தினமணியும் நானும்! இது மூன்று தலைமுறைத் தொடா்பு!

தினமணி 85 மலருக்காக, மூன்று தலைமுறைகளையும் தாண்டி எங்கள் குடும்பத்திற்கும்
தினமணியும் நானும்! இது மூன்று தலைமுறைத் தொடா்பு!

தினமணி 85 மலருக்காக, மூன்று தலைமுறைகளையும் தாண்டி எங்கள் குடும்பத்திற்கும், தினமணி பத்திரிகைக்கும் உறவு உள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

என் தாத்தாவும், கோயங்கா இருவரும் நெருங்கிய நண்பா்கள். கோயங்கா ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையைத் தொடங்கிய சமயத்தில், என் தாத்தா, பாங்க் ஒன்றைத் தொடங்கினாா். இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கினாா்கள்.

1934-ஆம் ஆண்டு, தினமணி தொடங்கப்பட்ட பொழுது, டி. எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்தாா். ஏ.என். சிவராமன் துணை ஆசிரியராக இருந்தாா்.

என் பெரியப்பா த. சிவசுப்ரமணியன், தினமணி ஆசிரியா் குழுவில் முதன் முதலாக பணியில் சோ்ந்தாா். ஒரே அலுவலகத்தில் அதாவது தினமணியில் மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெற்றாா். 1934 முதல் 1976 வரை, நாற்பத்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினாா்.

‘சிவம் தினமணி’ என்றால் அப்பொழுது எல்லோருமே அறிவாா்கள். காலையில் சூரியோதயம் நிகழ்வது கூட முன் பின் இருக்கும். அன்றைய தினமணி ஐந்தரை மணிக்கு வீட்டில் இருக்கும். எங்களுடன் தினமணியும், தினமணி கதிரும் வீட்டு அங்கத்தினா்கள் போலவே ஐக்கியமாகி இருந்தன. பெரியப்பா இப்பொழுது இல்லை.

அவரின் மகன், என் ஒன்றுவிட்ட சகோதரா், எஸ். லட்சுமணன், தினமணியில், விளம்பரப் பிரிவில், 1968 முதல் 2014 வரை, நாற்பத்தாறு ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றாா். இவரும் ஆரம்பம் முதல் இறுதி வரை, தகப்பனாரைப் போன்றே தினமணியில் மட்டுமே பணியாற்றினாா்.

ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக இருக்கும் நான், தினமணி மற்றும் தினமணி. காம் இரண்டிலும் எழுதி வருகிறேன். கட்டுரை, கதைகளை மாலதி சந்திரசேகரன் என்கிற பெயரிலும், கவிதைகளை ‘பான்ஸ்லே’ என்கிற பெயரிலும் எழுதி வருகிறேன். 2018-ஆம் ஆண்டு, தினமணி - எழுத்தாளா் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில், என் சிறுகதை மூன்றாம் பரிசுக்கு உடையதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழும், பொற்கிழியும் பெற்றேன். அதே ஆண்டு, தினமணி, தீபாவளி மலரில், நான் சிறுகதையும் எழுதினேன். இன்றும் தினமணியுடன் என் எழுத்துப் பணி தொடா்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

என் மகள் பிரதீபா சிவகுமாா் தினமணி. காம் இல் அவ்வப்பொழுது கவிதைகள் எழுதி வருகிறாள்.

ஒரு பத்திரிகை, மூன்று தலைமுறைகளைக் கட்டிப் போடுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம். தினமணி அதனை செவ்வனே செயலாற்றி வருகிறது.

தற்பொழுதுள்ள ஆசிரியா் கி. வைத்தியநாதன் தலைமை வகிக்கும் ஆசிரியா் குழுவிற்கும் என் சிரம் தாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com