பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா?

நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள், ஜன. 31, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் விருப்ப ஓய்வு
பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு -  தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா?


சென்னை: நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில்  முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள், ஜன. 31, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

இவர்களில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர்.

நாடு முழுவதுமுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இந்தப் பெரும் விருப்ப ஓய்வுக்குப் பிறகு இவர்களில் 75,217 பேர் மட்டுமே மிச்சமிருப்பார்கள். பாதிக்கும் அதிகமானோர், சுமார் 51 சதவிகிதம்,  பணியிலிருந்து விலகுகின்றனர்.

தமிழகத்தில் சென்னைத் தொலைபேசி வட்டத்தில் 2,571 பேரும் சென்னை தவிர்த்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் 5,308 பேரும் ஓய்வு பெறுகின்றனர்.

இதேபோல, மும்பை மற்றும் தில்லி தொலைபேசி சேவைகளைக் கவனிக்கும் அரசுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனத்திலிருந்து 14,378 ஊழியர்கள் பணியிலிருந்து 'விரும்பி'  விலகுகின்றனர்.

அரசு அணுகுமுறை, நிதிப் பிரச்சினை, தொழில் போட்டி போன்ற எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்று கருதி விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்திருந்தன.

50 மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக ஊழியர்களுக்கு ஒழுங்காக ஊதியம் வழங்கப்படாத நிலையிலும், தாமதமாக வழங்கப்பட்டுவந்த நிலையிலும் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் பற்றிய அச்சத்தின் காரணமாகவும் ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர்.

டிசம்பர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் காலக்கெடு விதித்திருந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 78,569  பேரும் எம்டிஎன்எல் நிறுவனத்தில் 14,378 பேரும் ஓய்வுக்கான விருப்பத்தைத் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமையுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடும்.

2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல், 2010 முதல் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. எம்டிஎன்எல் கடந்த பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில்தான் நடைபெற்றிருக்கிறது.

ஒருகாலத்தில் தனித் தன்மையுடன் கோலோச்சிக் கொண்டிருந்தது தொலைபேசித் துறை. அவசரமாக இணைப்புப் பெற வேண்டுமானால், ஒற்றைத் தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அளவில் பரிந்துரைக்க வேண்டியிருக்கும். பின்னால் பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) உருவாக்கப்பட்டது. காலமாற்றத்தில் தொலைத்தொடர்புத் துறையில் நடந்த தொழில்நுட்பப் புரட்சியில் எண்ணற்ற தனியார் நிறுவனங்கள் சந்தைக்கு வந்து தேடித் தேடி சேவையளிக்கத் தொடங்கின.

தொழில் போட்டியில் தனியார் நிறுவனங்களே பெரும்பாலும் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை முதலில் பெறத் தொடங்கின. அடுத்தடுத்த நிலைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டது.

பிஎஸ்என்எல்-க்குத் தேவையான நிதி ஆதாரமும் கிட்டவில்லை, தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடவும் முடியவில்லை. அரசின் முடிவுகளும் ஆதரவாக இல்லை.

தொழிலில் தனியாருக்கு இணையாகப் போட்டியிடத் தங்களை அனுமதிக்கவில்லை, செயல்படவும் தூண்டவில்லை என்று இப்போதும் அரசு மீது தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஒரே எடுத்துக்காட்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் 4 ஜி அலைக்கற்றையில் உலவிக் கொண்டிருக்க, பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 3ஜியை வைத்துக்கொண்டுதான் சந்தையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அடுத்துவரும் 3, 4 மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து, பணி முடித்து, மேலும்  10 ஆயிரம் ஊழியர்கள் வரை ஓய்வு பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த மாபெரும் ஊழியர்கள் குறைப்புக்குப் பின் இவ்விரு நிறுவனங்களும் தொழிலில் தனியாருடன் போட்டியிட்டு வெல்லப் போகின்றனவா? அல்லது பாதியளவே ஆள் பலத்துடன், தக்க தொழில்நுட்ப மேம்பாடுகளையும் பெற முடியாமல் இருப்பதையும் இழந்து இல்லாமலாகப் போகின்றனவா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com