திருமலையில் தேவஸ்தான ஊழியர்களுடன் ஏழுமலையான் தரிசனம் தொடக்கம்
By DIN | Published On : 08th June 2020 06:23 PM | Last Updated : 08th June 2020 06:52 PM | அ+அ அ- |

திருப்பதி: திருமலையில் இன்று (திங்கள்கிழமை) முதல் தேவஸ்தான ஊழியர்களுடன் ஏழுமலையான் தரிசனம் தொடங்கியது.
திருமலையில் இன்று தேவஸ்தான ஊழியர்களை வைத்து சோதனை முறை தரிசனம் தொடங்கப்பட்டது. தரிசன வரிசைகளில் தேவஸ்தான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்கு பின் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:
'திருமலையில் 79 நாள்களுக்கு பிறகு இன்று (திங்கள்கிழமை) தரிசனம் தொடங்கப்பட்டது. தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதியில் உள்ள அலிபிரியில் முகக் கவசம் அணிந்து கொண்டு தெர்மல் ஸ்கேன்னிங் முடித்துக் கொண்டு தங்கள் உடமைகள் மற்றும் வாகனங்களை சானிடேஷன் செய்து கொண்டு திருமலையை அடைந்தனர்.
திருமலையில் ஏற்படுத்தப்பட்ட 2 தரிசன நுழைவாயிலிலும் பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. பின்னர் சமூக இடைவெளியுடன் ஊழியர்கள் தரிசனத்திற்கு சென்றனர். ஒரு மணிநேரத்திற்கு 500 பேர் என தரிசனத்திற்கு அனுமதிக்க முடியும் என அலுவலர்கள் தோராயமாக கணக்கிட்டனர். ஆனால் 2 மணிநேரத்தில் 1,200 பேர் தரிசனம் செய்தனர். 3 நாள்கள் சோதனை முடித்த பின்னர் தினசரி குறைந்த அளவில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
மேலும் தரிசனத்திற்கு செல்பவர்கள் க்ரீல்ஸ், கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவற்றை தொடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தரிசன வரிசை, கோயிலுக்குள் உள்ள குடிநீர் குழாய்களும் கையால் தொடாமல் நீர் அருந்தும் விதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அருகாமையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிபிஇ கிட்கள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூடும் அனைத்திடங்களிலும் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட உள்ளது.
மலர் அலங்காரம்
79 நாள்களுக்கு பின் கோயிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடைத்ததால் கோயில் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய அனைத்து கோயில்களிலும் தரிசனம் தொடங்கியது. அங்கும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விழிப்புணர்வுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு சென்றனர்.