முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
திருப்பூரில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து விற்பனை செய்வதாகப் புகார்
By DIN | Published On : 19th April 2020 07:21 PM | Last Updated : 19th April 2020 07:21 PM | அ+அ அ- |

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து விற்பனை செய்வதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், பெரியகடை வீதியைச் சேர்ந்த காஜா, கே.எம்.சி.காலனியைச் சேர்ந்த சித்திக் ஆகிய இருவரும் காங்கயம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றுள்ளனர். பின்னர் இருவரும் அந்த பங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டுச் சென்றுள்ளனர். சிறிது தொலைவு சென்றதுமே இரு வாகனங்களும் நின்றுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்புக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மெக்கானிக் வாகனத்தை சோதனை செய்ததில் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சம்மந்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் சரிவர பதில் அளிக்காததால் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் காவல் துறையினர் ஒருவரும் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று விசாரணை நடத்திய பிறகு வாட்டர் கேனில் பெட்ரோல் பிடித்துப் பார்த்தனர். இதில், ஒரு லிட்டர் பெட்ரோலில் கால் லிட்டருக்கு மேல் தண்ணீர் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.