உளவியல் படிப்புகளுக்கான தேவை அதிகரிப்புக்கு இதுதான் காரணமா.. ? 

எதிர்காலத்தில், உளவியலுக்கான தேவை அதிகரிக்கும். ஏனென்றால், மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வேலை வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது.
உளவியல் படிப்புகளுக்கான தேவை அதிகரிப்புக்கு இதுதான் காரணமா.. ? 

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உளவியல் பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் இதுவரைக்கும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான ஆர்வம் குறைந்து கலை, அறிவியல் படிப்புகளுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதிலும் கரோனா பெருந்தொற்று பின்னர் பி.எஸ்சி உளவியல் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் வழக்கத்தைவிட அதிக வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பி.எஸ்சி உளவியல் படிப்புக்கு இடம் பிடிக்க மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. 

கடந்த ஆண்டை இந்த ஆண்டு இரட்டிப்பு மடங்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் உளவியல் படிப்புக்கு இடம் கிடைக்குமா என்பதில் பெரும்பாலான மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக, கரோனா தொற்றுநோய்க்குப் பின் சென்னையில் இளங்கலை உளவியல் படிப்புகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆண்டு உளவியல் மற்றும் குற்றவியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. உளவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும், வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான படிப்புகளுக்குப் பிறகு, உளவியல் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பல கல்லூரிகள் தெரிவித்துள்ளன.

மாநகரத்தில் உள்ள பல கல்லூரிகளில் இந்த ஆண்டு உளவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் கணிசமாக உயர்ந்திருப்பதால் பாடத்திற்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் லிலியன் ஜாஸ்பர் கூறியதாவது: கல்லூரியின் ரெகுலர் மற்றும் மாலை நேரக் கல்லூரியில் பி.எஸ்சி (உளவியல்) படிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. "இந்த ஆண்டு 50 இடங்கள் உள்ள ரெகுலர் பி.எஸ்சி (உளவியல்) படிப்புக்கு இதுவரை 891 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு வெறும் 600 விண்ணப்பங்கள் மட்டுமே வந்தன. ஜூலை நடுப்பகுதி வரை விண்ணப்பிப்பதற்கு காலம் உள்ளதால் இன்னும் அதிகயளவில் விண்ணப்பங்கள் வரலாம்" என்று தெரிவித்தார்.  

மேலும், கரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் உளவியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து காணப்படுவதே, தற்போது உளவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

"தொற்றுநோயின் போது பலர் கவலை, மன அழுத்தம், மனநோய்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, ஒவ்வொரு நிறுவனமும் - கல்வி நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை உளவியல் ஆலோசகர்களை நியமிக்கின்றன," இதனால் மாணவிகள் மத்தியில் உளவியல் படிப்புக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி உளவியல் படிப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று ஜாஸ்பர் கூறினார்.

எத்திராஜ் மகளிர் கல்லூரியிலும் இதே நிலைதான். 50 இடங்கள் உள்ள பி.எஸ்சி உளவியல் படிப்புக்கு, இதுவரை 800 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன் மூலம் ஒரு உளவியல் இடத்துக்கு சுமார் 100 மாணவிகள் பலப்பரீட்சை நடத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு 500 விண்ணப்பங்கள் மட்டுமே வந்தன. 

இந்த கல்லூரியில் படித்த மாணவர்களில் 90 சதவீதம் பேர் வேலையில் உள்ளனர். இதுதான் இளங்கலை உளவியல் பாடத்தை மிகவும் பிரபலமாக்கியது" என்று கல்லூரியின் முதல்வர் எஸ். கோதை கூறினார். மேலும், "பயன்பாட்டு உளவியலில் முதுகலைப் படிப்பும்" வழங்கப்படுவதாக கூறினார்.

டிஜி வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் எஸ். சந்தோஷ் பாபூ கூறியதாவது: சில கல்லூரிகள் தங்கள் மாணவர்களை அதிக வேலைவாய்ப்பிற்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தின் பாடத்திட்டத்தையும் மாற்றி அமைத்துள்ளன. "உளவியல் எப்போதும் ஒரு சுவாரஸ்யமான பாடமாக உள்ளது, ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், அதன் தேவை அதிகரித்துள்ளது. அதை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, நாங்கள் பாடத்திட்டத்தில் மனித அறிவு மேலாண்மை மற்றும் சைக்கோமெட்ரிக் சோதனை போன்ற கூறுகளை சேர்த்துள்ளோம்" என்று கூறினார். 

கல்லூரியில் உளவியல் படிப்புக்கு 50 இடங்கள் உள்ள நிலையில், இதுவரை 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. கல்லூரியால் வழங்கப்படும் குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத்தில் முதுகலைப் படிப்புகளுக்கும் அதிக தேவை உள்ளது என்று முதல்வர் கூறினார். 

பேராசிரியர்கள் மற்றும் உளவியலாளர்களின் கூற்றுப்படி, கரோனா தொற்றுக்கு பின்னர் மக்கள் எந்தவொரு உளவியல் பிரச்னைக்கும் உளவியலாளர்களின் உதவியை நாட தயங்கவில்லை.

"உளவியல் என்பது மக்களின் சிந்தனை செயல்முறையைப் படிப்பதன் மூலம் உதவுவதாகும். மருத்துவ உளவியலைத் தேர்ந்தெடுப்பது முதல் ஆராய்ச்சி செய்வது வரை, இந்தத் துறை மாணவர்களுக்கு பல வழிகளை வழங்குகிறது. இத்துறையில் நல்ல ஊதியங்களுடன் கூடிய வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன," என்கிறார் உளவியல் பேராசிரியர் கே.ஆர்.ராமகிருஷ்ணன்.

அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்ட 10 சிறந்த தேவையுள்ள படிப்புகளில் உளவியலும் ஒன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. உளவியல் ஒரு பல்துறை பட்டம். இது பலதரப்பட்ட துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. உளவியல் படிப்பு ஒருவரை சிறந்த தனிநபராக மாற்றும் பண்புகளை வளர்க்க உதவுகிறது. பச்சாதாபம் மற்றும் உணர்திறன், விமர்சன சிந்தனை போன்ற பண்புக்கூறுகளை வளர்க்கின்றன.

முன்பு, உளவியல் படித்த ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு வாழ்க்கை இருந்தது. அதனால் உளவியலாளர்கள் மிக முக்கியமான சேவைகளை வழங்குவதாக கருதப்பட்டனர்.

இன்று, உளவியல் புலம் விரிவடைந்துள்ளது. உளவியல் மனநலப் பிரச்னைகளுடன் விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கும் அளவிற்கு விரிவடைந்துள்ளது

எதிர்காலத்தில், உளவியலுக்கான தேவை அதிகரிக்கும். ஏனென்றால், மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது இன்றைய இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது.

இதற்கிடையே சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சில நாள்களில் வர உள்ளன. அதுவரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவு செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இடத்துக்கு மோதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com