அச்சம், அலட்சியம் காரணமாக அநியாயமாகப் போன உயிர்

முதுகுளத்தூர் அருகே மக்களின் அச்சம், அரசு அமைப்புகளின் அலட்சியம் காரணமாக அநியாயமாக இன்று ஓர் உயிர் போய்விட்டது.
அச்சம், அலட்சியம் காரணமாக அநியாயமாகப் போன உயிர்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மக்களின் அச்சம், அரசு அமைப்புகளின் அலட்சியம் காரணமாக அநியாயமாக இன்று ஓர் உயிர் போய்விட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இருக்கிறது தேரிருவேலி ஊராட்சி. இந்தப் பகுதியில் கடந்த இரு நாள்களாக சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர்  சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நாள்களில் சாப்பாடு இல்லாமல் பசி பட்டினியாக இருந்திருக்கிறார்.   இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 7 மணிவாக்கில் தேரிருவேலி நியாயவிலைக் கடைக்கு அருகே பசி மயக்கத்தில் கிடந்த அவர்,  உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளார்.

உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்படாவிட்டால் இறந்துபோய்விடக் கூடிய நிலை. ஆனால், அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அருகே சென்று உதவ யாரும் தயாராக இல்லை.

முதுகுளத்தூர் பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினரான ஏ. பாசில் அமின், அவருக்குத் தண்ணீர் புகட்டியதுடன், உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் வந்துசேரும் விதமாக இல்லை.

இதனிடையே, கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அவரோ வட்டாட்சியரிடம் சொல்வதாகத் தெரிவித்தாராம். வட்டாட்சியரைக் கேட்டபோது அவரோ ஆட்சியரிடம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டாராம்.

இத்தனைக்கும் அவர் மயங்கிக் கிடந்த இடத்துக்கு அருகேதான்  ஆரம்ப சுகாதார மையம் இருக்கிறது. ஆனால், உதவத்தான் யாருமில்லை.

இவ்வாறு ஒருவர் மாறி ஒருவர்  பேசிக்கொண்டே4 மணி நேரத்துக்கும் மேலே கடந்துவிட்டது. கடைசி வரை ஆம்புலன்ஸ் வந்துசேரவில்லை. பகல் 11.30 மணிவாக்கில் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர், ஒரேயடியாக இறந்தே போய்விட்டார்.

தொலைபேசியில் அழைத்த நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் உறுதியாக அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். அவருக்கு கரோனா பாதிப்பு இருந்ததா என்பது பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால், பசியால் தவித்திருக்கிறார் என்பதைப் பார்த்தாலே தெரிகிறது என்கிறார் பாசில் அமின்.

இறந்தவர்  யார், எவர் என உடனடியாகத் தெரியவில்லை. அவர் அணிந்திருந்த பனியனில்  ராமநாதபுரம் அருகேயுள்ள சத்திரக்குடி அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர் இருக்கிறது. கையில் ஒரு பை வைத்திருக்கிறார். எங்கிருந்து வந்தார், எங்கே செல்ல முனைந்தார் எதுவும் யாருக்கும் தெரியாது.

தேரிருவேலி காவல்துறையினர் வழக்குப் பதிந்து, இறந்து கிடப்பவரைப் பற்றி அருகிலுள்ள கிராமங்களில் விசாரித்து வருகின்றனர்.

எப்படியோ, கரோனா மேலிருக்கும் மக்களின் அச்சத்தாலும்  அரசு அமைப்புகளின் அலட்சியம் காரணமாகவும் அநியாயமாக இவ்வுலகைப் பிரிந்திருக்கிறது ஓர் உயிர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com