ஆட்சிமொழி செயலாக்கத்துக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு தினத்தை 54 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றி அமைத்துள்ள தமிழக அரசு, ஆட்சி மொழி செயலாக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆட்சிமொழி செயலாக்கத்துக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு தினத்தை 54 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றி அமைத்துள்ள தமிழக அரசு, ஆட்சி மொழி செயலாக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 கடந்த 1956 நவ.1-ஆம் நாள், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த இன்றைய தமிழகம், சென்னை ராஜதானி என அழைக்கப்பட்டது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் கடந்த 1967-இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, 1967 ஜூலை 18-ஆம் தேதி சென்னை ராஜதானி என்பதை, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரை, தமிழ்நாடு பெயர் மாற்றம் தீர்மானம் கொண்டு வந்த ஜூலை 18-ஆம் நாள் இனி தமிழ்நாடு தினமாக கடைப்பிடிக்கப்படும் என இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இதுவரை தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நவ.1-ஆம் தேதி, எல்லைக் காவலர்கள் நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

முதல் முறையாக ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினம் சென்னையில் முதல்வர் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்டத்திற்கு தலா ரூ.44ஆயிரம் வீதம் பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு தினத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஆட்சிமொழி செயலாக்கத்திலும் தொடர வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

50 ஆண்டுகளாகியும் நிறைவேறாத தமிழ் கையொப்பம்: தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என 1978-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியின்போது அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணை வெளியிடப்பட்டு அடுத்த 50 ஆண்டுகளில் (2028) பொன்விழா கொண்டாடப்படவுள்ளது. ஆனால், இன்று வரையிலும் அரசு ஊழியர்கள் முழுமையாக தமிழில் கையொப்பமிடுவதில்லை என்ற குறைபாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல், ஆட்சிமொழி தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளும் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 அரசாணைகள், சுற்றறிக்கை, அரசு அலுவலர்களின் பெயர் பலகை, அரசு வாகனங்களின் பெயர் பலகை, பணியிட மாறுதல் உத்தரவுகள் என அனைத்திலும் ஆங்கிலமே நிறைந்துள்ளது.  

ஆட்சிமொழி செயலாக்கத்தைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரமில்லாத துறையாக இருப்பதால், தலைமைச் செயலகம் முதல் ஊராட்சி அலுவலகம் வரையிலான நிர்வாகத்தில் ஆட்சிமொழியாக தமிழ் முழுமையாக இல்லாத நிலை உருவாகிவிட்டது.  தமிழ் வளர்ச்சித்துறைச் செயலரின் கட்டுப்பாட்டிலுள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலக வாகனங்களின் பெயர் பலகையில் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் இடம் பெறுகிறது. காவல்துறை முன்னாள் தலைவர் திரிபாதியின் உத்தரவின்பேரில், காவல் துறை வாகனங்களிலுள்ள பெயர் பலகையில் மட்டுமே தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால், காவல் துறை பதிவேடுகளில் தமிழ் இல்லை. 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே ஆட்சிமொழித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீதியும், நிர்வாகமும் முழுமையாக தமிழ் மொழியில் இடம் பெற்றால் மட்டுமே ஆட்சி மொழி செயல்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். ஆனால், மாநிலத்தின் நிர்வாகத்தில் கூட ஆட்சிமொழியை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

இதுதொடர்பாக தமிழ் ஆர்வலர் சகாதேவன் கூறியது: சில மாவட்ட ஆட்சியர்களின் தமிழ் பற்று காரணமாக, அந்தந்த மாவட்ட அளவில் ஆட்சிமொழி சில துறைகளில் மட்டும் செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வர, தலைமைச் செயலகம் முதல் ஊராட்சி மன்றம் வரை ஒரே மாதிரியான விதிமுறை பின்பற்றப்பட வேண்டும். நிர்வாகத்தில் ஒரே வகையான மென்பொருளைப் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிகாரிகள் பணியிடமாற்ற ஆணைகள் கூட ஆங்கிலத்தில் வெளியிடுவதால், சாமானிய மக்கள் மத்தியில் ஆட்சிமொழி செயலாக்கம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com