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய வகையில் முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், அனைத்துத் தரப்பினரையும் அதிகம் பாதிக்காத வகையில் மின் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com