புலிகளுக்கு எதிரான போரில் பிரிட்டிஷ் கூலிப்படை: இந்தியா பயன்படுத்தியதாகத் தகவல்

இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரிட்டிஷ் விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகள்

இலங்கையில் 1980-களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரிட்டிஷ் விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பிரிட்டிஷ் கூலிப் படையினர் இருப்பதைப் பொதுவெளியில் இந்திய உயர் அலுவலர்கள் கண்டித்துவந்தபோதிலும், புலிகளுக்கு எதிரான தங்களுடைய தாக்குதலில் உதவுவதற்காகப் பணம் கொடுத்து இவர்களின் உதவியை இந்திய அமைதிக் காப்புப் படையினர் பெற்றனர் என்று அந்த நூல் தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதியுள்ள 'கீனி மீனி: தி பிரிட்டிஷ் மெர்சினரீஸ் ஹூ காட் அவே வித் வார் கிரைம்ஸ்' என்ற இந்த நூலில் இலங்கைப் போர் பற்றிய மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

1987-ல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தன ஆகியோர் இடையே  இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து, நான்கு மாதங்கள் பிரிட்டிஷ் கூலி பைலட்களின் சேவையை ரகசியமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மண்ணுக்கு இந்திய அமைதிக் காப்புப் படை வருவதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் பிரிட்டிஷ் கூலிப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீனி மீனி என்பது ரகசிய நடவடிக்கைகளைக் குறிக்கும் அரபுச் சொல்.   கீனி மீனி சேவைகள் (கேஎம்எஸ்) என்ற இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தை  பிரிட்டிஷ் சிறப்பு விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கர்னல் ஜிம் ஜான்சன் என்பவர் நடத்தி வந்தார். யேமன், ஓமன் போன்ற நாடுகளில் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார்.

பிரிட்டனின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜெயவர்த்தன, தீவிரவாதத்துக்கு எதிரான இவருடைய நடவடிக்கைகள் பற்றி அறிய வந்ததும் இலங்கைக்கு அழைத்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ இலங்கைக்கு உதவ முன்வராத நிலையில், கீனி மீனி சேவைகள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிரான போரில் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதை பிரிட்டன் அனுமதித்துள்ளது.

கடைசி பைலட் விலக்கிக் கொள்ளப்பட்ட (1987) நவம்பர் 27 வரையிலும் இலங்கை விமானப் படை விமானங்களில் கேஎம்எஸ் பைலட்கள் பறந்து கொண்டிருந்தார்கள் என்று கர்னல் ஜான்சன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று தந்தியொன்றில் கொழும்பிலிருந்த பிரிட்டிஷ் ஹை கமிஷனர் டேவிட் கிளாட்ஸ்டோன் குறிப்பிட்டுள்ளதையும் மில்லர் எடுத்துக்காட்டியுள்ளார்.

அண்மையில் வெளிவந்த இந்த நூலில் மேலும் எண்ணற்ற விவரங்களை பத்திரிகையாளர் பில் மில்லர் வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com