நல்வழித் திருப்பிய காதல் திரைப்படம் ஒருதலை ராகம்

40 ஆண்டுகள் கழிந்த பின்னரும் காதல் மொழி பேசி  நல்லவழி காதல் திரைப்படங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த ஒருதலை ராகம் காதலர்களுக்கான திரைப்படம் என்பதுதான் உண்மை.
நல்வழித் திருப்பிய காதல் திரைப்படம் ஒருதலை ராகம்

காதல் திரைப்படங்களுக்கு எப்போதும் ஒருவித பூரிப்பான நல்லாதரவினை வழங்கிவந்துள்ளனர் தமிழ் ரசிகர்கள்.

அம்பிகாவதி காலம் தொடங்கி காதல் திரைப்படம் வரை தொடர்ந்து தமிழ்ப்பட ரசிகர்கள் காதலுக்கு மரியாதை கொடுத்து வருகிற வகையைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆனால் அவர்களையும் புல்லரிக்க வைத்த காதல் திரைப்படத்தை இப்படியும் மிகவும் எளிமையாக, ஆடம்பரமற்ற கதாநாயகர்களைக் கொண்டு, வன்முறையற்ற வில்ல கதாபாத்திரங்களைக் கொண்டு காதல் அனுபவத்தை கச்சிதமாகத் தர முடியும் என்று நிரூபித்துக்காட்டியது ஒரு திரைப்படம்.

இதுபோன்ற திரைப்படத்தை வழங்க முடியுமா, திரையுலகில் கோலோச்சி வரும் பிரபல இயக்குநர்களுக்கு இந்தத் துணிச்சல் வருமா என்கிற கேள்வி, திருப்பத்தைத் தந்தது என்றால் அது ஒருதலை ராகம் திரைப்படத்துக்கே பொருந்தும்.

கடந்த 1980ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானது ஒருதலை ராகம். பெரிய திரைப்பட நடிகர்களோ அல்லது அறிமுகமான இயக்குநர் பட்டாளங்களோ அதில் பங்கேற்கவில்லை.

ஒருதலை ராகத்தின் இயக்குநர்களாக டி.ராஜேந்தர் மற்றும் ஈ.எம்.இப்ராஹிம் என்கிற பெயர்களும், இசை அமைப்பாளர்களாக டி.ராஜேந்தர் மற்றும் ஆகுல அப்பாலராஜி என்கிற பெயர்களும், தயாரிப்பாளராக ஈ.எம்.இப்ராஹிம் என்கிற பெயரும் இடம் பெற்றிருந்தன.

அதேபோல் திரை நாயகிகள் மற்றும் நாயகர்களாக ரூபாதேவி என்கிற புதுமுகமும், சங்கர் பணிக்கர் என்கிற மலையாள புதுமுகமும், உஷா, சந்திரசேகர், ரவீந்தர், தும்பு ஆகியோர் பெயர்களும் படத்தின் டைட்டிலில் இடம் பெற்றிருந்தன.

அனைவரும் புதிது, புதிய வழிக் காதல், புதுவகை பாணியிலான திரைப்படம் என்பதால் சந்தேகத்தின் காரணமாக மிகவும் குறைவான திரையரங்குகளிலேயே ஒருதலை ராகம் வெளியிடப்பட்டது.

படம் வெளிவந்து சில நாள்களில் படத்தின் பாடல்களும், கல்லூரிக் கலாட்டாக்களும், ஆபாசமற்ற காதல் காட்சிகள், ஒருவரை ஒருவர் தொடாமல் கண் நிமிர்ந்து பேசிக் கொள்ளாத காட்சிகள், வன்முறையற்ற வில்லத்தனம் ரசிகர்களுக்கு இனம் புரியாமல் சட்டென வெகுவாகக் கவர்ந்தன.

இதனைத் தொடர்ந்து படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழகத்தின் திருவிழாக்கள், அரசியல் மேடைகள், வீட்டு விசேஷங்கள் என பட்டிதொட்டிகளில் வெகுவேகமாகப் பரவின.

இதனால் ஒருதலை ராகத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. திரைப்படத்தில் கல்லூரிக்கு ரயிலில் செல்லும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், கல்லூரியில் நிகழும் ராக்கிங் காட்சிகள், மாணவ மாணவியர்களின் கொண்டாட்டங்கள், கல்லூரி மாணவ,மாணவியர்களிடையே நிகழும் மெல்லிய காதல் உணர்வுகள் என அனைத்தும் திரை ரசிகர்களுக்கு மிகவும் புதிதாகத் தோன்றியது.

தொட்டுப் பேசி, கட்டிப்பிடித்து, மழையில் நனைந்து, காமரசம் மிகுந்த காதல் புரியும் படங்கள் வரிசையில் பழைய காதல் திரைப்படங்களின் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிப் புதிய மாதிரியாக இருந்த ஒருதலை ராகம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

காதலிக்காக ஏங்கும் காதலன் அவர் தலை தூக்கி தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டாரா என்கிற எதிர்பார்ப்புக் காட்சிகள், அவர்கள் காதல் வயப்பட்டுள்ளனர் என்பது நாயக, நாயகி நண்பர்களுக்குத்  தெரிந்தும் காதலி வலுக்கட்டாயமாகத் தனது காதலை வெளிப்படுத்த மறுக்கும் காட்சிகள் ரசிகர்களின் மனநிலையில் புதுவகைக் காதலை உணர்த்துபவையாக இருந்தது.

குறிப்பாக ஒருதலை ராகத்தின் பாடல்களான 4.49 நிமிட எஸ்.பி. பாலசுப்ரமணியனின் குரலில் வாசமில்லா மலரிது பாடலும், காதலியை நினைந்து வாடும் காதலன் குரலாக பி. ஜெயச்சந்திரன் குரலில் 5 நிமிட பாடலான கடவுள் வாழும் கோவிலிலே பாடலும், மாணவர்களின் கொண்டாட்டப் பாடலான  மலேசிய வாசுதேவன் குரலில் கூடையிலே கருவாடும், டி.எம்.செளந்தரராஜனின் குரலில் நான் ஒரு ராசியில்லா ராஜா பாடலும், தாலாட்டுப் பாடலைப் போல காதலைச் சொல்லும் பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலில் இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்களும் தமிழகத்தின் எட்டுத் திக்கும் பரவின.

மேலும் முதன்முறையாகத் திருநங்கைகள் பாடலில்  இடம்பெற்ற திரைப்படமாகவும் ஒருதலை ராகம் இடம் வகித்தது. கல்லூரி காத்திருத்தல், கல்லூரி கலாட்டா, கொண்டாட்டம், படம் முழுவதும் நிரம்பியுள்ள மென்சோகம் என அனைத்து வகை உணர்வுகளையும் மிக நேர்மையாக வெளிப்படுத்தியது ஒருதலை ராகம்.

இதன் வெற்றி அடுத்ததாகத் தொடர்ந்து காதல் மொழி பேசும் படங்களாக இதே வரிசையில் மென்மைக் காதல் சொல்லும் திரைப்ப்டங்கள் வெளி வரத் தொடங்கின.

காதல் வரிசைத் திரைப்படங்களுக்கு மீண்டும் புதிய புத்துயிர் ஊட்டியது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒருதலை ராகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

காதல் வெளிப்படும் வெற்றி பெறும் என்று அனைவரையும் எதிர்பார்க்க வைத்து காதல் ஏற்படுத்திய ரயில் பயணத்தில் உச்சகட்ட காட்சியில் காதலை ஏற்க மறுத்த காதலி காதலனைத் தேடி வருகிறபோது காதலனின் நோய் அவரை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் முடிவு அனைவரையும் திகைக்க வைத்தது.

இந்த முடிவிற்கு ரசிகர்கள் யாரும் எவ்வித எதிர்ப்போ, மறுப்போ சொல்லாமல் காதலை ஏற்க மறுத்துவந்த காதலிக்கான தீர்ப்பாக இது அமையட்டும் என்று ஏற்றுக் கொண்டனர்.

40 ஆண்டுகள் கழிந்த பின்னரும் காதல் மொழி பேசி  நல்லவழி காதல் திரைப்படங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த ஒருதலை ராகம் காதலர்களுக்கான திரைப்படம் என்பதுதான் உண்மை.

காலத்தைத் தாண்டி இன்றும் அந்தத் திரைப்படம் புதியவர்களால் எடுக்கப்பட்டு திரையில் சாதனைகளைச் சாதித்துக் காட்டி இப்போதும் எடுத்துக்காட்டு திரைப்படமாக விளங்கி வருகிறது ஒருதலை ராகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com