இதயம் இடம் மாறியதே...

காதல் என்பது குறிப்பிட்ட வயதில் நிகழக்கூடிய இயல்பான ஒன்று. அந்த உணர்வைப் பருவத்தைக் கடந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க முடியும்.
இதயம் இடம் மாறியதே...


காதல் என்பது குறிப்பிட்ட வயதில் நிகழக்கூடிய இயல்பான ஒன்று. அந்த உணர்வைப் பருவத்தைக் கடந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க முடியும். காதலிக்க வேண்டிய பருவத்தில் முப்பாலருக்கும் தான் பேச நினைப்பதைத் தயக்கமின்றிப் பேச அவர்களுக்கு வசதியான ஒரு துணை தேவைப்படுகிறது. அவர்கள் பகிர்ந்துகொள்ளக் கூடிய கருத்தை, சரி தவறெனத் தயக்கமின்றி விவாதித்துக்கொள்வதைத் தங்களுக்கான அங்கீகாரமாகக் கருதுகின்றனர்.

உறவுமுறை தொடங்கி, உணர்வு முறை வரையில் மனிதர்கள் தான் பரிமாறிக்கொள்வதற்கு அன்றாடங்களின் அத்தனை அசைவுகளும் இடமளித்தாலும் அதற்கென ஒரு நாளைக் கொண்டாடித் தீர்ப்பதை மனிதர்கள் விரும்பவே செய்கின்றனர். அதை நாம் ஒருபோதும் லேசாக மதிப்பிட முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் உணர்வு நிலைக்குத் தக்கபடிக் கொண்டாடுவதை நாம் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கடந்துவிடலாம். இதுதான் ஓர் ஆரோக்கிய சமூகத்திற்கு நல்லது.

உலகம் முழுவதிலும் அந்தந்த நாடுகளுக்கென்று தனித்த கலாசாரமோ பண்பாடுகளோ இருந்தாலும் ஏழு நாடுகள் மட்டுமே காதலர் தினக்  கொண்டாட்டங்களை எதிர்க்கின்றன. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடும் அந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பது கவலைக்குரியது. 

இங்கே நிகழ்வதெல்லாம் ஆரோக்கியமான எதிர்ப்பு வடிவமென்று ஒருபோதும் சொல்வதற்கில்லை. காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாய்க்குத் தாலி கட்டுவதெல்லாம் சமூகத்தின் நோய்க் கூறு. அன்றைய நாளில் முப்பது முப்பத்தைந்து வயதிற்குட்பட்ட ஒரு சகோதரனும் சகோதரியும் தங்களது வீட்டிலிருந்து பத்திரமாக வெளியே சென்றுவர முடியாத அபாயகரமான சூழல் நிலவுகிறது. இந்தக் கூட்டுச் சமூகத்தில் இப்படியான எதிர்ப்பு நிலையைக்  கேள்விகேட்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

காதலித்ததற்காக இந்த மண்ணில் கொல்லப்பட்ட உயிர்கள் கணக்கிலடங்காதவை. அவர்கள் கொல்லப்பட்டதற்கு சாதியும் மதமும்தான் காரணம். காதலும் காரணமென்றால் அந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே. 

காதலை வெறும் உணர்வு சார்ந்த பார்வையில் மட்டும் பார்க்க முடியாது. இந்தியாவைப் பொருத்தவரையில், குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அது பெண் விடுதலைக்கான கருவியாக இருந்திருக்கிறது. இந்தப் பந்தத்தைக் கொளுத்திய வகையில் நாம் பெரியாரை வணங்க வேண்டும்.

நீங்கள் எதன் மீது அடக்குமுறையைத் திணிக்கிறீர்களோ அது வேறொரு பக்கம் வெடித்துச் சிதறும். இது அறிவியல். இப்படியான அடிப்படைவாதிகளின் போராட்டங்களால் இந்த நாள் இன்னும் தீவிரமாகக் கொண்டாடப்படுமே ஒழிய குறையாது.

கடந்த இருபது வருடமாக இந்த நாள் சமூக நீதிக்கான நவீன போராட்ட வடிவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது இந்த மண்ணிற்குரிய தனித்துவம். இதை அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடலூரைச் சேர்ந்த கவுதம்ராஜ் என்பவரின் மனைவி கோகிலா, பிரசவத்தின்போது எதிர்பாராதவிதமாக மூளைச் சாவடைந்துவிடுகிறார். அத்தனை துயரங்களுக்கிடையிலும் கவுதம்ராஜ், தன் மனைவியின் இதயத்தைக் காதலர் தினத்தன்று தானமாகக் கொடுத்துவிடும்படி மருத்துவரிடம் கோரிக்கை வைக்கிறார். இத்தனைக்கும் இவர்களது திருமணம் காதல் திருமணமல்ல. நிச்சயிக்கப்பட்டதுதான். காதலர் தினத்தை மரியாதைப்படுத்த இதைவிட வேறொரு சம்பவம் வேண்டுமா என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com