பாஜகவினருக்கு துப்பாக்கி என்ன கைக்கோலா?

கோலை எடுப்பதைப் போல பிகாரிலுள்ள அரசியல் பெரும்புள்ளிகள் எதற்கெடுத்தாலும் துப்பாக்கிகளை எடுப்பது தொடர்கதையாகவே உள்ளது.
பாஜகவினருக்கு துப்பாக்கி என்ன கைக்கோலா?

பிகாரில் தோட்டத்தில் நுழைந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை விரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான நாராயண் பிரசாத் மகன் பப்லு குமாரின்  செயல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கோலை எடுப்பதைப் போல பிகாரிலுள்ள அரசியல் பெரும்புள்ளிகள் எதற்கெடுத்தாலும் துப்பாக்கிகளை எடுப்பது இன்று நேற்று அல்லாமல், தொடர்கதையாகவே அரங்கேறி வருகிறது. 

அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்த ரெளடிகள் கலாசாரம்  முடுக்கிவிடப்படுவதைப் போல, தங்களது அதிகாரத்தைத்  தக்க வைத்துக்கொள்ள அல்லது பாதுகாத்துக் கொள்ள அரசியல்வாதிகள் துப்பாக்கி கலாசாரத்தைக் கையிலெடுக்கின்றனர்.

பிகாரிலுள்ள 31 அமைச்சர்களில் 16 பேர் அரசு வழங்கும் பாதுகாப்பு அல்லாமல், தனியாக பிஸ்டல், ரைபிள்  என துப்பாக்கிகள் போன்றவற்றை வைத்திருப்பது அவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டபோது தெரியவந்துள்ளது. ஏனெனில், ஒவ்வொரு துப்பாக்கியும் 2 முதல் 6 லட்சம் வரை மதிப்புள்ளவை. அவர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளின் விலை, வகை குறித்து ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரிக்கெட் விளையாடியதற்கு துப்பாக்கியால் சுடுவதா?

பிகார் மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சராக நாராயண் பிரசாத் பதவி வகித்து வருகிறார். இவரது சொத்துகளை அவரது மகன் நாராயண் பிரசாத் நிர்வகித்து வருகிறார்.

மேற்கு பிகாரின் சம்பரான் மாவட்டத்திலுள்ள ஹரிதா என்ற கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இதில் மாமரங்கள் இருந்த தோப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். 

இதனைக் கண்ட பப்லு, தனது பணியாளர்களுடன் சிறுவர்களை விரட்ட தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது சிறுவர்களை விரட்டுவதற்காக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அலறியடித்து ஓடிய சிறுவர்களில் சிலர் காயமடைந்தனர். ஒருவர் குண்டடிபட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரின் மகன் பப்லு, கையில் துப்பாக்கியுடன் சிறுவர்களை நோக்கிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சப்தம் கேட்டு அப்பகுதியில் குவிந்த மக்கள் பப்லுவையும் அவருடன் இருந்த பணியாளர்களையும் பிடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பப்லுவைத் தாக்கி, அவரது கார் போன்றவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். சிலர்  அமைச்சரின் வீட்டையும் முற்றுகையிட்டனர். 

பப்லு குமாரைத் தாக்கும் கிராம மக்கள்
பப்லு குமாரைத் தாக்கும் கிராம மக்கள்

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், தப்பியோடிய பப்லுவைப் பிடித்து துப்பாக்கியை கைப்பற்றி, அதில் இருந்த குண்டுகளையும் பறிமுதல் செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அந்தப் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

கிராம மக்களை சமாதானப்படுத்தும் காவல் துறை
கிராம மக்களை சமாதானப்படுத்தும் காவல் துறை

இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாராயண் பிரசாத், கிராம மக்களையே குற்றவாளிகளாக சித்திரித்துள்ளார். எனது நிலத்தைக் கிராம மக்கள் ஆக்கிரமிக்க முயற்சித்தனர். அதனை எனது குடும்பத்தினர் தடுத்தனர். ஆனால் கிராம மக்கள் எனது குடும்பத்தினரைத் தாக்கினர். கிராமத்தினர் தாக்கியதால்தான் எனது மகன் கையில் துப்பாக்கியுடன் சென்றான். ஆனால் எனது மகனைக் கிராம மக்கள் கற்களால் அடித்து விரட்டியுள்ளனர். எனது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் நாராயண் பிரசாத்.

பாஜகவினர் துப்பாக்கியை எடுப்பது புதிதல்ல!

உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைவரான நிதின் குப்தா, பட்டாசுக்கு பதில் துப்பாக்கியால் சுட்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இவர் சஹரான்பூர் மாவட்ட பாஜக பொறுப்பாளர். இதற்காக அவர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் அகில இந்திய இந்து மகாசபை என்ற அமைப்பின் தலைவரான பூஜா பாண்டே காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டார். இதனை விடியோவாகவும்  பகிர்ந்தனர். இதற்காக அவரது கணவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

2020 ஆம் ஆண்டு கரோனா முதல் அலையின்போது வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். விளக்கு ஏற்றும்போது சிலர்  பட்டாசுகளையும் வெடித்தனர். அப்போது பாஜக மகளிரணி தலைவி மஞ்சு திவாரி என்பவர் வீட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்துவந்து வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனை அவர் விடியோவாகவும் பகிர்ந்தார்.

 2021 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் ஜன் ஆசிர்வாத் யாத்திரையின்போது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டே தங்களது யாத்திரையைத் தொடங்கினர். இதில் கலந்துகொள்ள வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சருக்கு துப்பாக்கியால் சுட்டே வரவேற்பு அளிக்கப்பட்டது.

2020 துப்பாக்கிச்சூடு என்றாலே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மறக்க முடியாது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவரை கட்சியிலிருந்து நீக்கி, பின்னணி அறியாமல்  கட்சியில் சேர்த்துவிட்டதாக பாஜக விளக்கம் அளித்திருந்தது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களின் பட்டியலில் துப்பாக்கிகளைச் சேர்க்கும் அளவிற்கு அதிக விலைமதிப்புள்ள துப்பாக்கிகளை பிகார் மாநில அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்துகின்றனர். 

இவ்வாறு கட்சியில் உள்ள பலரும் சர்வசாதாரணமாகத் துப்பாக்கியைப்  பயன்படுத்துவது பாஜக மேலிடத்திற்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இதுவரை பாதுகாப்பிற்காக பாஜகவினர் துப்பாக்கியை எடுத்ததாக எந்த செய்தியும் பதிவாகவில்லை. பாதுகாப்பிற்காக என்றால் மட்டுமே துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். 

தற்போது நடைபெற்ற பிகார் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அமைச்சரின் மகன் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். அதிகாரம் மற்றும் செல்வாக்கின் மூலம் அரசியல் கட்சியினரின் குடும்பத்தினரும் துப்பாக்கியைப்  பயன்படுத்தத் தொடங்கியுள்ளது மேலும் ஆபத்தான நிலையையே  ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com