சோழர் காலத்தில் கடற்படை!

அக்காலத்தில் இனக்குழுச் சமுதாயமாக இருந்த தமிழகத்தில் கடல் வழிப் போக்குவரத்துக்கான ஆதாரங்கள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர். 
சோழர் காலத்தில் கடற்படை!


சங்க காலச் சோழனான கரிகாலன் காலத்தில் இலங்கை மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டைக் கைப்பற்றி 12,000 சிங்களவர்களைச் சிறை செய்து, சோழ நாட்டுக்குக் கொண்டு வந்தான் எனப் புறநானூறு கூறுகிறது. கைதிகளாகக் கொண்டு வரப்பட்ட சிங்களவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரை கட்டினான் என்ற செய்தி காணப்படுகிறது. கரிகாலச் சோழனின் இலங்கைப் படையெடுப்பு கி.பி. 111 முதல் கி.பி. 114 ஆம் ஆண்டுக்கு உள்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிற்காலச் சோழர்கள் வலிமை பெறத் தொடங்கினர். பல்லவ, பாண்டிய நாடுகளைச் சோழர்கள் வெற்றி கொண்டனர். குறிப்பாக, பாண்டிய மன்னர்களுக்கும், சோழ மன்னர்களுக்கும் இடையே கடும் பகை மூண்டது. இச்சூழ்நிலையில் பாண்டியர்களுக்குச் சிங்கள மன்னர்கள் அவ்வப்போது துணைப் புரிந்தனர். இதன் விளைவாக சிங்கள மன்னர்களை ஒடுக்கி, இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் சோழர்களுக்கு ஏற்பட்டது.

எனவே, கி.பி. 923 - 934 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த பராந்தகச் சோழன் காலம் முதல் ஈழ நாட்டின் மீது படையெடுப்பு நிகழ்ந்தது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எனத் தலைமுறைகள் தொடர்ந்து வீர ராஜேந்திர சோழன் காலம் வரை இப்படையெடுப்பு நீடித்தது மட்டுமல்லாமல், வெற்றியும் கொண்டது.

இதேபோல, பர்மா மீது ராஜேந்திர சோழன் இரு முறை படையெடுப்பு நிகழ்த்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 


பல்லவர் காலத்துக்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் செல்வாக்கு தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஓங்கியது. சோழப் பேரரசர்கள் எந்த நாட்டைக் கைப்பற்றினாலும் அங்கு தங்கள் முத்திரையைப் பதித்தனர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் கைப்பற்றி அந்நாடுகளில் சோழர் குலத்தைச் சேர்ந்தவர்களை அரசர்களாக நியமித்தனர். சோழப் பேரரசர்களில் மிகச் சிறந்தவனான ராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்று தாய்லாந்தின் சில பகுதிகளையும் கைப்பற்றினான் என்பதற்கான வரலாற்று ரீதியான சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும், ராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு மிகப் பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாகச் சோழ நாடு இருந்தது. அயல்நாட்டுக்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் என்ற பெருமை ராஜேந்திர சோழனைச் சாரும். மகிபாலனை வென்று வங்க தேசத்தைச் சோழ நாட்டுடன் இணைத்தவன். அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கினான்.


ஆனால், அக்காலத்தில் இனக்குழுச் சமுதாயமாக இருந்த தமிழகத்தில் இப்படையெடுப்புகள், கடல் வழிப் போக்குவரத்துகள் சாத்தியமா என்ற கேள்வியையும் சில வரலாற்று ஆசிரியர்கள் எழுப்புகின்றனர். ஆனால், இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஒரு தரப்பினர் முன் வைக்கின்றனர். 

இதையும் படிக்க |  சோழர் கால அரண்மனை எங்கே?

இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி மறைந்த ந. அதியமான் 2016 ஆம் ஆண்டில் தெரிவித்தது:

சங்க இலக்கியம், அயலவர் குறிப்புகளின் அடிப்படையில் சங்க காலத் தமிழகம் ஓர் இனக்குழுச் சமூகமாகவே இருந்துள்ளது என்பதைப் பல அறிஞர்கள் முன் வைக்கின்றனர். அண்மைக் காலங்களில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் சான்றுகள் மூலம் சங்ககாலச் சமுதாயம் கட்டமைக்கப்பட்ட சமுதாயமாக விளங்கியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலான சங்ககாலத்தில்தான் எழுத்துகள் வருகின்றன. பானை ஓடுகள், சமண படுக்கைகளில் வரலாறு எழுதும் அளவுக்கு எழுத்து வளர்ச்சி பெற்றது. இவற்றில் உப்பு வணிகன், துணி வணிகன், கொலு வணிகன், பணித (அழகுப்பொருள்) வணிகன் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன. 

ராஜேந்திர சோழன் காலத்தில் ஆட்சிப் பரப்பு
ராஜேந்திர சோழன் காலத்தில் ஆட்சிப் பரப்பு

மேலும், கி.மு. 30 ஆம் ஆண்டில் (ஓராண்டில்) மட்டும் 120 கப்பல்களில் 70,000 டன்கள் பொருள்கள் தமிழகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், சராசரியாக ஒரு கப்பலில் 625 டன்கள் கொண்டு சென்றதாகவும் ஸ்ட்ராபோ என்ற ரோமானியர் கூறியுள்ளார். இங்கிருந்து மிளகு, தந்தம், ஆமை ஓடு, பிரியாணி இலை, துணி போன்றவற்றை ரோமானியர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். இவற்றில் தந்தம் போனதற்கு உரிய ஆவணங்கள் இருக்கின்றன.

தவிர, தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, சுமத்ரா, தாய்லாந்து போன்ற தீவுகளிலிருந்து நறுமணப் பொருள்களை வாங்கி வந்து ரோமானியர்களுக்குக் கொடுத்துள்ளனர். இதற்குப் பதிலாக ரோமானியர்கள் நம் ஊரில் கிடைக்காத தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளைக் கொடுத்துள்ளனர். இதுவே, தமிழகத்தில் ரோமானிய தங்க, வெள்ளிக் காசுகள் அதிக அளவில் கிடைப்பதற்குக் காரணம். 

இதையும் படிக்க |  பழையாறை - கிராமமாக மாறிய தலைநகரம்!

இதேபோல, அரேபியர்கள் கடல் வழியாகக் கொண்டு வந்த குதிரைகள் கேரளம், தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள், ஆடைகள் போன்றவை துறைமுகங்களுக்கும், வடநாட்டில் உள்ள ஊர்களுக்கும் பெருவழிகள் (நெடுஞ்சாலைகள்) வழியாகக் கொண்டு செல்லப்பட்டதையும், அவ்வழிகளில் செல்லும்போது 'உல்கு' என்ற சுங்கம் வசூலிக்கப்பட்டதையும், சுங்கம் வசூலிக்கப்பட்ட பிறகு பண்டங்களுக்குப் புலி போன்ற இலச்சினை பொறிக்கப்பட்டதையும் இலக்கியங்கள் கூறுகின்றன.

இதன் மூலம், தமிழர்கள் ஆழ் கடலில் கலம், நாவாய், வங்கம் செலுத்தும் திறனுடையவர்களாக இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

எனவே, சோழர் காலத்தில் படை எடுத்துச் சென்று தென்கிழக்கு ஆசிய நாடுகளில் போரிட்டு வென்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. இதில், ராஜேந்திர சோழன் காலத்தில் சென்று போரில் வென்றதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. வணிகர்கள், மாலுமிகள் மூலம் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்வதற்கான வழிகளை அறிந்திருக்கலாம். அவர்களையும் உடன் அழைத்துச் சென்று வழியை அறிந்து சென்றிருக்கலாம். வணிகர்கள், மாலுமிகள் மூலமாகவே அங்குள்ள படை பலம், அந்நாட்டினரின் போர் திறன் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்திருக்கலாம்.

பாய் மரக் கப்பல்கள் மூலம் பருவக் காற்றைப் பயன்படுத்திச் சென்று போரிட்டு, அடுத்த பருவக் காற்று வரும்போது திரும்பியிருக்கலாம். இக்கப்பல்கள் மணிக்கு 3 முதல் 4 நாட்டிக்கல் மைல் (1.8 கி.மீ.) செல்லும். எனவே, ராஜேந்திர சோழன் சுமத்ரா, ஜாவா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு 12 முதல் 20 நாள்களில் சென்றிருக்கலாம்.

வழக்கமான படை வீரர்களையே கப்பல்களில் அழைத்து சென்று போர் செய்தனரா? இதற்கென தனியாகக் கடற்படை இருந்ததா? என்பதற்கான சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை. இதுதொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது என்றார் அதியமான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com