சுருக்குமடி வலை பிரச்னை: உயிரை மாய்த்துக் கொள்வோம் என மீனவர்கள் எச்சரிக்கை

சுருக்குமடி வலைக்கு பிரச்சனைக்கு அரசு உரிய தீர்வு காணாவிட்டால் வருகிற 17-ம் தேதி மீனவர்கள் குடும்பத்தோடு கடலில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தீர்மானம் நிறைவேற்றினர்.
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலை பயன்பாட்டாளர்கள் ஆதரவு கூட்டத்தில் பங்கேற்ற 21 கிராம மீனவ தலைவர்கள், பிரதிநிதிகள்.
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலை பயன்பாட்டாளர்கள் ஆதரவு கூட்டத்தில் பங்கேற்ற 21 கிராம மீனவ தலைவர்கள், பிரதிநிதிகள்.

 
சீர்காழி: சுருக்குமடி வலை பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காணாவிட்டால் வருகிற 17-ம் தேதி மீனவர்கள் குடும்பத்தோடு கடலில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இன்று (செவ்வாய்கிழமை) நடந்த 21 மீனவ கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுதொழில் செய்யும் மீனவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருமுல்லைவாசல் - கீழமூவர்க்கரை மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. அதன் பினனர் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை மீன்வளத் துறையினர் வாகனங்களுடன் பறிமுதல் செய்து வந்தனர். இதனால் மீனவர்கள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து போராட்டம், உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் சீர்காழி அருகே திருமுல்லை வாசல் மீனவ கிராமத்தில் நாப்பட்டினம் மாவட்டம் (வடக்கு மற்றும் தெற்கு), காரைக்கால் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவ கிராமங்கள் சார்பில் சுருக்கு மடி வலைக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருமுல்லை வாசல் மீனவ கிராமத் தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டன. சிறு தொழில் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் காலை 6 மணிக்கு மேல் தொழில் செய்ய வேண்டும். சிறு தொழில் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் சுருக்குமடி வலை தொழில் செய்யும் தூரம் காரைக்காலில் இருந்து தெற்கே 6 பாவத்திற்கும் காரைக்கால் வடக்கே 8 பாவத்திற்கு கரை பகுதியிலும் தொழில் செய்யக் கூடாது.

சுருக்குமடி வலை தொழிலை வருடத்திற்கு 5 மாதம் மீன்பிடிப்பது எனவும், மீன்பிடி தடைக் காலத்திற்கு முன்பு 2 மாதம் மீன்படி தடைக் காலத்திற்கு பின்பு 3 மாதம் தொழில் செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்களை மீறி சுருக்குமடி வலை தொழில் செய்து பிடித்துவரும் மீன்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட பொது நிதிகளுக்காக ஒப்படைப்பதோடு, சம்பந்தப்பட்ட விசைபடகு குறைந்த பட்சம் 10 நாள்கள் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்படும். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.

கடந்த 11ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம், ஆர்ப்பாட்டம், தொழில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து வருகிற 15ஆம் தேதி அரசு சுருக்குமடி வலைக்கு ஆதரவாக நல்லதொரு முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

சுருக்குமடி வலைக்கு எதிரான கருத்துக்களையும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அரசு தீர்வு தெரிவித்தால் வருகிற 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை பழையார் முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவர்கள் அந்தந்த மீனவ கிராமங்களில் உள்ள கடலில் குடும்பத்தோடு இறங்கி உயிரை மாயித்துக் கொள்ளும் போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் திருமுல்லைவாசல், நம்பியார் நகர், நாகை ஆரிய நாட்டுத் தெரு, செருதூர், சாம்பந்தன்பேட்டை, நாகூர், காரைக்கால்மேடு, காளிக்குப்பம், மண்டப்பத்தூர், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 21 மீன கிராம தலைவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com