2022-ல் கடும் சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்! டிவிட்டரில் காரசார விவாதம்!

ஆசிய நாடுகளிலேயே கடந்த 2022ஆம் ஆண்டில் மிக மோசமான சரிவை சந்தித்திருப்பது இந்திய ரூபாயின் மதிப்பு என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
2022-ல் கடும் சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்! டிவிட்டரில் காரசார விவாதம்!
2022-ல் கடும் சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்! டிவிட்டரில் காரசார விவாதம்!

ஆசிய நாடுகளிலேயே கடந்த 2022ஆம் ஆண்டில் மிக மோசமான சரிவை சந்தித்திருப்பது இந்திய ரூபாயின் மதிப்பு என்றும், இது கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

பணவீக்கத்தைக் குறைத்து அமெரிக்க டாலரின் மதிப்பை நிலைநிறுத்த அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் எடுத்த தீவிர பணக் கொள்கை காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால், அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2022ஆம் ஆண்டில் மிகக் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.33 காசுகளாக இருந்தநிலையில், இது தொடர்ச்சியாக சரிவடைந்து ஒட்டுமொத்தமாக 11.4 சதவீதம் சரிந்து, 2022ஆம் ஆண்டின் இறுதியில் 82.72 காசுகளாக சரிவடைந்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க டாலர் சந்தித்த மிகப்பெரிய உச்சம் 2022ஆம் ஆண்டில் பதிவாகியிருக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆசிய நாடுகளிலேயே இந்திய ரூபாய் தான் 2022ஆம் ஆண்டில் மிக மோசமான முடிவை சந்தித்திருக்கிறது. இது அமெரிக்க டாலருக்கு நிகராக 10.14 சதவீத சரிவை அடைந்திருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க.. மஸ்தான் கொலைக்கு முன் முக்கிய குற்றவாளி பார்த்த கொலை விடியோக்கள்

இதுபோல, டிவிட்டர் பக்கத்தில், சிலர், இந்திய ரூபாய் மிக மோசமாக இல்லை, மற்ற நாடுகளின் கரன்சிகள்தான் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்ற விமரிசனத்தையும் முன் வைத்துள்ளனர்.

இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக அதாவது ஜனவரி 3ஆம் தேதி 74.3 காசுகளாகவும் ஏப்ரல் 1ஆம் தேதி 75.8 காசுகளாகவும் ஜூலை 1ஆம் தேதி 79 ரூபாயாகவும் அக்டோபர் 3ஆம் தேதி 81.7 காசுகளகாவும் டிசம்பர் 31ஆம் தேதி 82.72 காசுகளாகவும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஒரே ஆண்டில், இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்திருப்பது பொருளாதார நிபுணர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அளவுக்கு சரிந்திருப்பது, கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ஒவ்வொரு நாட்டின் ரூபாய்களின் மதிப்பு சரிவு பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில், ஜப்பான் நாட்டின் யென் இடம்பெற்றுள்ளது. இது 12 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, சீனாவின் யுவான், இந்தோனேசியாவின் ரூபாய், பிலிப்பின்சின் பேசோ என பல நாடுகளின் ரூபாய் மதிப்புகளும் சரிவடைந்தன. ஆனால் சிங்கப்பூர் டாலர் மதிப்பு மட்டும் சற்று அதிகரித்திருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ராம் ஃபெரான் பாண்டே இதற்கெல்லாம் பதில் அளித்துள்ளார்.

அதாவது, இலங்கையின் ரூபாய் மதிப்பு 82%, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 27 சதவீதம், வங்கதேச ரூபாய் மதிப்பு 20 சதவீதம், நேபாளத்தின் ரூபாய் மதிப்பு 10.90 சதவீதம் என சரிந்திருப்பதாகவும், இவையெல்லாம் ஆசிய நாடுகளாகத் தெரியவில்லையா? இல்லை இந்த நாடுகள் ஆசியாவில் இல்லையா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆசியாவிலேயே இந்திய ரூபாயின் மதிப்புதான் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் அவர் அதிரடியாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இவர் இப்படிச் சொல்ல மத்திய நிதியமைச்சர் சொல்வது என்ன?

அமெரிக்க டாலா் மதிப்பு வலுவடைந்து வருகிறதே தவிர இந்திய ரூபாய் மதிப்பு சரிவடையவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பணவீக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. கட்டுப்படுத்தக் கூடிய அளவிலேயே பணவீக்கம் உள்ளது. பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவடையவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வேகமாக வலுவடைந்து வருவதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதைப் போலத் தெரிகிறது. உலகின் அனைத்து நாடுகளின் செலாவணிகளும் அமெரிக்க டாலருக்கு எதிராக சரிவடையும் தோற்றத்தைப் பெற்றுள்ளன. மற்ற நாடுகளின் செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வந்த நிலையில், இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நடவடிக்கைகள் நிலையில்லாத்தன்மையை சரிசெய்வதற்காக மட்டுமே அன்றி இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதைத் தடுப்பதற்காக அல்ல. அத்தகைய நடவடிக்கைகளை சந்தையில் தலையிட்டு ஆா்பிஐ மேற்கொள்ள முடியாது என்று விளக்கம் அளித்திருந்தார்.

ரஷியா - உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட எண்ணெய் விலை மாற்றமும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணியாக மாறியது. இதனால், இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத உயர்வை அடைந்து செப்டம்பர் மாதத்தில் கடுமையாக உயர்ந்திருந்தது.

மறுபக்கம் இந்திய பொருள்கள் ஏற்றுமதி வெகுவாக பாதித்து, அதுவும் இந்திய ரூபாயின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிதியாண்டின் வரும் காலாண்டிலாவது இந்திய ரூபாயின் மதிப்பு 81.50 - 83.50 என்ற விகிதத்தில் நிலைநிறுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

2022ஆம் ஆண்டு இந்திய ரூபாய்க்கு நல்ல ஆண்டாக இல்லாத நிலையில், 2023ஆம் ஆண்டு, சந்தை பங்கேற்பாளர்கள் ரூபாய் மதிப்பு உயர்வுடன் வணிகமாகும் என்று நம்புகிறார்கள், இதன் மூலம் பொருட்களின் விலைகளை தளர்த்துவதில் இருந்து நிவாரணம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து வாங்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஆனால், 2023ஆம் ஆண்டில் பல நிலையற்ற தன்மைகள், சில இறுக்கமான பணக்கொள்கைகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏற்கனவே சிக்கலில் இருக்கும் நாடுகளின் எல்லைகளுக்கு இடையேயான பிரச்னைகள், பங்குச் சந்தைகளில் ஏற்படும் தாக்கம் போன்றவை இந்திய ரூபாய்க்கு சற்று சவாலைத் தரும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா தனது வட்டி விகிதம் உயா்த்தப்படும் வேகத்தைக் குறைத்தவுடன் இந்திய ரூபாய் மதிப்பு ஸ்திரமடையும் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள டக்லஸ்.டபிள்யூ.டைமண்ட் தெரிவித்துள்ளாா்.

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சோ்ந்த டக்ளஸ்.டபிள்யூ.டைமண்ட் உள்பட மூவருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு தொடா்ந்து சரிவது குறித்து டக்ளஸ்.டபிள்யூ.டைமண்ட் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது, ஒரு நாட்டின் செலாவணிக்கு நிகரான மற்றொரு நாட்டின் செலாவணி மதிப்பு குறித்து கணிப்பது கடினம். ஆனால் தனது வட்டி விகிதங்களை எதிா்பாராத வகையில், அமெரிக்கா உயா்த்தும்போதெல்லாம் டாலரின் மதிப்பு அதிகரிக்கிறது. தனது வட்டி விகிதம் உயா்த்தப்படும் வேகத்தை அமெரிக்கா குறைத்தவுடன் இந்திய ரூபாய் மதிப்பு ஸ்திரமடையும் என்று தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com