ஊரடங்கு: நிர்பந்திக்கப்பட்ட பேரமைதிக்கான ஓய்வுக்காலம்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது - இரண்டுமில்லாத நடுத்தர வர்க்கத்தினருக்கு இது வரமா, சாபமா?
ஊரடங்கு: நிர்பந்திக்கப்பட்ட பேரமைதிக்கான ஓய்வுக்காலம்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடையுத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீடித்து வருகிறது - இரண்டுமில்லாத நடுத்தர வர்க்கத்தினருக்கு இது வரமா, சாபமா?

சிறிய சாதாரண விற்பனை நிலையங்கள் தொடங்கி, விளம்பரங்களால் தங்களைப்  பெரிய நிறுவனங்களாக அறிமுகப்படுத்திக் கொண்ட பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. முக்கியமாக கூட்டம் அதிகம் கூடும் வியாபார நிறுவனங்களை மூடச் சொல்லியும் ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்க வேண்டும் என்கிற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் சில கட்டுப்பாடுகளுடன் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், எப்போதும் பரபரப்புடன் இயங்கும் மருத்துவமனைகளை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே தடையுத்தரவு காலத்தின் போது வீடுகளைவிட்டு வெளியேறக் கூடாது, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும், வீடுகளை விட்டு வெளியேறினாலும் சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதிகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத கட்டாய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விலை சற்றே உயர்ந்து சாதாரண குடிமக்களின் தினசரி செலவு உயர்ந்து கொண்டே இருக்கிறது. இருந்தபோதிலும் சபித்துக் கொண்டே பொருள்களை வாங்க வேண்டியிருப்பதால் பொருள்கள் வாங்குவதற்கு சமூக இடைவெளிகளுடன் கூட்டம் காத்துக் கிடக்கும் காட்சிகளைக் காண முடிகிறது.

காரணங்களின்றி வீடுகளை விட்டு வெளியே வரும் மக்களைக்  காவல்துறையினர் அணுகும் முறை மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. தடையுத்தரவுக் காலத் தொடக்கத்தில் சில மாவட்டங்களில் காவல்துறையினர் தங்களது தீராத கோபத்துக்கு சாதாரண சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் தவிர அனைவரையும் பொது இலக்காக்கினர். சில பகுதிகளில் ஆடம்பர கார்களில் குடும்பத்துடன் உலா சென்ற பணக்காரர்களைக் கீழே இறக்கிப் பெண்களைப் பார்க்க வைத்து அடித்து அனுப்பி வைத்ததும் நடந்தேறின.

காவல்துறையின் இந்த அணுகுமுறை பொதுநல ஆர்வலர்கள் விடுத்த எச்சரிக்கையின் காரணமாக, குச்சி பறக்கும் காட்சிகள் குறைந்து தோப்புக்கரணங்களூம், குட்டிக்கரணங்களும், வெய்யில் நிற்க வைத்த விழிப்புணர்வு பிரசாரமும் என வேண்டாவெறுப்பாக நடத்திக் காட்டி வருகின்றனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்த பதற்றங்கள் பல பேரைத்  தவிப்புக்குள்ளாக்கி அவர்களது ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்த் தகவல்கள் காரணமாக அமைந்தன. அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வயதானவர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உயிர்ப் பயத்தை அவர்களுக்கு அடையாளம் காட்ட வைத்தது. குறிப்பாக, ஆதரவின்றித் தனிமையில் வசிக்கும் முதியோர் தம்பதியினர் வெகுவாக மன அழுத்தத்திற்கு உள்ளாகினர். தங்களைக் கவனிக்க ஆளில்லை என்பதை கரோனா மிகவும் தாமதமாக உணர வைத்து அவர்களுடைய சோகம் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

நாள்தோறும் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பரப்பப்படும் தகவல்கள், செய்திகள் வழியாக வெளியாகும் நோயின் தகவல்கள் என அனைத்தையும்  பார்த்து, வழக்கமாகக் குழப்பிக் கொள்ளும் மக்கள், வழக்கத்தை விடவும் அதிகமாகக் குழம்பி நகரங்களில் ராணுவ ஆட்சி வந்து விட்டதாமே என்கிற ஆச்சரியக் கேள்விகளை அடுக்குகின்றனர்.

தேர்தல் காலங்களில் அணிவகுப்பு சென்ற ராணுவக் காட்சிகள் வாட்ஸ்ஆப்களில் பிறரைப் பயமுறுத்தி வைக்கப் பரவசத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது பலருக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தின. இவற்றையெல்லாம் யார் அனுப்புகிறார்கள், எதற்காக அனுப்புகிறார்கள், யாரைப் பயமுறுத்த, யாரை மகிழ்ச்சிப்படுத்த என்று தெரியாமல் ஒரு முகம் தெரியாத கூட்டம் மக்களைப் பயத்திற்குள்ளாக்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள் இருந்த போதிலும்  இதுபோன்ற சமூக அத்துமீறல்கள் தொடர்கிறது. இதுபோன்ற நேரங்களில் உரத்துக் கூறும் உண்மைகளை விடவும் சப்தம் குறைவாகப் பேசும் பொய்களை நம்புவது இயல்பான விஷயமாக உள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

தாத்தா அல்லது அவர்களின் முன்னோர் காலத்தில் இதுபோன்ற நோய் பரவலைத் தடுப்பதற்காகத் தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது, பலரும் தங்களது வீடுகளை விட்டு, நகரங்களை விட்டு வெளியேறிய வரலாறுகளை எல்லாம் நாம் கேட்டதுண்டு, படித்ததுண்டு.

ஆனால், இந்தத்  தடையுத்தரவுக் கால அனுபவம் நமது தலைமுறைக்கு மிகவும் புதியது. சாதாரணமானவர்கள் பலரும் வீடுகளில் தஞ்சம் என்பது காணக் கிடைக்காத அரிதான விஷயம். ஆனால், பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தபோதிலும் சிலருக்கு இந்த தடையுத்தரவுக் காலம் நிர்பந்திக்கப்பட்ட பேரமைதிக்கான ஓய்வுக் காலமாகவே அமைந்திருக்கிறது.

கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் செல்ல வேண்டிய அவசியம், அவர்களின் குழந்தைகள் கல்விக்காக வெளி மாவட்டம் அல்லது வெளிநாடுகளில் படிக்க வேண்டிய கட்டாயம், கணவன் வெளிநாட்டிலும் குடும்பம் உள்நாட்டிலும் வாழும் நிலை, தனித்து விடப்பட்ட முதியோர் பொறுப்பில் விடப்பட்ட குழந்தைகள், கணவன் - மனைவி இருவரும் வெளிநாடுகளில் பணி - இவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக இணைப்பது ஒரு திருமணமோ, இறப்போ அல்லது பண்டிகைகளாகவோதான் இத்தனை காலம் இருந்து வந்திருக்கிறது.

ஆனால் இப்போதைய தடையுத்தரவுக் காலம் இவர்களது விடுமுறையை ஒரே கோடாக இணைத்து அதனை மிகவும் இயல்பாக விரும்பி ஏற்க வைத்துள்ளது.  இவர்கள் எதிர்பார்க்காத, கனவிலும் நடக்காத  சாத்தியக் கூறுகளை நோய்த்தடுப்பு நடவடிக்கை சாதித்துக் கொடுத்துள்ளது.

இந்த விடுமுறைக் காலத்தை இவர்கள் மிகவும் கொண்டாட்டமான உற்சாகத்திற்கான வாய்ப்பாக அனைவரும் குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். தடையுத்தரவுக் காலத்தை 100 சதவிகிதம் கடைப்பிடிப்பவர்களாகக்கூட இவர்கள் மட்டுமே இருக்க முடியும்.

போதுமான பணம், பொழுதுபோக்கத் தேவையான வசதிகள், வாடகை செலுத்த வேண்டுமென்கிற கட்டாயமில்லாத வீடுகள் என இவர்களின் ஓய்வுக்காலத்திற்காகவே கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே கருதி விடுமுறைக் காலத்தை அவர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

இந்தத் தடையுத்தரவுக் காலம் பலருக்குச் சிறையாக நீடித்து வரும் நிலையில் சிலருக்குச் சுற்றுலாவின் காலமாக அமைந்திருப்பது வித்தியாசமான உணர்வுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com