குஜராத்தில் பாஜகவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு குறிவைக்கும் கேஜரிவால்

தில்லி மற்றும் பஞ்சாப்பைத் தொடர்ந்து குஜராத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, அங்கு ஒரு புதிய கணக்கைப் போட்டுள்ளது.
குஜராத்தில் பாஜகவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு குறிவைக்கும் கேஜரிவால்
குஜராத்தில் பாஜகவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு குறிவைக்கும் கேஜரிவால்


ஆமதாபாத்: தில்லி மற்றும் பஞ்சாப்பைத் தொடர்ந்து குஜராத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, அங்கு ஒரு புதிய கணக்கைப் போட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பாஜகவைக் குறி வைக்காமல், காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால்.

ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கேஜரிவால், முதுபெரும் பழமையான கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சியைவிடவும் ஆம் ஆத்மி கட்சி பெரியது என்று கூறினார்.

குஜராத்துக்கு இரண்டுநாள் பயணமாக சென்றிருந்தார் அரவிந்த் கேஜரிவால். ஆம் ஆத்மி கட்சி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க விரும்புவோர் மற்றும் அந்த வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க விரும்பாதவர்களும் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கும் பட்சத்தில், குஜராத்தில் ஆம் ஆத்மியே அடுத்த அரசை அமைக்கும் என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சிப் பணிகளுக்காக சுமார் ஏழு ஆயிரம் பேர் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர்கள் முன்னிலையில் பேசிய கேஜரிவால், குஜராத்தில் காங்கிரஸ் காகிதத்தில் மட்டும் எழுத்தளவில் தான் உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியை விடவும் பலமானதாகவும், பெரியக் கட்சியாகவும் ஆம் ஆத்மி உள்ளது. மிகக் குறைந்த காலத்திலேயே லட்சக்கணக்கான மக்கள் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனர் என்றார்.

குஜராத்திலிருந்து பாஜக குழுவினர், அண்மையில் தில்லி வந்து, பார்வையிட்டனர். அப்போது பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் கூட எந்த தவறுகளும் இல்லாமல் இருப்பதை நேரில் பார்த்து வந்தனர். எனவே, ஆம் ஆத்மி தொண்டர்கள், தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வரும் சாதனை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கடந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்தனர். ஆனால் குஜராத்தில் இதுவரை 57 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேறியுள்ளனர். எனவே, மக்களே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தங்களது வாக்குகளை வீணடித்து விட வேண்டாம் என வலியுறுத்துங்கள். வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு வாக்கு கூட பெறாது என்பதை உறுதி செய்யுங்கள் என்று கேஜரிவால் கூறியுள்ளார்.

அதாவது, ஆளும் பாஜக மீது அதிருப்தியில் இருப்பவர்கள், அதே வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைக்குமாறு பணியாற்ற வேண்டும். வேறு வாய்ப்புகளே இல்லாததால்தான் பாஜகவுக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு ஆம் ஆத்மி குறித்து எடுத்துச் சொல்லி புரிய வைத்தால், குஜராத்தில் அடுத்து நாம் ஆட்சியமைப்பதை எதுவுமே தடுக்க முடியாது என்றும் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2012ஆம் ஆண்டுத் தேர்தலைக் காட்டிலும் சிறப்பாகவே வாக்குகளைப் பெற்றிருந்தது. அதேவேளையில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பாஜகவின் தொகுதிகள் முதல் முறையாக நூறுக்கும் கீழே சரிந்தது.

காங்கிரஸ் கட்சி 2012ஆம் ஆண்டு 61 இடங்களில் வென்றது. மொத்தமுள்ள 182 இடங்களில் 2017ஆம் ஆண்டு தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றியது. அதேவேளையில் பாஜக 115 இடங்களில் வென்றிருந்த நிலையில், கடந்த தேர்தலில் 99 ஆகக் குறைந்தது.

தேர்தலில் முன்னேற்றம் அடைந்தாலும், காங்கிரஸ் கட்சி அதனை தக்க வைத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து கட்சியிலிருந்து பல தலைவர்கள் வெளியேறினர். 2017ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து வெளியேறினர். அவர்களில் சங்கர் சிங் வகோலாவும் ஒருவர். 2017க்குப் பிறகு நடந்த 7 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாஜக நான்கிலும், காங்கிரஸ் மூன்றிலும் வென்றன. 2020 இடைத் தேர்தலில் 8 தொகுதிகளிலும் பாஜகவே வென்றது.

தற்போது பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 111 ஆக உள்ளது. அதேவேளையில், 13 முன்னாள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். 

இவ்விரு கட்சிகளுக்கிடையே, ஆம் ஆத்மி சப்தமில்லாமல் தனது வளர்ச்சிப் பாதையில் நடந்து வருகிறது. நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி 27 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com