Enable Javscript for better performance
ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆயுத பூஜை (அக்.10) விடுமுறையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக கோயம்பேட்டில் பயணிகள் குவிந்தனர்.
    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகாரின் பேரில் அந்தப் பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    ஆயுத பூஜை, விஜயதசமி, மொஹரம் என அடுத்தடுத்து பண்டிகை கால விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சென்னையில் உள்ள பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் செல்லத் தொடங்கியுள்ளனர்.
    இதனால் சனிக்கிழமை பிற்பகல் முதல் முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
    அதேநேரத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றவாறு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் இருந்து நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பேருந்துகள் (எஸ்.இ.டி.சி.) வழக்கத்தை விட தேவைப்பட்டால் கூடுதலாக இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    முன்னதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேட்டுக்கு அதிகாரிகளுடன் சென்று பேருந்து பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
    பண்டிகைக் காலம், கூட்ட நெரிசல் ஆகியவற்றை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
    வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் கோயம்பேடு பேருந்து நிலையம், மதுரவாயல், போரூர், ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடிகளிலும், பெருங்களத்தூர், கிழக்கு கடற்கரை சாலை, எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    வெள்ளிக்கிழமை முதல் நடத்தப்பட்டு வரும் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் முறையான ஆவணங்கள், தகுதிச் சான்று இல்லாமல் ஓட்டியது, உரிய வரி செலுத்தாமல் இயக்கியது தெரியவந்தது.
    கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சென்னையில் இருந்து ஐதராபாத், கம்பம், காரைக்கால், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு சொல்ல தயாராக இருந்த ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
    சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு வழக்கமான கட்டணம் ரூ.1200-க்கு பதிலாக ரூ.2200 வசூலிக்கப்பட்டது. கம்பத்திற்கு ரூ.600-க்கு பதிலாக ரூ.1200-ம், காரைக்காலுக்கு ரூ.500-க்கு பதிலாக ரூ.950-ம், திருவனந்தபுரத்திற்கு ரூ.1400-க்கு பதிலாக ரூ.2100 வசூலிக்கப்பட்டன. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து இருந்ததை அதிகாரிகள் உறுதிசெய்தனர். ஆனால் பயணிகளின் பயணம் பாதிக்க கூடாது என்பதற்காக அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்க ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.
    இதை ஏற்று கொண்ட உரிமையாளர்கள் 4 ஆம்னி பேருந்து பயணிகளிடம் இருந்தும் அதிகமாக வசூலித்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.
    இது தவிர 150 ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டன. ஒரே நளில் மட்டும் ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டன. இந்த சோதனை 13-ந்தேதி வரை நடைபெறும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai