புத்தொளி பெறுமா பாமக?

பாமகவின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், பாமக மீண்டும் புத்தொளி பெறுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
புத்தொளி பெறுமா பாமக?

பாமகவின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், பாமக மீண்டும் புத்தொளி பெறுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
 1989-இல் தொடங்கப்பட்ட பாமகவின் நிறுவனராக மருத்துவர் ச.ராமதாஸ் இருந்து வருகிறார். அந்தக் கட்சியின் முதல் தலைவராக பேராசிரியர் தீரனும், அவரைத் தொடர்ந்து எடப்பாடி கணேசனும், 1998 முதல் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஜி.கே.மணியும் பதவி வகித்து வந்தனர். ஜி.கே.மணி பதவி காலத்தில்தான் பாமக மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தது. வட தமிழகத்தில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என்ற சூழலால் அந்தக் கட்சி உச்சபட்ச அதிகாரத்தை சுவைக்க முடிந்தது.
 இருப்பினும், 2009 மக்களவைத் தேர்தலிலிருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக தலா 3 மக்களவைத் தேர்தல்கள், சட்டப்பேரவைத் தேர்தல்கள் என 6 தேர்தல்களில் பாமக தொடர்ந்து தோல்வி வளையத்திலேயே உள்ளது.
 2026-இல் தமிழகத்தில் பாமக ஆட்சி என்ற இலக்குடன் பயணிக்கும் ராமதாஸ், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து கட்சிக்குப் புதிய தலைமை என்ற முக்கிய நகர்வை செய்திருக்கிறார். சென்னை திருவேற்காட்டில் மே 28-இல் நடைபெற்ற பாமகவின் அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். இதுவரை இல்லாத அளவுக்கு பாமக நெருக்கடியான அரசியல் சூழலில் பயணிக்கும் காலகட்டத்தில்தான் அன்புமணி கட்சிக்கு தலைமை ஏற்றுள்ளார்.
 பாமகவின் வெற்றி, தோல்விகள்: மக்களவைத் தேர்தலோ, சட்டப்பேரவைத் தேர்தலோ எதுவாக இருந்தாலும் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என்று இருந்த நிலை மாறி அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகும் என்ற சூழல் 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகிவிட்டது.
 2016-இல் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்தை முன்வைத்து நவீன அரசியல் உத்திகளுடன் பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டும்கூட முதல்வர் வேட்பாளரான அன்புமணி உள்பட ஒருவர் கூட வெற்றி பெற முடியவில்லை.
 பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை 1991-இல் தனித்து போட்டியிட்டு ஓரிடம் (5.9 சதவீத வாக்கு), 1996-இல் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸýடன் கூட்டணியாக போட்டியிட்டு 4 இடங்கள் (6 சதவீத வாக்கு), 2001-இல் அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் (5.6 சதவீத வாக்கு), 2006-இல் திமுக கூட்டணியில் 18 இடங்கள் (5.6 சதவீத வாக்கு), 2011-இல் திமுக அணியில் மூன்று இடங்கள் (5.2 சதவீத வாக்கு) என வெற்றி பெற்று வந்த பாட்டாளி மக்கள் கட்சி, 2016ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டும் ஓரிடத்தில் கூட (5.36 சதவீத வாக்கு) வெற்றி பெறவில்லை.
 2021ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த அந்தக் கட்சி ஐந்து இடங்களுடன் (3.8 சதவீத வாக்கு) தற்போது தமிழக சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கிறது.
 மக்களவைத் தேர்தல்களைப் பொருத்தவரை, 1989-இல் முதல் முறையாக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாவிட்டாலும் 6 சதவீத வாக்கு வங்கியை பாமக பெற்றது. 1996-இல் திவாரி காங்கிரஸýடன் சேர்ந்து வெற்றி பெறாவிட்டாலும் 4.2 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது.
 1998-இல் அதிமுக அணியில் 4 இடங்கள் (6 சதவீத வாக்கு) , 1999-இல் திமுக அணியில் 5 இடங்கள் (8.2 சதவீத வாக்கு), 2004-இல் திமுக அணியில் 5 இடங்கள் (6.7 சதவீத வாக்கு) என வெற்றி பெற்ற பாமக 2009-இல் அதிமுக அணியில் ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
 2014-இல் திமுக, அதிமுகவை தவிர்த்துவிட்டு பாஜக, தேமுதிக அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓரிடத்தில் வெற்றி பெற்ற (4.4 சதவீத வாக்கு) பாமக, 2019-இல் ஓரிடத்தில்கூட (5.36 சதவீத வாக்கு) வெற்றி பெற முடியவில்லை.
 ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகள் இருந்த காலத்தில் 2016-இல் அன்புமணி தலைமையில் தனித்துப் போட்டியிட்ட பாமக 5.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதேகாலத்தில், சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளையே பெற்றது. ஆனால், தொடர்ந்து தனித்து நின்றதால் இருபெரும் ஆளுமைகளின் மறைவுக்குப்பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.9 சதவீத வாக்குகளையும், 2021 பேரவைத் தேர்தலில் 6.85 சதவீத வாக்குகளையும் பெற்றது.
 இதேபோல, பாமகவும் அன்புமணி தலைமையில் 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் கணிசமான வாக்கு வங்கியைப் பெற்று தமிழக அரசியல் களத்தின் போக்கை மாற்றியிருக்கக்கூடும். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த பேரவைத் தேர்தலில் பாமகவின் வாக்கு வங்கி 3.8 சதவீதமாகக் குறைந்தது.
 அடுத்து வந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் (வட தமிழகத்தில் 7 மாவட்டங்கள்), நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பாமகவால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
 தொடர்ந்து தோல்வி வளையத்தில் இருக்கும் பாமகவை, வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனில் அன்புமணி பல சவால்களைச் சந்தித்தாக வேண்டும்.
 வட தமிழகத்தில் மட்டுமே வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சி, சமூக நீதி பற்றி பேசினாலும் அது வன்னியர்களுக்கான அரசியல் கட்சி என்ற பார்வை பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் இரண்டறக் கலந்துவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தென் தமிழகம், கொங்கு மண்டலம், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பாமகவை வளர்க்கும் செயல் திட்டங்களை உருவாக்குவதுதான் அன்புமணியின் முதல் இலக்காக இருக்க வேண்டும்.
 இரு திராவிடக் கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என 2016-இல் முழங்கி தனித்துப் போட்டியிட்டுவிட்டு மீண்டும் ஒரு திராவிடக் கட்சியான அதிமுகவுடன் கூட்டணிக்கு தாவியது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் பாமகவின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. 2026-இல் மீண்டும் பாமக தலைமையில் ஆட்சி என்ற இலக்கை பாமக நிர்ணயம் செய்தாலும், தொடர்ந்து தனித்துப் போட்டி என்பதில் அந்தக் கட்சி உறுதியாக இருக்குமா என்ற நடுநிலை வாக்காளர்களின் அவநம்பிக்கையை அன்புமணி ராமதாஸ் எப்படி களையப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி பதவி வகித்தபோது, புகையிலை ஒழிப்புக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், இளம் தலைவர், படித்த தலைவர் போன்றவை புதிய அரசியல் தலைவராக உருவெடுக்க அன்புமணிக்கு சாதகமாக உள்ளன. பாமக தொடங்கிய பின்னர் உருவாகிய மூப்பனார் தலைமையிலான தமாகா, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, வைகோ தலைமையிலான மதிமுக ஆகியவை காலவெள்ளத்தில் கரைந்து நிற்கின்றன. ஆனால், தொடர்ந்து 5 சதவீத வாக்கு வங்கியை 30 ஆண்டுகளாக பாமக வைத்திருந்தது. கடந்த பேரவைத் தேர்தலில் மட்டுமே பாமகவின் வாக்கு வங்கி 3.8 சதவீதமாகக் குறைந்தது. இருப்பினும், அரசியல் சக்தி என்ற அந்தஸ்தை இதுவரை இழக்காமல் இருப்பது பாமகவின் பலமாக உள்ளது.
 ஒவ்வொரு முறையும் பாமக பின்னடைவை சந்திக்கும்போது மீண்டும் வாக்கு வங்கியை பலப்படுத்த ஜாதி அரசியலை கையில் எடுக்கிறது என்ற விமர்சனம் உள்ளது. மீண்டும் பின்னடைவு ஏற்பட்டால், ஜாதி அரசியலுக்கு பாமக செல்லாது என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டிய கட்டாய சூழலில் உள்ளது.
 வட தமிழகத்தில் 30 சதவீத வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கும் பாமக, அரசியல் களத்தில் தனக்கு நேர் எதிராகத் திரும்பும் 30 சதவீத தலித்துகள், 30 சதவீத பிற்பட்டோர் சமுதாய வாக்குகளைப் பெறுவதற்கான முன்முயற்சிகளை எடுக்காவிட்டால் 2026-இல் ஆட்சியைப் பிடிப்பது பகல் கனவாகவே மாறிவிடும்.
 ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்பும்கூட அதிமுக, திமுகவின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் சேதாரம் ஆகவில்லை. நாம் தமிழர், பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து வேகமாக வாக்கு வங்கியை உயர்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் மீறி பாமகவை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அன்புமணிக்கு இருக்கிறது.
 2026-இல் தனித்துப் போட்டி அல்லது தங்களது கட்சி தலைமையில் தனி அணி என்ற இலக்கை தெளிவாக நிர்ணயித்துவிட்டது பாமக. ஆனால், 2024 மக்களவைத் தேர்தல் பற்றி இதுவரை தெளிவுபடுத்தவில்லை. 2024-இல் பாமக எடுக்கும் முடிவு 2026 பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com