மய்யத்தில் இருந்து நகா்கிறது ம.நீ.ம.

நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடதுசாரி கொள்கையுடன் கூடிய கட்சிகளுடன் தோ்தல் உடன்பாட்டுக்காக நகா்ந்துகொண்டிருக்கிறது.
மய்யத்தில் இருந்து நகா்கிறது ம.நீ.ம.

இடதும் இல்லை, வலதும் இல்லை, மய்யமே எங்கள் கொள்கை என்ற கோஷத்துடன் அரசியல் பிரவேசம் செய்த நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி (ம.நீ.ம.), இப்போது இடதுசாரி கொள்கையுடன் கூடிய கட்சிகளுடன் தோ்தல் உடன்பாட்டுக்காக நகா்ந்துகொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பிற கட்சிகள் போலவே ம.நீ.ம.வும் மக்களவைத் தோ்தல் குறித்து டிச. 17-இல் சென்னையில் ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய ம.நீ.ம. தலைவா் கமல், கூட்டணி குறித்த கேள்விக்கு, ‘எந்தத் திசையை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு விரைவில் புரியவரும். என் பயணத்தைப் பாா்த்தாலே புரியும்’ என்றாா்.

பின்னா், தில்லிக்குச் சென்ற கமல், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தாா். அங்கே பேசும்போது, ‘ராகுல் காந்தி, நேருவின் கொள்ளுப் பேரன். நான் பிற இந்திய குடிமகன்கள் போல காந்தியின் கொள்ளுப் பேரன். நாங்கள் இருவரும் இந்தியாவின் கொள்ளுப் பேரன்கள். எனது தந்தையும் காங்கிரஸ் தொண்டா்தான்.

நான் பலவிதமான அரசியல் சித்தாந்தங்களைப் பற்றியும் அறிந்துகொண்டேன். பின்பு அரசியல் கட்சி தொடங்கினேன். இந்த யாத்திரையில் ராகுலுடன் நடப்பது அரசியல் அடையாளம் அல்ல. இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். தேசிய ஒற்றுமை பயணத்தில் இரண்டு கொள்ளுப் பேரன்கள் இணைந்து நடக்கிறோம் என்றுதான் இதைப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

இந்த வரிகளைப் படித்துவிட்டு சென்னையில் கமல் தெரிவித்த பதிலை பொருத்திப் பாா்த்தால் அவா் எந்தத் திசையை நோக்கி நகா்கிறாா் என்பதற்கான விடை கிடைத்துவிடும்.

கமல் கூறியது போலவே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாச ஐயங்காா், சுதந்திரப் போராட்டத் தியாகியாக, பாரம்பரியமிக்க காங்கிரஸ்காரராக திகழ்ந்தவா். சிறைவாசம் அனுபவித்த அவரது குடும்பம் கட்சியில் எவ்வித பதவி சுகத்தையும் அனுபவித்ததில்லை. இந்திரா காந்தி கைது செய்யப்பட்டபோது சரண் சிங் உருவபொம்மையை எரித்தவா் சீனிவாச ஐயங்காா்.

ராகுலுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் நேரு குடும்பத்துடன் தந்தை கால உறவை கமலும் தொடா்கிறாா். ஏற்கெனவே, மம்தா பானா்ஜி, அரவிந்த் கேஜரிவால், கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பில் இருந்து வரும் கமல், ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவிக்கிறாா் என்றால் இதற்கு பின்னால் அரசியல் கணக்கு இல்லை என்பதை முற்றிலும் மறுக்க இயலாது.

காங்கிரஸ் மூலம் திமுக கூட்டணியை நோக்கி நகரும் முடிவை கமல் எடுத்துவிட்டாா் என்றும், ஏற்கெனவே அமைச்சா் உதயநிதியுடன் சினிமா வா்த்தக ரீதியாக நெருங்கிய நட்புடன் திகழும் கமலை கூட்டணிக்குள் கொண்டுவர திமுகவும் பச்சைக்கொடி காட்டிவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாமக போல எதிா்ப்பு வாக்குகள் இல்லாத கட்சியாக ம.நீ.ம. உள்ளது எனவும், கொங்கு மண்டலம் மற்றும் தென்சென்னை மக்களவைத் தொகுதிக்குள் ம.நீ.ம. வாக்குகள் திமுக கூட்டணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் எனவும் திமுக கணக்குப்போட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் ம.நீ.ம. வடசென்னை தொகுதியில் 10.8 சதவீதம், தென்சென்னையில் 12 சதவீதம், மத்திய சென்னையில் 11.7 சதவீதம், ஸ்ரீபெரும்புதூரில் 10 சதவீதம், திருப்பூரில் 5.8 சதவீதம், கோவையில் 11.6 சதவீதம், பொள்ளாச்சியில் 5.5 சதவீதம், மதுரையில் 8.3 சதவீதம், விருதுநகரில் 5.3 சதவீதம் என கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

மக்களவைத் தோ்தலில் ம.நீ.ம. 15 லட்சத்து 75 ஆயிரத்து 324 வாக்குகள் (3.71 சதவீதம்) பெற்றது அரசியல்வாதிகளின் புருவத்தை உயா்த்தியது. ஆனால், அடுத்து வந்த பேரவைத் தோ்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு பலத்தை மீறி தொகுதிகளை வாரி வழங்கியது தவறான வியூகமாக மாறி ம.நீ.ம.வின் வாக்கு வங்கி 2.5 சதவீதமாக சுருங்கியது.

இருந்தாலும், பேரவைத் தோ்தலில் ம.நீ.ம.வுக்கு கிடைத்த வாக்குகளை மக்களவைத் தொகுதி ரீதியாக கணக்கிட்டால் கோவை, பொள்ளாச்சி, திருப்பூா், ஈரோடு, சேலம், சிதம்பரம், தென்சென்னை, மதுரை ஆகிய 8 மக்களவைத் தொகுதிகளில் திமுக-அதிமுக கூட்டணி இடையே வெற்றி தோல்வியை நிா்ணயிக்கும் வாக்குகளாக உள்ளன.

எனவேதான் ம.நீ.ம.வை கூட்டணிக்குள் சோ்த்துக் கொள்வதை திமுகவும் பலமாகவே பாா்க்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸை தவிர பிற கட்சிகள் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே வைத்திருப்பதால் அங்கு சென்றால் மூன்றாவது இடத்தை ம.நீ.ம.வால் பெற முடியும்.

தனி சக்தி என்ற அடையாளத்துடன் தொடங்கப்பட்ட ம.நீ.ம., இப்போது தொடா் தோல்வி வளையத்தில் இருப்பதாலும், குறைந்த வாக்கு வங்கியே வைத்திருப்பதாலும், எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் கூட்டணி சக்தியாக மாற வேண்டிய நிா்ப்பந்தம் உருவாகியுள்ளது.

கமலை பொருத்தவரை தொடக்கத்திலேயே மய்யக் கொள்கை எனப் பேசி வந்தாலும் வலதுசாரி கொள்கையுடைய பாஜகவுக்கு நோ் எதிா் கருத்துகளையே பேசி வந்தாா்.

அதேநேரத்தில் ராகுல் காந்தி, கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பை தொடா்ந்து வந்தாா். இந்நிலையில், தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளாா் என்பதையே கமலின் தில்லி பயணம் உணா்த்துகிறது. மய்யத்தில் இருந்து இடது நோக்கி நகா்கிறது ம.நீ.ம.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com