ஜாதி அரசியலாகும் கட்சி அரசியல்!

தமிழகத்தில் கட்சி அரசியல்  என்பது ஜாதி அரசியலாக மாறி வருவதற்கான அடையாளங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. 
ஜாதி அரசியலாகும் கட்சி அரசியல்!

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைக்கான காரணிகளை அலசும்போது, தமிழகத்தில் கட்சி அரசியல்  என்பது ஜாதி அரசியலாக மாறி வருவதற்கான அடையாளங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. 

தமிழகம் நீண்ட காலமாக வன்முறைச் சம்பவம் ஏதும் நடைபெறாத அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. ஆனால், தற்போது கள்ளக்குறிச்சி அருகே ஏற்பட்ட வன்முறை அதைக் கலைப்பதாக அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தை அடுத்துள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். 

அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு ஞாயிற்றுக்கிழமை பெரும் வன்முறையாக வெடித்தது.

இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான போலீஸôர் தாக்கப்பட்டதுடன், பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டன. பள்ளி வளாகம், வகுப்பறைகள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டன.  பள்ளியிலிருந்த மாணவர்கள் தொடர்பான ஆவணங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவல் துறையினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து, ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை உளவுத் துறை முழுமையாக ஆய்வு செய்தபோது, அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் நபர்கள் இல்லை என்பதும், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களிலிருந்து 80 சதவீதம் பேரும், சேலம் மாவட்டத்திலிருந்து 10 சதவீதம் பேரும், உள்ளூர் மற்றும் அருகே உள்ள மாவட்டங்களிலிருந்து வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே வன்முறையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

 வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து அணி, அணியாகத் திரண்டு பல கி.மீ. தொலைவு பயணித்து வந்திருக்கிறார்கள் என்றால், அது உளவுத் துறைக்கு எப்படி தெரியாமல்போனது என்பது வியப்பு.

 இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி நிர்வாகம் மீது மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்கெனவே புகார்களைத் தெரிவித்து வந்துள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இதுபோன்று பெற்றோர்களின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது ஒன்றும் புதிதல்ல. 

பெரும் வன்முறை வெடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்ததற்கு சமூக ரீதியான வேறு காரணங்களும் இருக்கக் கூடும் என உளவுத் துறையினர் நம்புகின்றனர். குறிப்பாக, அந்தப் பகுதியில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்புகள் இதற்குப் பின்னணியில் இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை நடத்துவதாகக் கூறும் சமூகத்தினருக்கும், பாதிக்கப்பட்ட மாணவியின் சமூகத்தினருக்கும் இடையே அண்மைக் காலமாகவே போட்டி, பொறாமை நீடித்து வருவதன் பின்னணியில் இந்த சம்பவத்தை உளவுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் புதன்கிழமையன்று வந்தார். 

அவரை வரவேற்க பெருந்திரளாக இரண்டு ஊர்களிலும் மக்கள் திரண்டனர். அதை எதிரணியினரும் குறிப்பிட்ட ஒரு சமுகத்தினரும் எதிர்பார்க்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையின் பின்னணியில் அதுவும் காரணமாக இருக்கக்கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது. 

 சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியலில் கோலோச்சும் தங்களைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் சமூகத்தினருக்கு ஆதங்கம் இருந்து வருவதாகத் தெரிகிறது. 

அதுவும் கடந்த ஒரு மாதமாக காவிரி டெல்டா, தென் தமிழகப் பகுதிகளில் இந்தச் சமூகத்தினர் அரசியல், சமூக ரீதியாகத் திரண்டு தங்களது கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவும் உளவுத் துறைக்கு தெரியாத விஷயமல்ல.

 இந்த நிலையில், கனியாமூர் சம்பவமானது இரு சமூகத்தினருக்கு இடையிலான போட்டி மனப்பான்மையின் வெளிப்பாட்டையே காட்டுகிறது. உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் யாதவர், ராஜ்புத், குர்மி, தலித் ஆகிய சமூகத்தினருக்கு இடையே நடக்கும் அரசியல் போட்டியும், அதனால் ஏற்படும் தாக்கமும் வெளிப்படையாகத் தெரியவரும்.

அதேபோல, தமிழகத்திலும் எம்ஜிஆர், கருணாநிதி,  ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத காரணத்தால், அதுபோன்ற சூழல் உருவாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com