பால்புதுமையினர் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளல் சரியானதா? பாதுகாப்பானதா?

பால்புதுமையினர் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளல் சரியானதா? பாதுகாப்பானதா? சமுதாயத்தில் தற்போதை நிலைமை என்ன? சம்பந்தப்பட்ட சிலரின் அனுபவங்கள் என்ன?
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்வேதாஸ்ரீ, அலெக்ஸ் முருகபூபதி.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்வேதாஸ்ரீ, அலெக்ஸ் முருகபூபதி.

பால்புதுமையினர் இந்த சமூகத்தில் தங்கள் அடையாளத்தை 'வெளிப்படுத்திக்கொள்ளுதல்' என்பது தேவையாகிறது. குறிப்பாக இங்கே, இப்போது வெளிப்புற ஒப்புதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு விஷயமும் வெளிப்படும்போது அது சம்பந்தப்பட்டவரையும் அவரைச் சுற்றியிருப்பவரையும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வைக்கிறது. அப்படியான ஒரு சிறந்த 'வெளிப்படுத்துதல்' என்பது அவ்வளவு எளிதாக வெளியே வந்துவிடாது. 

ஒருபாலீர்ப்புடைய ஆண் ஒருவர், சக ஒருபாலீர்ப்புடையோரின் அனுபவத்தில் இருந்து எவ்வளவு கற்றுக்கொள்கிறார்? பாலினத்திற்கு அப்பாற்பட்ட (non-binary) அல்லது பாலின உறுதித்தன்மை அற்ற(Gender Non-conforming) குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை ஓர் அர்த்தமுள்ள விவாதத்தில் ஈடுபடுத்த போதுமான அளவு அறிந்திருக்கிறார்களா? அவர்களுக்கு ஆதரவு, நம்பகமான தகவல்கள் அல்லது பொருத்தமான ஆலோசனைகளை எங்கு தேடுவது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பால்புதுமையினரின் சுயமரியாதை பேரணி(Pride month) மாதத்தையொட்டி, பால்புதுமையினருக்கு வழிகாட்டும் 'ஓரினம்'(Orinam) மற்றும் 'தோழி'(thozhi) அமைப்புகள் இணைந்து 'Coming Out'(வெளிப்படுத்திக்கொள்ளுதல்) என்ற ஆலோசனை நிகழ்ச்சியை நடத்தின. 

பால்புதுமையினர் சமூகத்தினர் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளுதல் என்பது என்ன? எதற்காக வெளிப்படுத்திக்கொள்கிறோம்? சரியானதா? பாதுகாப்பானதா? என்பது குறித்த விவாதங்கள் மற்றும் பால்புதுமையினர் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களைப் பகிர்தல், அவர்களுக்கான ஆலோசனைகள் குறித்த நிகழ்ச்சி சென்னை பரங்கிமலையில் உள்ள செயின்ட் டொமினிக் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான 'தோழி' அமைப்பைச் சேர்ந்த திருநங்கை சுவேதாஸ்ரீ, 'இங்கு தனிப்பட்ட பலரும் தங்கள் அடையாளங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எப்படி முன்னேறிச் செல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் மனநலத்தில் வெளிப்படுத்துதலின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்த நிகழ்ச்சி' என்று கூறினார். 

மேலும், ஒரு திருநங்கை என்ற முறையில் தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்வதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதாகக் கூறினார். இந்த சமூகத்தில் வெளிவருவதைப்போல தனக்குள்ளிருந்தும் வெளிவருவது முக்கியம் என்று சுட்டிக்காட்டினார். 

'வெளிப்படுத்திக்கொள்ளுதல் அல்லது வெளிவருதல் என்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும், ஏற்றுக்கொள்வது என்பது உடல் ரீதியாக மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் என் பணியிடத்தில் வெளிப்படுத்திக்கொண்டு வெளியே வந்தபோது அதை நேரடியாகப் பார்க்க முடிந்தது. என்னுடைய நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. என்னுடைய மனநலமும் ஆரோக்கியமானதாக மாறியது' என்று கூறும் சுவேதாஸ்ரீ, 21 வயதில் தன்னை திருநங்கையாக அடையாளம் கண்டுகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து, தற்போது சென்னையில் 'தோழி' அமைப்பில் பணிபுரிந்து வருவதாகத் தெரிவித்தார். 

மேலும், 'பால்புதுமையினர் தங்கள் நண்பர்களிடமோ, குடும்பத்திடமோ, பணியிடத்திலோ, சமூக ஊடகங்களிலோ தங்களை வெளிப்படுத்திக்கொள்வது குறித்து பேசியிருக்கிறோம். இவற்றில் ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படுத்திக்கொண்டால் தங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், மன அழுத்தத்தைப் போக்க முடியும். தங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியும்' என்றார்.

மற்றொரு ஒருங்கிணைப்பாளரான 'ஓரினம்' அமைப்பைச் சேர்ந்த தன்பாலீர்ப்பாளர் அலெக்ஸ் முருகபூபதி, தன் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். சுய வெளிப்பாடுதான் எல்லாவற்றுக்கும் திறவுகோல் என்றார். 

'தன்னை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதுதான் பல பிரச்னைகளுக்குக் வழிவகுக்கிறது. தங்கள் பாலினம் அல்லது பாலின அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத பலர், சுற்றியுள்ள காரணங்களால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது. முன்னோடிகளின் பல ஆண்டுகால உழைப்பின் விளைவே இன்று இந்த உரையாடல்கள் நடக்கக் காரணம்' என்று கூறினார். 

'பால்புதுமையினர் சமூகத்தைப் பற்றி முதல்முறையாக கடந்த 2003 ஆம் ஆண்டு ஒரு குழு பிரபலமான ஐஸ்கிரீம் கடையில் ஒன்றுகூடி பேசியதால் உருவனாதுதான் 'ஓரினம்' அமைப்பு. அவர்களின் முயற்சியே இன்று எங்களை இங்கு கொண்டு வந்துள்ளது. அப்போது அந்த அமைப்பு தொடங்காமல் இருந்திருந்தால், இப்போது இந்த இடத்தில் பேச வாய்ப்பு கிடைத்திருக்காது' என்று ஓரினம் அமைப்பு உருவானதைப் பற்றி விளக்கினார். 

இதுகுறித்த உரையாடலில் பால்புதுமையினர் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் வெளிப்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதில், தன்பாலீர்ப்புடைய ஒரு குழந்தையின் தாய் ஹம்சவல்லி கலந்துகொண்டு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். 

'நான் வளர்ந்தபோது என் பெற்றோரிடம் எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. பல்வேறு விஷயங்களைப் பற்றி எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால், அதற்குக் கிடைத்த பதில்கள் மிகக் குறைவு.

என்னுடைய மகன் (ஜன்மேஷ்), தான் ஒரு தன்பாலீர்ப்பாளர் என்று என்னிடம் சொன்னபோது எனக்கு பால்புதுமையினர் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றாலும், அதைப் பற்றி தெரிந்துகொள்வதே எனது முதல் உள்ளுணர்வாக இருந்தது. எனினும் அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவில்லை' என்று தன் குழந்தைக்கு ஆதரவாக இருக்க குடும்பத்தினருடன் சண்டையிட்டு தனியாக வசித்து வருகிறார். 

ஜன்மேஷ், இந்த சமூகத்தின் ஓர் அங்கமாக இருப்பதன் அர்த்தம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். 'உதாரணமாக, பெண்கள் மற்றும் பால்புதுமை சமூகத்தினர் தங்களது கருத்துகளை முன்வைக்கும்போது யாரும் அதை கண்டுகொள்வதில்லை என்று அம்மாவிடம் கூறும்போது அவரால் அதை புரிந்துகொள்ள முடிகிறது' என்றார். 

ஜன்மேஷ் முதலில் தனது நண்பரிடம் தன்னைப் பற்றி பேசியுள்ளார். இதனால் அவர் பள்ளியில் தவிர்க்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார். பல ஆண்டுகளுக்குப்  பிறகு இன்ஸ்டாகிராமில் தான் ஒரு பால்புதுமையினர் (Queer) என்று கூறியபோது அவருடைய கடந்தகால வகுப்பு பெண்கள் பலரும் ஆதரவாக இருந்து வருவதாகவும் படிப்படியாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது பள்ளியில் தன்னை அடையாளம் காண்பது மகிழ்ச்சியைத் தருவதாகவும் கூறுகிறார். 

இந்த நேரத்தில்தான் குடும்பத்தின் முக்கியத்துவத்தை விளங்குகிறார் பாலினத்திற்கு அப்பாற்பட்ட நமீதா. 'நான் பெற்றோரிடம் என்னுடைய அடையாளத்தை 28 முறை வெளிப்படுத்திருக்கிறேன். என் கருத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இது எனக்கு ஒரு வலுவான வேறொரு குடும்பத்தைத் தேர்வுசெய்ய வழிவகுத்தது' என்றார். 

தன்னை வேறொரு பெயரில் அடையாளப்படுத்திக்கொண்ட திருநம்பி ஸ்டீவ் ரோஜர்ஸ், வெளிப்படுத்திக்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிறப்புரிமை தேவை என்பதை ஒப்புக்கொண்டு அதை ஒரு அதை ஒரு சமூகக் கட்டமைப்பாக முத்திரை இடுகிறார். மேலும், 'தன்னைத்தானே முதன்மைப்படுத்துவது முக்கியம். சுய பாதுகாப்பு முக்கியமானது' என்று வலியுறுத்தி எதிர்காலத்தில் வெளிப்படுத்திக்கொள்ளுதலுக்கான நிகழ்வுகள் மேலும் எங்கள் சமூகத்தினரை ஊக்கமளிக்கும் என்று கூறினார். இவர் பெண்ணாகப் பிறந்து இரண்டு குழந்தைகள் பெற்றபின்னர் திருநம்பியாக தன்னை அடையாளம் கண்டு அங்கீகரித்துள்ளார். 

இறுதியாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுவேதா, இந்த சமூகத்தில் யாரும் தன்னை மறைத்து வாழ வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த சமூகம் தங்களின் அடையாளங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சக மனிதர்களாக பார்த்து எங்களின் உணர்வுகளையாவது மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

(*சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

கட்டுரை தமிழில்: எம். முத்துமாரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com