Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் முகவை ஊருணி- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் முகவை ஊருணி

    By ராமநாதபுரம்  |   Published on : 08th October 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியால் உருவாக்கப்பட்டு, நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய முகவை ஊருணி, 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தூர்வாரப்படுவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ராமநாதபுரம் அரண்மனையின் மேற்குப் பகுதியில் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது முகவை ஊருணி. ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியால் உருவாக்கப்பட்ட இந்த ஊருணியில், பொதுமக்கள் குடங்கள் மூலமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் குடிநீரை எடுத்துச் செல்வது வழக்கமாகவும் இருந்துள்ளது.

    வற்றாத ஊருணியான இது, நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின்றி வற்றிப்போனது. மேலும், ஆகாயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து ஊருணியை மூடியிருந்தன.

    தற்போது, இந்த ஊருணி சுமார் 12 அடி ஆழத்துக்கு தூர்வாரப்பட்டு வருகிறது. இதில், 5-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூர்வாரி அள்ளும் மணலால் கரைகளும் பலப்படுத்தப்படுகின்றன. சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊருணி தூர்வாரப்படுவதால், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் பெருகியிருப்பதாக, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து அப்பகுதியில் வசிப்பவரும், வரலாற்று ஆய்வாளருமான வைகிங் எம்.எஸ். கருணாநிதி கூறியது:
    ராமநாதபுரத்தை மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி 1678 முதல் 1710 வரை ஆண்ட காலத்தில் இந்த ஊருணி உருவாக்கப்பட்டது. 1970 வரை ஊர் மக்களே குடங்களைக் கொண்டுவந்து தண்ணீரை எடுத்துச் சென்றனர். ஊருணிக்குள் யாரும் இறங்கக் கூடாது என்றும், அதற்காக இரு காவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த ஊருணிக்குள் மன்னரும், ராணியும் குளித்து மகிழ்வதற்காக மாம்பழ வடிவில் மாம்பலக் கேணி மற்றும் வட்டக் கேணி, சதுரக் கேணி, நெய்க்கிணறுக் கேணி என 4 வகையான நீரூற்றுக் கிணறுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    மேலும், மன்னர் தான் இறந்த பிறகு மாம்பழக் கேணிக்கு நேர்கோட்டில் எதிர்ப்புறத்தில் தனது சமாதியை அமைக்கும்படியும் கூறியிருந்தார். அதன்படியே அவரது சமாதியை, மருமகனான விஜயரகுநாத சேதுபதி அமைத்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊருணி சுமார் 325 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலேயே இருநதது. ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டிக் கிடந்தன. தற்போது, இந்தக் கண்மாய் தூர்வாரப்படுவதால், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வளம் பெருகியிருக்கிறது. குளிர்ந்த காற்றும் வீசுகிறது என்றார்.
    இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் கூறியது:
    ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 33 கண்மாய்கள் ரூ. 26 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. ரூ. 3 கோடி மதிப்பில் வரத்துக் கால்வாய்களின் மேம்பாட்டுப் பணிகளும் நடந்து வருகின்றன. மழைக் காலத்தில் நீரை சேமித்து விவசாயப் பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai