ஐ.எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை
By கடையநல்லூர் | Published On : 08th October 2016 08:21 AM | Last Updated : 08th October 2016 08:21 AM | அ+அ அ- |

கடையநல்லூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதி சுபஹனி ஹாஜாமொய்தீன் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பல மணி நேரம் அப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்பட்ட 6 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அவர்களில் ஒருவரான கேரள மாநிலம் திருச்சூர் வெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கவாலிக்முகமது அளித்த தகவலின் பேரில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் காதர்முகைதீன் பள்ளிவாசல் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த சுபஹனி ஹாஜாமொய்தீனை (31) கடந்த 3-10-16 அன்று கடையநல்லூரில் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் ஐ.எஸ். அமைப்புடன் உள்ள தொடர்பு குறித்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பின் கூடுதல் கண்காணிப்பாளர் சவுகத்அலி தலைமையிலான குழுவினர் மற்றும் சிறப்பு புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையிலான குழுவினர் கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனை கடையநல்லூருக்கு அழைத்து வந்தனர்.
அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது.
சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.