தம்மம்பட்டி, கெங்கவல்லியில் ஆன்லைன் வகுப்புகளில் தனியார் பள்ளி மாணவர்கள் முனைப்பு

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் தனியார் பள்ளி மாணவ, மாணவியரும், வசதியுள்ள மாணவ, மாணவியரும், கரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் (இணையதள காணொலி) வகுப்புகளில் இணைந்து படிப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பள்ளி மாணவ, மாணவியரும், வசதியுள்ள மாணவ, மாணவியரும், கரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் (இணையதள காணொலி) வகுப்புகளில் இணைந்து படிப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு மார்ச் 25 முதல் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. மே 31 ஆம் தேதியுடன் பள்ளிகள் மூடப்பட்டு 77 நாள்களாகிவிட்டன.

வழக்கமாக ஊரடங்கு இல்லாவிட்டால், இந்தக் காலகட்டத்தில் அனைத்து பள்ளிகளும் தங்கள் மாணவர்களை பல்வேறு விதங்களில் வகுப்புகள் வைத்து, 10, 12 ஆம் வகுப்புகளின் பாடங்களைக் கற்பித்து முடித்து, திருப்புதல் தேர்வுகளை வைத்து, மாணவர்களை பொதுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தியிருப்பார்கள்.

ஆனால் கரோனா ஊரடங்கால்,பள்ளி நிர்வாகங்களால் பள்ளிகளை நடத்த இயலவில்லை. வீடுகளிலேயே முடங்கியிருக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்க நாடுவது ஆன்லைன் வகுப்புகளைத்தான்.

தனியார் பள்ளிகளில் பயிலும் பல மாணவர்களின், பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்து படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.

இதற்காக பைஜுஸ் போன்ற இணையதள செயலி மூலம், ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து படிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு மாதந்தோறும் ரூ. 750 முதல் கட்டணமாக செயலிகள் வசூலிக்கின்றன. மேலும் பல ஆசிரிய, ஆசிரியைகள் ஜூம் செயலி மூலமும் பாடங்களை நடத்திவருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கின்றது.

வசதிமிக்க தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியைகளை வைத்தும் இணையதளம் மூலம் பாடங்களை நடத்திவருகின்றன. இணையதள வகுப்புகள் பெரும்பாலும் பிற்பகலிலோ, மாலை 5 மணிக்கு மேலோதான் நடைபெறுகின்றன. குறிப்பாக நாளொன்று மொத்தம் மூன்று மணிநேரமே நடத்தப்படுகின்றது. இதில் மணிக்கொரு முறை சுமார் 5 நிமிடம் மாணவர்களுக்கு இடைவேளை விடப்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவை ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே. ஆன்லைன் வகுப்புகள் நடத்தி முடித்த பின்னர், அதிலேயே வீட்டுப் பாடங்களும்  தரப்படுகின்றன. அவற்றை அடுத்த நாள் வகுப்புகளின்போது, விடியோவில் காட்ட வேண்டும்.

கரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவில் தொடங்கப்பட்டுவிட்ட இணையதள வகுப்புகள், மாணவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்க உதவுகின்றது. இதற்கு மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் உடனிருந்து உதவி வருகின்றனர்.

இந்த இணையதள வகுப்புகள் ஊரடங்கு முடிந்த பின்னரும் பள்ளி விடுமுறைக்  காலங்களிலும், நள்ளிரவு வரையிலும் நடத்தப்பட்டு, மாணவர்களது தூங்கும் நேரத்தைக் குறைக்க ஏராளமான வாய்ப்பிருக்கின்றது என்கின்றனர் கல்வியாளர்கள்.

இருப்பினும், ஏதோவொரு வகையில் ஊரடங்கு காலத்தின் வரப்பிரசாதமாக இணையதள வகுப்புகள் அமைந்துவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com