சவப்பெட்டிகளின் நாட்டில் சாவுகள் மிக அதிகம் : துயரத்தில் இத்தாலி

இத்தாலியில் மிலன் நகரிலிருந்து கிழக்கே ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கிறது கொகாலியோ.  மார்ச்சில் இந்த ஊரின் மக்கள்தொகையில் மூன்றிலொரு பங்கு இல்லாமலாகிவிட்டது. இறப்புச் சான்றிதழ்கள்தான் இப்போது மிச்சம்.
சவப்பெட்டிகளின் நாட்டில் சாவுகள் மிக அதிகம் : துயரத்தில் இத்தாலி

இத்தாலியில் மிலன் நகரிலிருந்து கிழக்கே ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கிறது கொகாலியோ.  மார்ச் மாதத்தில் இந்த ஊரின் மக்கள்தொகையில் மூன்றிலொரு பங்கு இல்லாமலாகிவிட்டது. இறப்புச் சான்றிதழ்கள்தான் இப்போது மிச்சம்.

ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 24 பேர் இறந்துவிட்டனர். அருகே லோடி நகரிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 38 பேரும் உயிர் பிழைக்கவில்லை. இவையெல்லாம் தனியொரு சம்பவம் அல்ல. நாடு முழுவதும் இப்படித்தான் நடந்திருக்கிறது.

இத்தாலியின் அதிகாரப்பூர்வமான சாவு எண்ணிக்கை, உலகிலேயே மிகவும் அதிகம், 13,155. ஆனால், இந்த எண்ணிக்கையோ ஒரு பகுதி மட்டும்தான். ஏனென்றால் இந்த மருத்துவமனைகளில் இறந்தவர்களைப் போல எவ்வளவோ பேர் மருத்துவமனைக்கே வரவில்லை. கணக்கும் இல்லை. இவர்களில் எவருக்கும் நோய்த் தொற்றுப் பரிசோதனைகூட செய்யப்படவில்லை.

இத்தாலியில் மிகவும் மோசமான பகுதிகளைப் பார்க்க, இந்த நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வேண்டும் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் தெரிவிக்கிறது. 

வென்டிலேட்டர்கள், பிற உயிர்க் காப்பு சாதனங்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தங்களுடைய நோயாளிகளைக் காப்பாற்றப் பல மருத்துவமனைகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஏராளமானோர் கணக்கிலேயே வராமல், குறிப்பாக, முதியவர்கள் ஆங்காங்கே இறந்துவிட்டனர்.

நல்ல சிகிச்சையளித்தால் காப்பாற்றிவிடக் கூடும்  என்ற நிலையில் இருந்தவர்கள்கூட போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் கைவிடப்பட்டு உயிர் துறந்துள்ளனர். 

"அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாகவே உயிரிழப்புகள் இருக்கலாம். இதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது. மக்கள் இறந்தார்கள், அவர்களுக்குப் பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை, ஏனென்றால் அதற்கு நேரமும் இல்லை, போதுமான வசதிகளும் இல்லை" என்கிறார் கொகாலியோ நகரின் துணை மேயர் இஜீனியோ பொஸாட் தெரிவித்தார்.

இத்தாலியில் கரோனா பரவிய வேகத்துக்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவதேகூட இயலாத ஒன்றாகிவிட்டது.

ஒட்டுமொத்த மக்களையும் ஊரடங்கிற்குள் கொண்டுவந்து மூன்று வாரங்களுக்குப் பிறகே இத்தாலியில் கரோனா பரவல் ஓரளவில் கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும்கூட தொற்று தொடங்கியதுடன் மட்டுமின்றி இன்னமும் தீவிரமாக இருக்கும் லம்போர்டி பிராந்தியத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்னரே முழுவீச்சில் தொற்று பரவிவிட்டது.

பெர்காமோ, பிரெஸியா ஆகிய இரு நகர்களும் மிக மோசமான நிலைமையில் இருக்கின்றன. இத்தாலியின் துயரத்துக்கு அடையாளங்களாக இவை மாறிவிட்டன.

இந்த இரு நகர்களில் மட்டும் மார்ச் மாத உயிரிழப்புகளாக அரசு அறிவித்ததைப் போல இரு மடங்கு உயிரிழப்புகள் நேர்ந்திருக்கின்றன.

கரோனா மட்டுமின்றிப் பிற உடல் நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டவர்களும்கூட தேவையான சிகிச்சை கிடைக்காமல் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

கொகாலியோ நகரில் கடந்த ஓராண்டு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 85 மட்டுமே. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 56 பேர் இறந்துள்ளனர். ஆனால், இந்த இறப்புகளில் 12 ஐ மட்டுமே கரோனா சாவுகள் என அரசு அறிவித்துள்ளது.

"உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகம்தான். அவர்களுக்காக துக்கப்படுகிறோம். அவர்கள் ஏன் இறந்தார்கள் என்பது நன்றாகவே எங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிடும் பொஸாட், "இது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை" என்கிறார்.

இதேபோல, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைகூட மிகவும் குறைவாகத்தான் கூறப்படுகிறது. இதுவரை 1.10 லட்சம் எனக் கூறப்பட்டாலும் அறிகுறிகள் இருக்கும் பலருக்குப் பரிசோதனையே செய்ய முடியவில்லை.

பாதிக்கப்பட்டோரில் 1 முதல் 3 சதவிகிதம் வரை  இறப்புகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டாலும் உண்மையில் இந்த விகிதம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனியொருவர் இறந்தால் மரணம், கூட்டமாக இறக்கும்போது வெறும் எண்ணிக்கை என்பார்கள். ஆனால், இத்தாலியில் எண்ணிக்கையில்கூட இடம்பெற முடியாமல் போய்விட்டார்கள் பல்லாயிரக்கணக்கானோர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com