நூல் விலை உயர்வு: திருப்பூரில் வேலையிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

தமிழகத்தில் விசைத்தறி, கைத்தறி மற்றும் பின்னலாடை உற்பத்தியில் சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நூல் விலை உயர்வு: திருப்பூரில் வேலையிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

திருப்பூர்: பஞ்சு, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் திருப்பூரில் சிறு, குறு நிறுவனங்களின் பணியாற்றி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் விசைத்தறி, கைத்தறி மற்றும் பின்னலாடை உற்பத்தியில் சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், திருப்பூரில் உள்ள நிட்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங், ஸ்டிச்சிங் உள்ளிட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் நேரடியாக சுமார் 4 லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் பேர் என மொத்தம் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மேற்கு வங்கம், பிகார், ஒடிசா, அஸ்ஸாம், ராஜஸ்தான் உள்பட 22 மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். வடமாநிலத் தொழிலாள்கள் தங்களது குடும்பத்தினருடனும் வாடகைக்கு அறை எடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

நெருக்கடியில் பின்னலாடை நிறுவனங்கள்:

இந்திய பின்னலாடை உற்பத்தியில் 60 சதவிகிதம் திருப்பூரில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருள்கள் விலை உயர்வு, தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இந்தத் தொழில் நெருக்கடியில் சிக்கியது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கரோனோ நோய்த் தொற்றுக்குப் பின்னர் தற்போது ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது.

பஞ்சு, நூல் விலை உயர்வு:

பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான பஞ்சு நூல் விலையானது கடந்த 18 மாதங்களில் 125 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு கிலோ பஞ்சு நூல் ரூ.200 ஆக இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.450 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு மிக முக்கியக் காரணம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலம் தவறிப்பெய்யும் மழையால் பருத்தியின் விளைச்சல் வடமாநிலங்களில் குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஒரு கேண்டி பஞ்சின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிறு, குறு நிறுவனங்கள் மூடல்:

திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தியில் சுமார் 85 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நூல் விலை உயர்வு காரணமாக புதிய ஆர்டர்களை எடுக்க முடியாமலும், ஏற்கெனவே எடுத்த ஆர்டர்களுக்கு நூல் வாங்க முடியாமலும் பெரும்பாலான சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இதில், கடந்த 6 மாதங்களில் மட்டும் பிரிண்டிங்,  டையிங், ஸ்டிச்சிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங், ரைசிங் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடித்தால் அடுத்த 3 மாதங்களில் மேலும் 2 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக திருப்பூரில் பணியாற்றி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்க நேரிடும். இந்த வேலையிழப்பால் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்லும் தொழிலாளர்கள் எவ்வாறு பிழப்பை நடத்த முடியும் என்ற கேள்வியையும் தொழிலாளர்கள் எழுப்புகின்றனர்.

நூல்விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்:

திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகள் பஞ்சு, பஞ்சு நூல் ஏற்றுமதியை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். பஞ்சை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் கொண்டுவர வேண்டும். இதன் மூலமாக பஞ்சு பதுக்கலைக் கட்டுப்படுத்தி செயற்கையான முறையில் விலையேற்றம் செய்யும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தடையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தொழில் அமைப்புகள், நூற்பாலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து 3 மாதம் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சு, நூல் விலையை நிர்ணயிக்க வேண்டும். இந்திய பருத்திக் கழகத்தைப் போல தமிழ்நாடு பருத்திக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பருத்தியை விவசாயிகளிடம் இருந்து மாநில அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து இந்தக் கழகம் மூலமாகவே நூற்பாலைகளுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

இதன் மூலமாகவே திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com