காரைக்குடி அருகே ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் மாவட்ட கால்நடைப் பண்ணை அருகே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
காரைக்குடி அருகே ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் மாவட்ட கால்நடைப் பண்ணை அருகே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

சுமார் 315 ஏக்கர் பரப்பளவில் உள்ள இப்பகுதியில் கடந்த மே மாதம் ராட்சத ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ஏற்பாடு செய்ததை அறிந்த கானாடுகாத்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து இந்த வளாகத்தில் ராட்சத எஞ்சின் மூலம் ஆயிரம் அடிக்கு ஆழ்துளை கிணறு அமைப்பது எதற்கு?. இப்பகுதியில் தற்போது 150 முதல் 200 அடி ஆழத்திலே கிடைத்து வரும் நிலத்தடி நீருக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டு கிராம மக்களுக்கு தேவையான நிலத்தடி நீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். எனவே இதனை இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்து மனு அளித்தனர். 

இந்த நிலையில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றதால் கிராம மக்கள் இதனை நிறுத்தக் கோரி மீண்டும் புதன்கிழமை மதியம் செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் என். சாத்தையா, ஏஐடியுசி துப்புரவுத் தொழிலாளர் சங்க மாநில உதவிச் செயலாளர் பிஎல். ராமச்சந்திரன் மற்றும் கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தரி, கொத்தமங்கலம், தேத்தாம்பட்டி, சந்தைப் பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 300 பேர் வரை இந்த முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்ததும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தி அதில் முடிவு எடுக்கப்படும் என்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதையும் கூறி அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் சுமார் 20 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com