‘பிரேமலதா மரியாதையுடன் அழைத்தது பண்ருட்டியாரை மட்டும் தான்’ : தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார்!

பிரேமலதா எப்போதும் யாரையும் மரியாதையுடன் அழைத்து நான் கண்டதில்லை. அத்துடன் தேமுதிகவில் அவர் மரியாதையுடன் அழைத்த ஒரே நபர் என்றால் அது அண்ணன் பண்ருட்டியார் மட்டுமே!
‘பிரேமலதா மரியாதையுடன் அழைத்தது பண்ருட்டியாரை மட்டும் தான்’ : தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார்!

தனியார் செய்தி தொலைக்காட்சியொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக முன்னாள் எம் எல் ஏ சந்திரகுமார், தேமுதிக பொருளாளரும், கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல் அரசியல் நாகரீகம் குறித்துப் பேசுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணலில் நெறியாளர், சந்திரகுமாரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது இரு நாட்களுக்கு முன்பு தேமுதிக ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரேமலதா அங்கிருந்த நிருபர்களையும், பத்திரிகையாளர்களையும் ஒருமையில் ஏகவசனத்தில் அழைத்துப் பதில் கூறிக் கொண்டார். இது குறித்து பத்திரிகையாளர்கள் அப்போதோ கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். அதையொட்டிய கேள்வியொன்று நேற்று முன்னாள் தேமுதிக எம் எல் ஏ சந்திரகுமாரிடம் கேட்கப்பட்டது. பிரேமலதா திடீரென்று இப்படி யாரையும் ஏக வசனத்தில் அழைக்க முடியாது இல்லையா? அவர் கட்சிக்காரர்களை எவ்விதமாக அணுகுவார்? கட்சிக்காரர்களுக்கு தேமுதிக அலுவலகத்திலும் விஜயகாந்த் வீட்டிலும் மரியாதை அளிக்கப்படுமா? அல்லது செய்தியாளர் சந்திப்பில் பேசியதைப் போல ஏக வசனத்தில் தான் எல்லோரையும் அழைப்பாரா பிரேமலதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சந்திரகுமார் அளித்த பதில்;

நான் தேமுதிகவில் இருந்தவரை என்னையும் அவர் ஏக வசனத்தில் தான் அழைத்துப் பேசுவார். கேப்டனாவது எப்போதாவது  'வாங்க சந்திரகுமார்' என்று மரியாதையுடன் அழைப்பார். ஆனால், பிரேமலதா எப்போதும் யாரையும் மரியாதையுடன் அழைத்து நான் கண்டதில்லை. அத்துடன் தேமுதிகவில் அவர் மரியாதையுடன் அழைத்த ஒரே நபர் என்றால் அது அண்ணன் பண்ருட்டியார் மட்டுமே! பிறரை ஏக வசனத்தில் ஒருமையில் அழைப்பது பிரேமலதாவின் இயல்பு. அவர் தான் அப்படி என்றால் அவர் தனது மகன்களுக்காவது மரியாதை என்றால் என்னவென்று கற்றுத் தந்திருக்க வேண்டும். அவர்களும் அவரைப் போலவே அரசியல் நாகரீகம் அற்று எதிர்கட்சியினரையும், மாற்றுக் கட்சிப் பிரமுகர்களையும் ஏக வசனத்தில் விமர்சிப்பது நல்லதற்கல்ல. அவர்களால் விமர்சிக்கப்படும் அரசியல் பிரமுகர்களின் அரசியல் அனுபவத்திற்கு ஈடாகும் வயதைக் கூட அவரது மகன்கள் எட்டவில்லை என்பதை பிரேமலதா அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆனால் அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தேமுதிகவில் இருந்தவரை நான் அவர்கள் சொன்ன வேலைகளை எல்லாம் செய்யும் வேலைக்காரனாகத் தான் இருந்தேனே தவிர அங்கே மரியாதை எல்லால் கிடைக்காது. எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் எவரும் அங்கு நீடிக்க முடியாது. வெளியில் விரட்டப்பட்டு விடுவார்கள். என்று சந்திரகுமார் பதில் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com