மனித ரத்தத்தில் முதல் முறையாக பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பு கண்டுபிடிப்பு

உலகில் முதல் முறையாக மனித ரத்தத்தில் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது நெதர்லாந்தில் உள்ள பல்கலை பேராசிரியர்கள் 22 பேரிடம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனித ரத்தத்தில் முதல் முறையாக பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பு கண்டுபிடிப்பு

உலகில் முதல் முறையாக மனித ரத்தத்தில் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது நெதர்லாந்தில் உள்ள பல்கலை பேராசிரியர்கள் 22 பேரிடம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித உடல்கள் ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக்கை உறிஞ்சி சுற்றிவருகின்றன என்பதற்கு இதுவே முதல் சான்றாக உள்ளது. மனித ரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக்குகள் 'என்ன விதமான பாதுகாப்பு, தீங்குகளை' விளைவிக்கக் கூடியவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மனித ரத்தத்தில் சிறிய நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது உலகில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் இன்டர்நேஷனல் இதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில்,  பல்கலை ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமான ரத்த நன்கொடையாளர்கள் 22 பேரின் ரத்த மாதிரிகளில் நடத்தப்பட்ட 5 வகையான பரிசோதனைகளில் 80 சதவிகிதம் பேருக்கு, அதாவது 17 பேருக்கு ரத்தத்தில் சிறிய நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது.  இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆய்வுக்கு எடுத்துக்கொண்டவர்களின் ஒவ்வொரு மில்லி லிட்டர் ரத்தத்திலும் சராசரியாக 1.6 மைக்ரோகிராம் பிளாஸ்டிக் பாலிமர்களைக் கொண்டிருந்தன. அவை 10 பெரிய குளியல் தொட்டிகளில் உள்ள ஒரு டீஸ்பூன் பிளாஸ்டிக்கிற்கு சமமானவை. ரத்தத்தில் உள்ள பிளாஸ்டிக்கினால் என்ன விதமான பாதுகாப்பு, அதிக பிளாஸ்டிக்கினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. சில ரத்த மாதிரிகளில் இரண்டு அல்லது மூன்று வகையான பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது. அதே நேரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட நான்கில் ஒரு பகுதியினரின் ரத்தத்தில் எந்த பிளாஸ்டிக் துகள்களும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும், மனித இரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களால் உடலுக்‍கு பாதுகாப்பானதா, கேடுகளை விளைவிக்கக் கூடியதா என்பது குறித்து ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தால்தான் முழுமையாகத் தெரியவரும். இது குறித்த ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நுண்துகள்களை எளிதாக ரத்தத்திலிருந்து பிரிக்‍கமுடியாது என்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த ஆய்வுக்காக  பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்காகச் செயல்படும் சமூக நிறுவனமான டச்சு தேசிய அமைப்பு நிதியளித்தது.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபடாத அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சுகாதார பொறியியலுக்கான பயோடிசைன் மையத்தின் இயக்குநர் ரோல்ஃப் ஹால்டன் கூறியிருப்பதாவது: "பிளாஸ்டிக் துகள்கள் ரத்த ஓட்டத்தில் நுழைவதற்கான முதல் ஆதாரம் இதுவாகும்." இது குழப்பமான செய்தியாக இருந்தாலும், ரத்தத்தில் உள்ள பிளாஸ்டிக் துகள்களை பொறுத்தவரை, "நாம் முக்கியமாக இருட்டில் இருக்கிறோம்" என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் பிற ஆராய்ச்சிகள் சுற்றுச்சூழலில் பெருமளவில் பொது இடங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளாலும், பூமியை மாசுபடுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக் பொருள்கள் குழந்தை மற்றும் பெரியவர்களின் மலத்தில் பிளாஸ்டிக் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளன, ஆனால் அது உறிஞ்சப்படாமல் செரிமான பாதை வழியாக செல்லும் துகள்கள். மனித நஞ்சுக்கொடிகளில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் ரத்தத்தின் வழியாக பயணிப்பதாக பரிந்துரைத்தது, ஆனால் அதற்கு சரியான ஆதாரம் இல்லை. ஆனால் மனித ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் உறிஞ்சப்படுவதற்கான முதல் உறுதியான சான்று இதுவாகும், அங்கு அவை உடல் முழுவதும் பயணிக்க முடியும் என்று ஹால்டன் கூறியுள்ளார்.

இது நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் மற்றும் சுவாசிக்கும் காற்றில் இருப்பதால், சராசரி அமெரிக்கர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொண்டு அதே அளவு உள்ளிழுக்கிறார்கள் என்று 2019 இல் வெளிவந்த ஆய்வு தெரிவிக்கிறது.  2021 முதல், ஒரு நபர் ஒவ்வொரு வாரமும் கிரெடிட் கார்டில் உள்ள பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார்கள் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. 

பிளாஸ்டிக் மாசுபாடு மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களை மோசமாக பாதிப்படையச் செய்கிறது. மனிதர்கள் உண்ணும் உணவு, தண்ணீர் மற்றும் சுவாசிக்கும் காற்று என பல்வேறு வழிகளில் பிளாஸ்டிக்கை உட்கொண்டு வருகிறார்கள். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் மனித செல்களை சேதப்படுத்தும் என்று கூறியுள்ள காமன் சீஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜோ ராய்ல், "பிளாஸ்டிக் உற்பத்தி 2040-இல் இரட்டிப்பாகும்" என்று  கூறியுள்ளார். 

சமீபத்தில், சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் ரத்த சிவப்பணுக்களின் திறனைக் கட்டுப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மேற்கண்ட ஆய்வுகள் பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் புற்றுநோய் அபாயம் மற்றும் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் மனித உடலை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை அறிய விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது.

ஏற்கெனவே, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாகக் கடைபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும், இதன் தீவிரத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதிலும் அதை அமல்படுத்துவதிலும் காட்டும் அலட்சியத்தால், மக்களின் ஆரோக்கியத்தில் மேலும் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. இதன் விளைவுகளை உணர்ந்து விரைந்து நவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் மீதான அலட்சியப் போக்கு தொடருமானால் மனித குலம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com