பெரும் தொற்றிலிருந்து சாதாரண காய்ச்சலாகிறதா, கரோனா?
By DIN | Published On : 18th January 2022 05:23 PM | Last Updated : 18th January 2022 06:22 PM | அ+அ அ- |

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி வருகிறது. புத்தாண்டு தொடங்கியதிலிருந்து யாரும் எதிர்பார்த்திராத வகையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் மீண்டும் உச்சம் தொடத் தொடங்கின. கடந்த இரு கரோனா அலைகள் ஏப்ரல், மே மாதங்களில் உச்சம் தொட்ட நிலையில், இந்த முறை ஜனவரி மாதத்திலேயே உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரிக்க, மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்கூட்டியே உச்சம் தொட்டுவிட்டது என்றாலும், முதலிரண்டு கரோனா அலைகளில் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத்தை ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வகை கரோனா அலையினால் ஏற்பட்டுள்ள தீவிரம் மிகவும் குறைவாகவே உள்ளது. பாதிப்பு எண்ணிக்கைகள் மட்டுமே அதிகரிக்கின்றன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான தேவைகளும், உயிரிழப்புகளும் முதலிரண்டு அலைகளைக் காட்டிலும் இந்த அலையில் குறைவாகவே இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளின் தரவுகளும் இதற்கு சான்றுகளாக உள்ளன.
ஸ்பெயின்:
பாதிப்புகள் | உயிரிழப்புகள் | |
ஜனவரி 18, 2021 - ஜனவரி 25, 2021 | 2,12,815 | 3,753 |
டிசம்பர் 27, 2021 - ஜனவரி 3, 2022 | 7,57,606 | 542 |
ஸ்விட்சர்லாந்து:
பாதிப்புகள் | உயிரிழப்புகள் | |
நவம்பர் 2, 2020 - நவம்பர் 9, 2020 | 40,255 | 633 |
டிசம்பர் 27, 2021 - ஜனவரி 3, 2022 | 1,79,913 | 98 |
ஐரோப்பா நாடுகள்:
பாதிப்புகள் | உயிரிழப்புகள் | |
டிசம்பர் 28, 2020 - ஜனவரி 4, 2021 | 18,94,757 | 37,787 |
டிசம்பர் 28, 2021 - ஜனவரி 4, 2022 | 75,50,634 | 21,225 |
இந்தத் தரவுகளே, கரோனாவைப் பெருந்தொற்றாக அணுகும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பது போன்ற குரல்களை எழுப்பியுள்ளது. கரோனாவை சாதாரண காய்ச்சலைப்போல் அணுகுவதற்கான திசையை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கடந்த வாரத்திலிருந்து ஐரோப்ப நாடுகள் தெரிவிக்கத் தொடங்கிவிட்டன.
வானொலி நேர்காணல் ஒன்றில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறுகையில், "கரோனா தொற்றை இதுவரை கையாண்ட அளவுருகளிலிருந்து மாறுபட்ட வகையில் கையாளுவது குறித்து ஐரோப்பிய அரசுகள் மதிப்பிட வேண்டும்" என்றார். இவரது கருத்தைப்போலவே ஸ்விட்சர்லாந்து சுகாதாரத் துறையை உள்ளடக்கிய உள்துறை அமைச்சர் அலென் பெர்செட்டின் கடந்தவார செய்தியாளர் சந்திப்பும் இருந்தது. கரோனாவைப் பெருந்தொற்றாக எதிர்கொள்வதிலிருந்து சாதாரண காய்ச்சலைப்போல அணுகி அதனுடன் வாழப் பழகிக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார் அவர்.
ஐரோப்ப நாடுகள் வரிசையில் இந்தியாவில் இந்தக் குரல்கள் இன்னும் எழத் தொடங்கவில்லை என்றபோதிலும் இந்தியாவின் நிலையும் இதேதான். பாதிப்பு எண்ணிக்கைகள் மட்டுமே அதிகரிக்கின்றன என்பதற்கு இந்தியாவில் ஆகச் சிறந்த உதாரணம் தில்லிதான். கடந்த 9-ம் தேதி தில்லி கரோனா பாதிப்பு குறித்து விளக்கமளித்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாதிப்பு எண்ணிக்கைகள் மட்டுமே அதிகரிக்கின்றன என்பதற்கு முக்கியமான தரவை முன்வைத்தார்.
தில்லி உதாரணம்:
"கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் இரண்டாம் அலையின்போது 20 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது 341 பேர் உயிரிழந்தனர். ஆனால், நேற்று (ஜனவரி 8, 2022) 20 ஆயிரம் பாதிப்புகள் பதிவானபோதிலும், 7 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன" என்றார் அவர்.
அதேசமயம், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களில் 75 சதவிகிதத்தினர் தடுப்பூசி செலுத்தாதவர்கள், 90 சதவிகிதத்தினர் இணை நோய் உள்ளவர்கள் என்கிறார் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்.
இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளபோதிலும், முதலிரண்டு அலைகளின்போது அமல்படுத்தப்பட்ட கடுமையான முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாமலிருப்பதற்குக் காரணம் பாதிப்பின் தீவிரத்தன்மை.
இந்தத் தரவுகள் இந்திய மக்கள் பார்வைக்கு செல்கிறதோ இல்லையோ, ஐரோப்பாவில் எழுந்ததைப்போல இந்தியாவிலும் 'வாழப் பழக வேண்டும்' என்ற அதிகாரத்தின் குரல்களுக்குக் காத்திருக்காமல், தாமே அந்தப் பாதையில் முன்செல்லத் தொடங்கிவிட்டனர். அரசின் கட்டுப்பாடுகள் காரணமாகவே இன்னும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்படாமல் இருப்பது போன்ற சில கட்டுப்பாடுகள் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மற்றபடி, கரோனா காலத்தில் காக்க வந்த கடவுளாக காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் டோலோ 650 மாத்திரையையே மக்கள் அதிகம் நம்பியிருப்பது வாழப் பழகிவிட்டார்கள் என்பதையே உணர்த்துகிறது.
பெருந்தொற்று அவதரித்த மார்ச் 2020 முதல் 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகம். விற்பனையான டோலோ 650 மாத்திரைகளை நிற்க வைத்து அடுக்கினால் புர்ஜ் கலிஃபாவைவிட 63 ஆயிரம் மடங்கு உயரமானதாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற குரல்களும், வாழப் பழகிவிட்டார்கள் என்கிற நிதர்சனமும் ஆரோக்கியமானதா, ஊக்குவிக்கப்பட வேண்டியதா என்றால் அதற்கு அறிவியல்பூர்வ ஆய்வுகளின் முடிவுகளிடம்தான் பதில்கள் உள்ளன.
கரோனாவின் தீவிரத்தன்மை குறைந்துவிட்டது என்பது நிதர்சனம்தான். ஆனால், அடுத்தடுத்து அலைகள் வருமா, வராதா? ஒருவேளை அடுத்தடுத்து அலைகள் வந்தாலும் அதன் தீவிரத்தன்மையும் இதேபோல வீரியம் குறைந்ததாகவே இருக்குமா? தற்போதுள்ள தீவிரத்தன்மையின் குறைவுக்கு கரோனாவின் வகை மட்டுமே காரணமா அல்லது தடுப்பூசியும் காரணமா? தடுப்பூசி காரணம் எனில், இரண்டு தவணை தடுப்பூசிக்குப் பிறகு தற்போது பூஸ்டர் தடுப்பூசி வந்துள்ளது, பூஸ்டர் தடுப்பூசியும் நின்றுவிடுமா அல்லது எதிர்காலங்களில் மேற்கொண்டு கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா? என ஏராளமான கேள்விகள் நம்முன் உள்ளன.
இதற்கான பதில்கள் வரும் வரை, உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கைக்கும் அரசின் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதே சமூகப் பொறுப்பாக இருக்கும்.
"நோய் பற்றிய நிச்சயமற்றத் தன்மை இன்னும் நிறைய இருக்கிறது. வைரஸ் வேகமாகப் புதிதாக உருவெடுத்து புதிய சவால்களை முன்வைக்கிறது. இதை வெறும் தொற்றாகக் கருதுவதற்கான நிலையில் நாம் இல்லை."
இது சாதாரண காய்ச்சலாக அணுக வேண்டும் என்பது போன்ற பேச்சுகள் வரத் தொடங்கியவுடன், உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான அவசரப் பிரிவு மூத்த அதிகாரி கேத்ரின் ஸ்மால்வுட் கூறியது.
என்ன நடந்தாலும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர்வது குறித்து வல்லுநர்கள் எதுவும் கூறாத வரை முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதுமே நம் கடமையாக இருக்கட்டும்.