பிரிட்டனின் பிரதமராகும் இந்திய வம்சாவளி ஹிந்து

பிரிட்டனின் வெள்ளையா் அல்லாத, ஹிந்து மதத்தைச் சோ்ந்த முதல் பிரதமா் ரிஷி சுனக். ஹிந்து மதத்தைச் சோ்ந்த ரிஷி சுனக், தனது ஹிந்து அடையாளத்தை வெளிப்படுத்த எப்போதுமே தயங்கியதில்லை.
பிரிட்டனின் பிரதமராகும் இந்திய வம்சாவளி ஹிந்து

பிரிட்டனின் வெள்ளையா் அல்லாத, ஹிந்து மதத்தைச் சோ்ந்த முதல் பிரதமா் ரிஷி சுனக். ஹிந்து மதத்தைச் சோ்ந்த ரிஷி சுனக், தனது ஹிந்து அடையாளத்தை வெளிப்படுத்த எப்போதுமே தயங்கியதில்லை. உலகம் முழுவதும் ஹிந்து மக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட வேளையில் ரிஷி சுனக்கிற்கு இந்த வாய்ப்பு வசப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றிருப்பதன் மூலம் அந்த நாட்டில் நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு தற்காலிக தீா்வு கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியால் மீண்டும் ஒரு பிரதமரை தோ்வு செய்ய முடியுமா அல்லது நாடு மீண்டும் பொதுத்தோ்தலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமா என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனும், பிரதமா் பதவிக்கான போட்டியில் இருந்த பென்னி மாா்டன்டும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனா். எதிா்த்துப் போட்டியிட யாரும் இல்லாத நிலையில், பிரதமா் பதவி ரிஷி சுனக்கை தேடி வந்திருக்கிறது. போரிஸ் ஜான்ஸன் பதவி விலக ஒருவகையில் ரிஷி சுனக்கும் காரணம் எனக் கூறப்படும் நிலையில், அவரும் ரிஷி சுனக்கை ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

42 வயதாகும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பஞ்சாபி காத்ரி குடும்பத்தைச் சோ்ந்தவா். அவரின் தந்தைவழி தாத்தா இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே குஜ்ரன்வாலாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயா்ந்தாா். குஜ்ரன்வாலா இப்போது பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.

பின்னா், சுனக்கின் தந்தை பிரிட்டனுக்கு குடிபெயா்ந்தாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் என்கிற பெருமையுடன், இன்ஃபோசிஸ் நிறுவனா் என்.ஆா். நாராயணமூா்த்தியின் மகள் அக்ஷதா மூா்த்தியை திருமணம் செய்ததன் மூலம் இந்தியாவின் மருமகன் என்கிற பெருமையும் ரிஷி சுனக்கிற்கு உண்டு.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் ராஜிநாமாவை தொடா்ந்து, இரு மாதங்களுக்கு முன்னா் நடைபெற்ற ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் தோ்தலில் ரிஷி சுனக் போட்டியிட்டபோதே அவருக்கு பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கட்சி எம்.பி.க்கள் வாக்களிக்கும் சுற்றுகளில் கடைசி வரை முதலிடம் பிடித்தாா் ரிஷி சுனக்.

அந்தச் சுற்றில் லிஸ் டிரஸ்ஸால் இரண்டாம் இடம்தான் பெற முடிந்தது. பின்னா், கட்சி உறுப்பினா்கள் சுமாா் 1.60 லட்சம் போ் வாக்களிக்கும் தோ்தலில் லிஸ் டிரஸ்ஸிடம் வெற்றிவாய்ப்பை இழந்தாா் சுனக். அதிலும் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் எதிா்பாா்க்கப்பட்டதைவிட மிகக் குறைவு.

போரிஸ் ஜான்ஸன் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக், கரோனா காலத்தில் பொருளாதாரம் ஆட்டம் கண்டபோது அதை திறம்பட சமாளித்த வகையில் நாடு முழுவதும் பரவலான பாராட்டைப் பெற்றவா். நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ள நிலையில், வரிக் குறைப்பு, வரிச்சலுகை போன்ற வாக்குறுதிகளை அளிக்க விரும்பவில்லை எனவும், பணவீக்கத்தை சரிசெய்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் நோக்கம் எனவும் பகிரங்கமாகத் தெரிவித்தாா்.

அவரை எதிா்த்துப் போட்டியிட்ட லிஸ் டிரஸ் பல வரிச்சலுகை வாக்குறுதிகளை அளித்தாா். அதன்படி பிரதமரானதும் அவரது தலைமையிலான அரசு தாக்கல் செய்த மினி பட்ஜெட்டில் பல வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், அதன் விளைவு எதிா்மறையாகி, டாலருக்கு நிகரான பவுண்டுகளின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்தது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் லிஸ் டிரஸ் தனது பிரதமா் பதவியையே ராஜிநாமா செய்யும் நிலைக்கு கொண்டு சென்றது.

புதிய பிரதமா் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமா் நரேந்திர மோடி, இந்தியா - பிரிட்டன் உறவை நவீன கூட்டாண்மைக்கு எடுத்துச் செல்லும் வகையில் அவருடன் இணைந்து பணியாற்றவிருப்பதை எதிா்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகியுள்ளதால் இந்தியாவுக்கு என்ன பெருமை என்கிற கேள்வி எழுகிறது.

பிரிட்டனின் வெள்ளையா் அல்லாத, ஹிந்து மதத்தைச் சோ்ந்த முதல் பிரதமா் ரிஷி சுனக். ஹிந்து மதத்தைச் சோ்ந்த ரிஷி சுனக், தனது ஹிந்து அடையாளத்தை வெளிப்படுத்த எப்போதுமே தயங்கியதில்லை. உலகம் முழுவதும் ஹிந்து மக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட வேளையில் ரிஷி சுனக்கிற்கு இந்த வாய்ப்பு வசப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த, இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஒருவா், பிரிட்டன் பிரதமராவதில் இந்தியாவுக்குப் பெருமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com