திருப்பூர் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 15 பெண்கள் உள்பட 18  பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்திலிருந்து தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 15 பெண்கள் உள்பட 18  பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், திருப்பூர் மாநகரப் பகுதிகளில் 3 பேரும், அவிநாசி பகுதியில் 3 பேரும், திருப்பூர் ஊரகப் பகுதியில் 7 பேரும், உடுமலையில் 2 பேரும், தாராபுரத்தில் ஒருவரும், பல்லடத்தில் 2 பேரும் அடங்குவர். 

இதனிடையே, இவர்கள் வசித்து வந்த பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வசித்து வந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவதாகவும், அந்தப் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாநில அளவில் திருப்பூர் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

மேலும் காய்ச்சல், சளி போன்ற கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். திருப்பூரில் இருந்து லண்டன் சென்று வந்த 40 வயது தொழிலதிபருக்கு முதன் முதலில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த மாதம் தில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 69 பேர் திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில், கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 61 பேர் கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

லண்டன் சென்று திரும்பிய தொழிலதிபர் குணமடைந்து சில நாள்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 3 ஆவது இடம் 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சென்னை 208 பேருடன் முதலிடத்தையும், கோவை 106 பேருடன் இரண்டாவது இடத்தையும், திருப்பூர் 78 பேருடன் 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com