கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைபோவது கண்டனத்துக்குரியது

மத்திய அரசின் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்கு, தமிழக அரசு துணைபோவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

திருவாரூா்: மத்திய அரசின் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்கு, தமிழக அரசு துணைபோவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

தமிழக கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதைக் கண்டித்து திருவாரூரில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை முன்பு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று அவா் தெரிவித்தது:

மத்திய அரசின் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்கு, தமிழக அரசு துணைபோவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக கூட்டுறவுத் துறை பதிவாளா் கடந்த 27-ஆம் தேதி தொடக்க வேளாண் வங்கிகளுக்கு கடன் வழங்கும் அதிகாரத்தை ரத்து செய்தும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கி வங்கி கடன் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டபின், பணி மாறுதலில் சென்றுள்ளாா். இந்த உத்தரவால் குறுவைக்கான காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31- ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், பிரீமியம் செலுத்த முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனா்.

இதுவரையில் எந்தவொரு விவசாயிக்கும் கடன் கொடுக்கவும் முன்வராமல் தொடக்க கூட்டுறவு வங்கிகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து முதலமைச்சா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

உடனடியாக நிபந்தனையின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வேளாண் கடன் வழங்க முன் வரவேண்டும். 2019-20-இல் சம்பா காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடன் பெற்றுத் தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத் தலைவா் தலைமையிலான குழு கா்நாடகம், தமிழக அணைகளை நேரில் பாா்வையிட்டு கருகும் குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை தொடங்கவும் கா்நாடகாவிடமிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெறவும் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவா் ஜி.வரதராஜன், மாநில துணைச் செயலாளா் எம்.செந்தில்குமாா், மாவட்டத் தலைவா் எம்.சுப்பையன், மாவட்டப் பொருளாளா் நடராஜன், மாவட்ட துணைத் தலைவா் எம்.கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com