காற்று மாசு உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா

அனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 90 லட்சமாக உள்ளது.
காற்று மாசு உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா


புது தில்லி: அனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 90 லட்சமாக உள்ளது. இதில் காற்று மாசு முக்கியப் பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த "தி லான்செட் மருத்துவ இதழ்' உலகம் முழுவதும் மாசுபாடுகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றால் ஏற்படும் காற்று மாசுவும் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் இந்தியா: உலக அளவில் 2019}ஆம் ஆண்டில் அனைத்து வகையான மாசுபாட்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 
அதில் வீடுகளிலிருந்து ஏற்படும் காற்று மாசு மற்றும் சுற்றுப்புற காற்று மாசு காரணமாக மட்டும் 66.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இந்தியா 23.5 லட்சம் உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதில் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு காரணமாக 9.8 லட்சம் உயிரிழப்புகளும், வீடுகளினால் ஏற்படும் காற்று மாசு காரணமாக 6.1 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த மாசுபாட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகளைப் பொருத்தவரை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காற்று மாசு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து பொது கவலை அதிகரித்துள்ளபோதும், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு என்பது கடந்த 2015}ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
இந்தியாவில் காரணம் என்ன? இந்தியாவைப் பொருத்தவரை வீடுகளில் விறகுகள் உள்ளிட்ட உயிரிக் கழிவுகள் எரிக்கப்படுவதே காற்று மாசுவுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது. 
அதற்கு அடுத்தபடியாக, நிலக்கரி எரிப்பது, பயிர்க் கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.
காற்று மாசு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய தூய்மை காற்று திட்டம் அறிமுகம், தேசிய தலைநகர் பிராந்திய (என்சிஆர்) பகுதியில் காற்று தர மேலாண்மை ஆணையம் அமைத்தது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமான நடவடிக்கைகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 
வருகின்றன. 
இருந்தபோதும், காற்று மாசுவைக் கட்டுப்படுத்த வலுவான மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக, ஒட்டுமொத்த காற்றின் தரத்தின் மேம்பாடு குறைவாகவும், சீரற்றதாகவும் உள்ளது.

ரூ.357 லட்சம் கோடி இழப்பு

மாசுபாட்டால் ஏற்பட்டிருக்கும் கூடுதல் உயிரிழப்புகள் காரணமாக உலக அளவில் 2019}ஆம் ஆண்டில் ரூ.357 லட்சம் கோடி 
(4.6 டிரில்லியன் டாலர்) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மொத்த உலகப் பொருளாதாரத்தில் 6.2 சதவீதமாகும்.
இந்தியாவில் காற்று மாசு, ஓசோன் மாசு, தொழில்சார் புற்றுநோய்கள் உள்ளிட்ட நவீன வடிவ மாசுபாடு காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பு 2000 } 2019}ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நீர்நிலை மாசுபாடு

காற்று மாசுவுக்கு அடுத்தபடியாக நீர்நிலை மாசுபாடு காரணமாக உலக அளவில் 13.6 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்க போஸ்டன் கல்லூரி உலக பொது சுகாதாரத் திட்டம் மற்றும் உலக மாசுபாடு கண்காணிப்புத் திட்ட இயக்குநர் பேராசிரியர் பிளிப் லாண்டிரீகன் கூறுகையில், "மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாசுபாடு இருந்து வருகிறது. காற்றுமாசுவை தடுப்பதன் மூலமாக, பருவநிலை மாற்றத்தைக் குறைக்க முடியும் என்பதோடு, புவியின் நலனுக்கும் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். 
எனவே, படிம எரிபொருள் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com