புத்தகக் காட்சி ஒத்திவைப்பு: நொந்து நூலான பதிப்புத் துறையினர்
By எம். பாண்டியராஜன் | Published On : 01st January 2022 02:34 PM | Last Updated : 02nd January 2022 04:11 PM | அ+அ அ- |

நிறுத்தப்படாத கவுன்ட் டவுன்!
பல லட்சம் வாசகர்களையும் பல நூறு பதிப்பகங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது புத்தகக் காட்சி ஒத்திவைப்பு என்ற தமிழக அரசின் திடீர் அறிவிப்பு.
பொதுவான சூழலுடன் கரோனா நோய்த் தொற்றும் சேர்ந்துகொள்ள கடந்த இரு ஆண்டுகளாகவே பதிப்புத் தொழில் மிக மோசமான நிலையில்தான் உழன்றுகொண்டிருக்கிறது.
ஏற்கெனவே அச்சுப் புத்தக வாசிப்பு குறைந்து எண்மவழிப் பதிப்புகளை நோக்கி வாசகர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த இரு ஆண்டுகளில் பல காலம் விற்பனையகங்களும் பூட்டிக்கிடக்க, அனைத்துப் பதிப்பாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது இந்த சென்னைப் புத்தகக் காட்சி விற்பனையைத்தான்.
சென்னை நந்தனம் திடலில் ஜன. 6 ஆம் தேதி தொடங்கி, 23 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்தக் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. தொடங்க வேண்டியது மட்டும்தான் மிச்சம்.
இதையும் படிக்க | கரோனாவும் பள்ளிகளும்: மாணவர்கள் எதிர்கொண்ட சவால்கள்!
பதிப்பகங்களுக்குக் கடைகள் ஒதுக்குவதற்காக திங்கள்கிழமை குலுக்கல் நடத்தப்படவிருந்தது.
கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைக்கவிருந்த நிலையில், அழைப்பிதழ்கள் எல்லாம்கூட விநியோகிக்கப்படத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில்தான், ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை என, திடீர் அறிவிப்பாகப் புத்தகக் காட்சி ஒத்திவைக்கப்படுவதாக அரசுத் தரப்பில் அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
புத்தகக் காட்சியில் ஏறத்தாழ 900 கடைகள். பல நூறு பதிப்பாளர்கள். இந்தப் புத்தகக் காட்சிக்காகவே, புதிய புத்தகங்கள், மறுபதிப்புகள் எனப் பதிப்பகங்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கடன்களை (பெரும்பாலும் வட்டிக்கு) வாங்கி அச்சிட்டு, முதலீடு செய்திருக்கின்றன, புத்தகக் காட்சி விற்பனைக்குப் பின் திருப்பித் தந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில்.
சுமார் ஒரு கோடி ரூபாய் வரையிலும் செலவு செய்து காட்சி அரங்கு ஏற்பாடுகளையெல்லாமும்கூட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) செய்து முடித்துவிட்டது, ரிப்பன் வெட்ட வேண்டியதுதான் பாக்கி.
தொடங்க சில நாள்களே உள்ள நிலையில் திடீரென புத்தகக் காட்சி ஒத்திவைப்பு அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும், அல்லது வாரக் கணக்கிலா, அதுவரையிலும் இந்த அரங்கை எப்படிக் காப்பது, இதற்காகச் செலவிட்டது என்னவாகும்? புத்தகக் காட்சி உடனடியாக நடைபெற வாய்ப்புள்ளதா, இல்லையா? ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கிறார்கள் பதிப்புத் துறையினர்.
இதையும் படிக்க | கரோனா இரண்டாம் அலை: நினைவுகளிலிருந்து கற்றதும் பெற்றதும்
கெடுவினையாக ஒருவேளை ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவிட்டால், ஒரேயடியாக புத்தகக் காட்சியை இப்போதைக்கு நடத்த முடியாமலேயே போய்விடுமோ என்ற அச்சமும் பரவலாக நிலவுகிறது. விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த புத்தக அச்சிடும் வேலைகள் யாவும் அடுத்தது என்னவெனத் தெரியாததால், புத்தாண்டின் முதல் நாளில், பிரேக் அடித்திருக்கின்றன.
கடைகள் எல்லாம் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்படும்போது புத்தகக் காட்சியையும் அதே அளவுகோலில் வாசகர்களை அனுமதித்து, திட்டமிட்டபடி நடத்தலாமே?
புத்தகக் காட்சியிலேயும் திரையரங்குகளைப் போல தடுப்பூசி சான்றிதழ்களைக் கேட்கலாம், வாசலிலேயே தடுப்பூசி முகாம்களையும்கூட நடத்தலாம், இதன் மூலம் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செய்யலாம், அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், நடத்த வேண்டும் என அரசு நினைத்தால் நடத்தலாம்!
இனி அடுத்த அறிவிப்பு எப்போது வருமோ? சில நாள்களில் தொடங்கும் வாய்ப்புண்டா? அல்லது பொங்கல் விடுமுறைகளைத் தாண்டிவிடுமா? பொங்கல் விடுமுறையைத் தாண்டி நடத்தினால் எந்த அளவுக்கு வாசகர்கள் ஆதரவு இருக்கும்? புதிதாக அச்சிட்ட புத்தகக் குவியல்களை எங்கே வைத்துக் காப்பது?
ஏதோ நம்பிக்கையில் இன்னமும் பபாசியின் சென்னைப் புத்தகக் காட்சி இணையதளத்தில் கவுன்ட் டவுன் மட்டும் நிறுத்தப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
கருணை வைத்து, ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து, எப்படியாவது சில நாள்கள் தள்ளியேனும் தொடங்கி, திட்டமிட்டபடி சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த அரசு அனுமதித்துவிடாதா என்று காத்திருக்கிறார்கள், அரசின் ஒற்றை அறிவிப்பில் நொந்து நூலாகிக் கிடக்கும் பதிப்புத் துறையினர்.
இதையும் படிக்க | ஜெய் பீமும் தேவை, ருத்ர தாண்டவமும் தேவை : ஏன் ?