காஞ்சிபுரத்தில் பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 13th June 2020 06:43 PM | Last Updated : 13th June 2020 07:26 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதுப்பாளையம் அருகே இன்று (சனிக்கிழமை) பெற்றோர் தொலைக்காட்சியை பார்க்கக் கூடாது என கண்டித்ததால் அவர்களது 13 வயது மகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் நகர் பிள்ளையார்பாளையம் பகுதியில் புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் ஏகாம்பரம். நெசவுத் தொழிலாளியான இவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் உள்ளனர். இவர்களது மகன்களில் ஒருவரான ஜெயச்சந்திரன்(13) தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருந்ததால் அவனது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்த நெசவு நெய்யும் கருவி மீது நின்று கொண்டு கழுத்தில் துணியை மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோரை அச்சுறுத்த முயன்றுள்ளார். அப்போது திடீரென கால் தவறி விழுந்ததில் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த துணி இறுகி கம்பியில் தொங்கினார்.
பெற்றோர்கள் உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அச்சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தந்தை ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.